நாளிதழ்களில் இன்று: பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர் : பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017 -18ல் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இலவச பயிற்சி பெற்ற 1,300 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் 20 பேர் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது.

இதனால் கல்வி ஆண்டு தொடக்கம் முதலே வகுப்புகளில் இருந்தே மாணவர்களுக்கு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்றிருந்தால், அதில் சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி : ஆளுநர் பணியை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்பது புதுவைக்கும் பொருந்தும்

பட மூலாதாரம், Getty Images

ஆளுநரின் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்ற அறிவிப்பு புதுவைக்கும் பொருந்தும் என்றும், சட்டம் என்பது நாடு முழுவதும் சமமானதுதான் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுவையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதை ஆளும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள ஆய்வு என்பது பொது சேவைக்கான முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பணியை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்பது நாடு முழுவதும் ஒரே சட்டம்தான். அதனை மாற்ற முடியாது என்றும் கிரண் பேடி தெரிவித்தார்.

தி இந்து (ஆங்கிலம்) - 11 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

பிகாரில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவனை சிறையில் அடைத்ததால், 11 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் தர மறுத்ததால் அச்சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான். இதுகுறித்து விசாரிக்க மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சிறுவன் சிறையில் இருந்து விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :