எட்டு வழிச்சாலையால் சீன நகருக்குப் பயன்: சாத்தியக்கூறு அறிக்கையில் வினோதங்கள்

சென்னை-சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை திட்டம், சீனாவின் சியான்(Xian) நகரத்திலுள்ள பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவும் என இத்திட்டம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை-சேலம் விரைவுப்பாதையால் சீனநகரம் பயனடையும்: நெடுஞ்சாலைத்துறையின் அறிக்கையில் தவறுகள்

சென்னை-சேலம் இடையில் அமைக்கப்படும் இந்த விரைவுப்பாதைக்கும், சீனாவில் உள்ள சியான் நகரத்திற்கும் என்ன தொடர்பு என அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

சேலத்திற்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

சென்னை-சேலம் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சாலையால் ஏற்பட்டும் சாதக, பாதகங்கள் என்னவென்று ஆராய்வதற்காக எழுதப்பட்டுள்ள பகுதியில், பாகுபாடற்ற பாலின வளர்ச்சி என்ற தலைப்பில், மூன்று கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில் மூன்றாவது கேள்விக்கு பதில் கூட கொடுக்கப்படவில்லை.

முதல் கேள்வியில், இந்த திட்டத்தால் ஏற்படும் முக்கிய பாலின பிரச்சனைகள் என கருதப்படவேண்டியவை எவை என்று கேட்கப்பட்டுள்ளது.

முதல் கேள்விக்கான பதிலில்தான், சீனாவில் உள்ள சியான் நகரத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்க இந்த சாலைதிட்டம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கேள்வியில் இந்த திட்டத்தால் பாலின சமத்துவம் எட்டப்படுமா? பெண்கள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா என்றும் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, நகர போக்குவரத்து தொடர்பான இந்த திட்டத்தால் பாலின சமத்துவம் மற்றும் முன்னேற்றத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FACEBOOK

தவறான தகவல் இடம்பெற்றதாக புகார்கள்

இதுபோல அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை பிபிசிதமிழ் பார்வையிட்டபோது, அந்த அறிக்கையில் பொருந்தாத தகவல்கள் இருப்பது தெரிந்தது. பல இடங்களில் எழுத்துப்பிழைகளும், ஒரே தகவல் மீண்டும், மீண்டும் பதிவாகியுள்ளதும் தெரிய வந்தது.

மக்கள் எதிர்பார்க்கும் திட்டம் என்கிறது மத்தியஅரசு

சென்னை-சேலம் விரைவுப்பாதை செயல்படுத்தப்படும் தமிழகம் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ஒன்று என்று அந்த அறிக்கை கூறுகிறது. உண்மையில் இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன.

விரைவுப்பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் சமூக நிலங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களாக உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் எதுவும் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படுவதில்லை.

மேலும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்தபோது(survey), அவர்களில் பலர் மீண்டும் மீண்டும் ஆய்வு நடத்தவேண்டாம் என்று கூறுவதாகவும், விரைவாக சாலையை அமைக்கவேண்டும் என்று அவர்கள் கூறுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே சாலை திட்டமிடப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து போரட்டங்கள் நடைபெறுவதும், தங்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என விவசாய சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் நடந்துவருகிறது.

அவசரத்தில் வெளியான அறிக்கை

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது இணையத்தில் ஏற்கனவே உள்ள பழைய அறிக்கைகளில் இருந்த தகவல்களை படிஎடுத்து எழுதப்பட்டதால், தவறான அறிக்கையை அவரசத்தில் வெளியிட்டபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

சுந்தர்ராஜன்

இந்த அறிக்கை குறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், ''சென்னை சேலம் 8 வழி நெடுஞ்சாலைக்கான "சாத்தியக்கூறு அறிக்கை" (feasibility report), மற்ற திட்டங்களின் அறிக்கைகளில் இருந்து திருடப்பட்ட தரவுகளுடன், இந்த திட்டத்திற்கு தேவையே இல்லாத தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வெறும் பக்கங்களை நிரப்புவதற்காக மட்டுமே மேற்சொன்ன தரவுகளுடன் அறிக்கையை தயார் செய்திருக்கிறார்கள்,'' என்கிறார்.

அரசு சொல்வதைப்போல சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை முக்கியமான திட்டமென்றால், நம்பத்தகுந்த, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் தகவல் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கருத்துகேட்பதற்காக முயற்சிசெய்து, அவர்களுக்கு கேள்விகளை அனுப்பி பல நாள்கள் காத்திருந்த பிறகும் அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :