சுஷ்மா சுவராஜை ட்விட்டரில் திட்டித் தீர்த்த இந்துத்துவா குழுக்கள்

சுஷ்மா படத்தின் காப்புரிமை Getty Images

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்து-முஸ்லிம் கலப்புத் திருமணத் தம்பதிகள் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்தால் அலைகழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையிட்ட வெளியுறவு அமைச்சகம் மண்டல பாஸ்போர்ட் அலுவலரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதனால் கோபம் அடைந்த ட்விட்டரில் செயல்படும் இந்துத்துவா ஆட்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை திட்டித் தீர்த்துவிட்டனர்.

தவறான கருத்துக்கள் என சுஷ்மா சுவராஜ் கூறும் சில ட்வீட்களை, அவரே தனது பக்கத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். அதே சமயம், இந்த பாஸ்போர்ட் சர்ச்சை ஏற்படும் போது, தான் நாட்டில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

''ஜூன் 17 முதல் 23 வரை நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் இல்லாதபோது, என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனாலும், என்னைப் போற்றி சில ட்வீட்கள் வந்துள்ளன. உங்களிடம் அதனை பகிர்ந்துகொள்கிறேன்'' என சுஷ்மா சுவராஜ் ட்வீட் போட்டுள்ளார்.

''அவர்(சுஷ்மா) கிட்டத்தட்ட இறந்துவிட்டார். வேறு ஒருவரிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட சிறுநீரகத்தால் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் அது நின்று போகலாம்'' என கேப்டன் சரப்ஜித் தில்லன் என்பவர் சுஷ்மாவை சாடி ட்வீட் செய்திருந்தார். இதனை சுஷ்மா ரீ-ட்வீட் செய்திருந்தார்.

ருத்ர ஷர்மா என்பவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,'' நரேந்திர மோதியை, ட்விட்டரில் சுஷ்மா சுவராஜை பின்பற்றவில்லை. சுஷ்மா தன்னை மதச்சார்பற்ற நபராகக் காட்டிக்கொள்ள முயல்கிறார். 2019 தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், போலி மதச்சார்பற்றவர்களின் உதவியுடன் பிரதமராகலாம் என நினைக்கிறார். (மண்டல பாஸ்போர்ட் அலுவலர்) விகாஸ் மிஸ்ராவுக்கு எதிரான நடவடிக்கையும், இத்திட்டத்தில் ஒன்றே'' என கூறியுள்ளார்.

இந்திரா பாஜ்பாஸ் என்பவரின் ட்விட்டை சுஷ்மா ரி-ட்வீட் செய்துள்ளார். அதில், '' சுஷ்மா எடுத்தது பக்கச்சார்பான முடிவு. இஸ்லாமிய சிறுநீரகத்தின் விளைவா இது'' என கூறப்பட்டுள்ளது.

சுஷ்மா சாடப்படுவது ஏன்?

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முகமது அனாஸ் சித்திக்கும், இந்து சமூகத்தை சேர்ந்த தன்வி சேத்தும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் வேண்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா தங்களை அவமானப்படுத்தியதாக தன்வி சேத் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை BBC / SAMIRATMAJ MISHRA
Image caption முகமது அனாஸ் சித்திக்- தன்வி சேத்

மேலும், தனது கணவரை இந்து மதத்திற்கு மாறும்படியும், தனது பெயரை மாற்றிக்கொள்ளும்படியும் அந்த அதிகாரி கூறியதாகவும் குற்றஞ்சாட்டிய தன்வி சேத், இதனை சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் செய்திருந்தார்.

இந்த தம்பதியின் புகாரை அடுத்து, பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன், இத்தம்பதியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் நடந்தபிறகு, சமூக வலைத்தளத்தில் இரண்டு விதமாக கருத்துக்கள் வந்தன. சுஷ்மா சுவராஜ் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி சிலர் ட்வீட் செய்தனர்.

சில இந்து குழுக்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்ட விகாஸ் மிஸ்ராவுக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் செய்தனர். இவர்கள் சுஷ்மா சுவராஜின் ஃபேஸ்புக் பக்கத்திற்குக் குறைவான ரேட்டிங்கை அளித்தனர். அத்துடன், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் சுஷ்மா நடந்துகொள்வதாக சாடினர்.

சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் சுஷ்மா சுவராஜ், ட்வீட்டர் மூலமே மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவர் எனப் பெயர் பெற்றவர்.

இன்று சமூக வலைத்தளத்தில் அவர் சாடப்படும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவளித்து ட்வீட் செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்