வாதம் விவாதம்: ''இந்தியா ஜனநாயக நாடு என்பதைவிட பணநாயக நாடு என்பதுதான் சரி''

  • 27 ஜூன் 2018
படத்தின் காப்புரிமை AFP

''உலக ஜனநாயக அட்டவணையில் இந்தியா 42-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது''. இந்தியாவில் மத சித்தாந்தங்களின் எழுச்சி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.

''வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு , ஏகபட்ட மாற்றங்கள். உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தபோது எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது இந்தியா; அது தான் வளர்ந்த நாடுகளுக்கு இருந்த கோபம். அது மோடியின் ஆட்சி வழி தீர்க்கபடுகிறது. இந்திய தேசத்தின் வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை அடித்து மக்களை வாழ்வாதாரத்திற்காக அலைய விடுகின்றனர்'' என்கிறார் தர்மராஜ்.

''இந்தியாவின் சகிப்புத்தன்மையினை அவமதிக்கும் இந்த அறிக்கையை ஏற்க முடியாது. அப்படி சிறுபான்மை இயக்கத்தினரை மத மாற்றம் செய்யவோ, கொலை, கற்பழிப்பு செய்யவோ இந்தியர்கள் ஒன்றும் பாகிஸ்தானியர்கள் இல்லை. பிற நாடுகளில் இருப்பது போல ஏதாவது விபத்து சம்பவங்கள் நடப்பது இயல்பு தான். அதற்காக ஒட்டுமொத்த இந்தியாவையையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற அனுமதிக்க முடியாது. இந்துக்கள் இடத்தில் இந்தியாவில் வேறு எந்த மதத்தினரும் இருந்திருந்தால் அந்த மதத்தினரின் சட்டம் தான் இந்தியாவின் அரசியலமைப்பாக இருக்கும். ஆனால் இந்துக்களின் சகிப்புத்தன்மைக் காரணமாக இந்தியா இன்று வரை மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது'' என்பது நெல்லை முத்துசெல்வனின் கருத்து.

''பேச்சுரிமை இல்லை, தேச துரோகியென்கிறார்கள். பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு நீதி. ஏழைக்கு ஒரு நீதி. சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்படுகின்றன. மக்களுக்காக இல்லாமல் கட்சிகளுக்காக ஆட்சி நடக்கிறது. மதவாதம் தலைவிரித்தாடுகிறது. இதில் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றி கொள்வதில் என்ன பெருமை?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''இந்தியா ஜனநாயக நாடு என்பதைவிட பணநாயக நாடு என்பதுதான் சரியாக இருக்கும். ஊழல் மற்றும் மதவெறி சக்திகளால் மக்களின் வாழ்நிலை மோசமாகி உள்ளது'' என்று கூறியுள்ளார் பொன். ராமகிருஷ்ணன்.

''இது ஜனநாயக நாடு அல்ல. மோடியின் சிந்தாந்தங்கள் மனித குலத்திற்கு எதிரானவை. ஒரு மிக மோசமான, சகிப்புதன்மையற்ற, மனித உரிமை மீறல்களை கொண்டிருக்கிற அபாயகரமான கட்சியும் அதன் ஆட்சியும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உச்ச கட்ட அபாயத்தில் இந்திய மக்கள் இருக்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்து நாட்டில் அமைதியற்ற சூழல் உள்ளது. மக்கள் அச்சத்துடனும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர். இதை ஒரு மோசமான ஜனநாயகமாக நான் கருதுகிறேன்'' என்பது கவிதா செந்தில்குமார் எனும் நேயரின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: