வாதம் விவாதம்: ''தமிழகத்தில் அனைவரையும் சிறையில் அடைத்து அமைதி ஏற்படுத்துகிறார்கள்''

  • 21 ஜூன் 2018
காவல்துறை படத்தின் காப்புரிமை Getty Images

காவல்துறையால்தான் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்ற மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து ஏற்கக்கூடியதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.

''எஸ்வி.சேகர், அன்புச்செல்வன், போன்றவர்களுக்குக் காவல் துறை சேவை, பாதுகாப்பு கொடுப்பது எல்லோரும் அறிந்ததே. பியூஷ் திருமுருகன் காந்தி வளர்மதி போன்றவர்களை சிறையில் அடைத்து காவலர்கள் நாட்டில் அமைதி காத்து வருவதும் யாவரும் அறிந்ததே. காவல் துறையை கேடயமாகக் கொண்டு இந்த அரசு ஜனநாயக படுகொலைகளை செய்து கொண்டு வருகிறது. தூத்துக்குடி படுகொலைகள் ஒன்றே இதற்கு சான்று. தற்போது சேலம் விவசாயிகள் நடவடிக்கை. மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறையே அச்சுறுத்தலாக இருக்கிறது,'' என சரோஜா பாலசுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

''எதுவும் செய்ய முடியாமல் மக்கள் இருக்கிறார்கள் . காவல்துறையினர் நிலைமை பரிதாபம் தான். காவல்துறையினருக்கு நியாயம் எந்த பக்கம் இருக்கிறது என்று நன்றாகவே தெரியும். அவர்களது கடமை மேலிடத்தின் உத்தரவையும் சட்டத்தின் ஆட்சியையும் அமல்படுத்துவதுதான். விதைத்ததைத் தான் மக்கள் அறுக்கிறார்கள்.'' என பதிவிட்டுள்ளார் முத்து செல்வம்.

''தமிழக காவல் துறை, மக்களை நடத்தும் முறைகளில் இன்னமும் ஆங்கிலேயரது ஆதிக்க சாயல் போக்கையே தொடர்வதாக தோன்றுகிறது. மக்களாட்சியில் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆளும் அரசுகள் தங்களின் பாதுகாப்பிற்கும், எதிர்க்கட்சியினரைக் கையாள்வதற்கும், உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்குவதற்கும் காவல் துறையை அரசின் கைப்பாவையாக வைத்திருக்கிறது. காவல் துறை மக்களின் காவலன், மக்களின் தோழன் என்பது செயல்பாட்டில் இல்லாமல் வெறும் வாசகமாக மட்டுமே இருக்கிறது.'' என்பது சக்தி சரவணனின் கருத்து.

படத்தின் காப்புரிமை Getty Images

''போலீஸுக்கு எதிராக போராடுறவர்கள் தைரியமா வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு வருகிறார்கள் என்றால், அதுக்கு காரணமும் போலீஸ்தான். மறுக்க முடியுமா நம்மால்?'' என கேட்டுள்ளார் ராபின்.

''ஆமாம் அமைதியாகத்தான் இருக்கிறது. அதிகார வர்க்கம் அனைத்து மக்களையும் சிறையில் அடைத்து மயான அமைதி ஏற்படுத்துகிறது'' என்கிறார் அகமது.

''எதற்கு எடுத்தாலும், பொதுமக்களைக் குறிவைக்கிறது காவல்துறை. காவல்துறை இல்லை என்றால், இந்த ஆட்சி இருக்காது'' என்கிறார் முரளி.

''காவல் துறை தற்போது ஏவல் துறை என பெயர் மாற்றம் செய்தால் சரியாக இருக்கும் '' என்பது குலசேகரன் எனும் நேயரின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :