மத்திய அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை தீர்மானம்

  • 26 ஜூன் 2018
மும்பை அருகே ஒரு அணை. படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படும்வரை இந்த மசோதாவை நிறுத்திவைக்க வேண்டுமென இந்தத் தீர்மானம் கோருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாப்பதற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை, விதிமுறைகளை வகுக்கும் மசோதா ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தவிருக்கிறது. ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது.

இதையடுத்து, இந்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இந்த மசோதாவின் சில பிரிவுகள் மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும் வேறு மாநிலங்களில் தமிழக அரசால் கட்டப்பட்டு, பராமரிக்கப்படும் அணைகள் மீதான உரிமைகளை மீறுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.

2016ல் அணை பாதுகாப்பு மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இப்போது மீண்டும் அதே மசோதாவுக்கே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறிய முதலமைச்சர், மாநிலங்களிடம் இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படும்வரை இதனை ஒத்திவைக்க வேண்டுமென அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி சட்டசபையில் முன்வைத்தார்.

"மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018ஆம் ஆண்டின் அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும் குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில் மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், தமிழக சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது" என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தீர்மானத்தில் தி.மு.கவின் சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்குப் பிறகு இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்தத் தீர்மானத்தை முன்வைத்துப் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, "மத்திய அரசு, 2010 ஆம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக அப்போதைய பிரதமரை கேட்டுக் கொண்டார்" என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, அந்த மசோதா கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் 2016ஆம் ஆண்டு அணை பாதுகாப்பு வரைவு மசோதா ஒன்றை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது; இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என்றும் முதலமைச்சர் கேள்வியெழுப்பினார்.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும். பராமரிக்கப்பட்டும் வருகின்றன என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிச்சாமி, இத்தகைய அணைகள் பற்றிய விவரம் இந்த வரைவு மசோதாவில் இல்லை என்றும் மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளைப் பராமரிப்பதில் இடையூறு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருவதாகவும் இவை, மத்திய நீர்வளக் குழுமம் அவ்வப்போது அளித்துவரும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள், அணை பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும் என்றும் பழனிச்சாமி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :