ஐஏஎஸ் அதிகாரியான பார்வையற்ற பெண்: சாதனை பயணம் எப்படி சாத்தியமானது?

ஐ.ஏ.எஸ் அதிகாரியான பார்வையற்ற பெண் படத்தின் காப்புரிமை L B PATIL

மகாராஷ்டிராவின் பிரஞ்சல் பாட்டில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உதவி ஆட்சித்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இது ஒரு சாதாரண செய்தியாகத் தோன்றலாம். ஆனால், பிரஞ்சல் பாட்டில் வாழ்க்கையைப் பார்த்தால், இதன் முக்கியத்துவம் தெரியும். பிரஞ்சல் பாட்டில் 100% கண்பார்வையற்றவர். நன்கு படித்துள்ள இவர், அடுத்தடுத்து இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உற்சாகத்துடன் புதிய பதவியை ஏற்றுள்ளார்.

பிரஞ்சல் பிறக்கும்போதே பார்வை குறைபாட்டுடன் பிறந்தார். இவர் முழுமையான கண் பார்வையை இழக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அது விரைவிலே நடந்தது. பிரஞ்சல் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு சக மாணவர் பேன்சிலால் பிரஞ்சல் கண்ணில் குத்தினார். பிரஞ்சல் முழுமையான கண் பார்வையை இழந்தார்.

'' பிரஞ்சல் கண் பார்வையற்றோருக்கான பள்ளியில் 5 முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். அது ஒரு உணர்ச்சிமிக்க பயணம். திங்கள் முதல் வெள்ளிவரை பள்ளியிலே தங்கி படிப்பார். வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டுக்கு வருவார். திங்கட்கிழமைகள் மிகவும் வேதனையான நாட்களாக இருந்தது'' என நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பிரஞ்சலில் தந்தை எல்.பி பாட்டில்.

படத்தின் காப்புரிமை L B PATIL

'' 10 வகுப்பு வரை மராத்தி மொழியில் படித்த என் மகள், 11-ம் வகுப்பு முதல் ஆங்கில மொழியில் படிக்க ஆரம்பித்தார். சிரமங்கள் இருந்தபோதிலும், உயர்நிலைப்பள்ளி தேர்வில், தானே மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்'' என்கிறார் எல்.பி பாட்டில்.

உயர்நிலைப் பள்ளி படிப்புக்குப் பிறகு மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்தார் பிரஞ்சல். பார்வை குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கான அனைத்து வசதிகளையும் இந்த கல்லூரி கொண்டுள்ளது. பிறகு தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பில் படித்து முடித்தார். பிஹெச்டி படிப்பதற்கும் பதிவு செய்த பிரஞ்சல், இதற்கிடையே நெட்(NET). சேட்(SET) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.

ஆட்சிப்பணிக்கான பயணம்

குடிமைப்பணிக்கான தேர்வு எழுத முடிவு செய்த பிரஞ்சல், தேர்வு தயாரிப்புக்கான புத்தகங்களைச் சேகரிப்பதில் முதலில் சிரமத்தை எதிர்கொண்டார். பிறகு தனது கணினியில் ஸ்கிரீன் ரீடர் மென்பொருளை தரவிறக்கம் செய்தார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/PRANJAL PATIL

''அந்த மென்பொருள் என் வாழ்க்கையைக் கொஞ்சம் சுலபமாக்கியது. மென்பொருளின் உதவியுடன், செய்தித்தாள்கள் மற்றும் தேர்வுக்கான புத்தகங்களைப் படித்தேன். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் குடிமைப்பணி முதன்மை தேர்விலும், முதல்நிலை தேர்விலும் எனக்காகப் பதில்களை எழுதினார். பதில்களை எழுதுவதை விட, ஒப்பிப்பது சுலபமாக இருந்தது.'' என்கிறார் பிரஞ்சல்.

''ஹெட்போன் உதவியுடனே பிரஞ்சல் படித்தார். தனது கேட்கும் திறனையும் இதனால் இழக்கக்கூடும் என அப்போது பிரஞ்சல் பயந்தார்'' என்கிறார் எல்.பி பாட்டில்.

முதல் முறையாக குடிமைப்பணி தேர்வு எழுதி தேர்ச்சியடைந்த பிரஞ்சல், அகில இந்தியளவில் 773வது இடத்தைப் பெற்றார். ஆனால், பிரஞ்சலில் போராட்டம் இத்துடன் ஓயவில்லை.

இந்திய ரயில்வே கணக்கு சேவைப் பிரிவில், பிரஞ்சலுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது பார்வை குறைபாட்டைக் காரணம் காட்டி பணி வழங்க ரயில்வே மறுத்துவிட்டது.

படத்தின் காப்புரிமை L B PATIL

''இரண்டாம் முறை குடிப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்து, அதற்கான முதல்நிலை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், எனக்கு பணி வழங்க ரயில்வே மறுத்த விஷயம் தெரியவந்தது. இதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றேன். இதனால், இந்திய தபால் துறையில் எனக்குப் பணி ஒதுக்கினார்கள். இந்நிலையில், இரண்டாம் முறை குடிமைப்பணி தேர்வு எழுதிய நான் 124 வது இடத்தைப் பெற்றேன். எனக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டது'' என்கிறார் பிரஞ்சல்.

கோமல் பட்டேல் என்பவரை பிரஞ்சல் திருமணம் செய்துகொண்டார். அவர் நிபந்தனையின்றி பிரஞ்சல் ஏற்றுக்கொண்டார்.

முதற்கட்ட பயிற்சிக்கு பிறகு எர்ணாகுளத்தில் உதவி ஆட்சித்தலைவராக பிரஞ்சல் பொறுப்பேற்றுக்கொண்டார். தனக்கான உண்மையான தேர்வு இப்போதுதான் தொடங்குகிறது என பிரஞ்சல் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்