நாளிதழ்களில் இன்று: ''எமர்ஜென்சியைவிட இப்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது''

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Hindustan Times/ Getty images

''1975-ல் காங்கிரஸ் அரசால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியைவிட, இப்போது பாரதீய ஜனதா ஆட்சியில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது. 1975 எமர்ஜென்சியைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, இருப்பினும் மோசமான சூழ்நிலைதான் உள்ளது. மக்கள் மிகவும் பயந்து உள்ளார்கள். அவர்கள் பேசுவதற்கு அச்சம் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர்களுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. இது இந்திராகாந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமானதாக இருக்கிறது.இப்போது உள்ள பா.ஜனதா அரசியல் பல்வேறு பத்திரிகையாளர்கள் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள், அவர்கள் பத்திரிகை நிறுவனம் மூலம் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.'' என பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

தினமலர்

இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழ் போராளிக்குழுக்களில் ஒன்றான ’டெலோ’ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல் ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு 'கியூ' பிரிவுக்கு மாற்றப்பட்ட உள்ளது என அம்மாவட்ட எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று, வெடி பொருட்களை பாதுகாப்பாக அழிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார் என தினமலர் செய்தி கூறுகிறது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

பொதுத்துறை வங்கிகளில் தான் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் நல்லெண்ணமும், தொடர்ச்சியான முயற்சிகளும் தம்மிடம் இருப்பதாக, தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். ஆனால், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட, வெளியில் இருக்கும் சக்திகளின் தலையீடு இருக்குமானால், தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

அயோத்தியில் ராமர் கோவில் கட்டாயம் கட்டப்படும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் என டெல்லியிலிருந்து வெளியாகும் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` செய்தி கூறுகிறது.

மேலும் ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்முறையாக உறுதியான கருத்தை யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் என்றும் கூறுகிறது அச்செய்தி.

அயோத்தியில் நடைபெற்ற சாந்த் சம்மேளனில் பேசிய ஆதித்யநாத், இந்த பிரபஞ்சத்தின் தலைவர் ராமர் ஆவார். அயோத்தி அந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளது என்று தெரியும்போது அங்கு நிச்சயம் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்; அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக கூறுகிறது அந்த செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :