எட்டுவழிச்சாலை: முதல்வர் சொல்வது சாத்தியமில்லை என்கிறார் அன்புமணி

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலையின் நீளம் 277 கிலோமீட்டர் என்றும், சென்னையில் இருந்து சேலத்திற்கு இரண்டேகால் மணி நேரத்தில் வரலாம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது உண்மைக்கு மாறானது என்று விமர்சித்துள்ளார் அன்புமணி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எட்டு வழிச்சாலை: ''முதல்வர் எடப்பாடி இப்படி பொய் சொல்லலாமா?''

1,900 ஹெக்டேர் நிலம் எடுக்கப்படுவதாகவும், 96 சதவீத விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்குவதாகவும் இழப்பீடு 21 லட்சம் முதல் 9 கோடி வரை வழங்கப்படும் என்று முதல்வர் கூறியதை உண்மைக்கு மாறானது என்றும், அன்புமணி விமர்சித்தார்.

சேலம்-சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களிடம் கருத்து கேட்பதற்காக சேலத்தில் புதன்கிழமை பாமக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய பாமக மாநில இளைஞரணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நிலம் வழங்கும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதனை அறிக்கையாக மத்திய, மாநில அரசுகளிடம் வழங்க உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து இந்த திட்டத்தின் பாதிப்பு குறித்து தெரிவிக்க இருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். இதுவரை சந்தித்த விவசாயிகள் இந்த திட்டம் தங்களுக்கு தேவையில்லை என்று கூறுவதாகவும், சிலர் இழப்பீடு தேவையில்லை அதற்குப் பதில் மாற்று இடம் வழங்குமாறு கேட்பதாகவும் குறிப்பிட்டார் அன்புமணி.

இந்தக் கூட்டத்தில் பெருமளவில் பெண்கள் கலந்து கொண்டனர். நிலம் இல்லாத பெண்கள் தாங்கள் விவசாய கூலிவேலையை நம்பியுள்ளோம். இந்த நிலம் இல்லையென்றால் அன்றாட கூலி கிடைக்காது என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, "நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. உலகம் முழுவதும் சென்றுளேன். அந்த முன்னேற்றம் இங்கு வரவேண்டும் என்று விரும்புபவன். ஆனால் சென்னையில் இருந்து, சேலத்திற்கு 3 சாலைகள் உள்ளன.

அந்த சாலைகள் இல்லையென்றால் புதிய சாலை போடலாம். சென்னை-உளுந்தூர்பேட்டை-சேலம் 312 கிலோமீட்டர் தொலைவு. இதில் பயணிக்க சராசரியாக 6 மணிநேரம் ஆகும். சென்னை-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் 345 கிலோமீட்டர் தொலைவு. இதில் பயணிக்க ஆறரை மணிநேரம் ஆகும். புதிய சாலை போட்டால் இரண்டேகால் மணி நேரத்தில் பயணிக்கலாம் என்று எந்த அடிப்படையில் சொல்லுகின்றார் என்பது தெரியவில்லை," என்றார்.

"சேலம்-சென்னை பயணம் செய்ய விமானத்தி்ல் சென்றாலே ஒரு மணிநேரம் ஆகும். 180 கிலோமீட்டர் வேகத்தி்ல் சென்றால்தான் இரண்டேகால் மணி நேரத்தில் செல்லமுடியும். இந்த சாலை சேலத்தில் இருந்து தாம்பரம் அருகே உள்ள படப்பைக்கு செல்கிறது. அங்கிருந்து சென்னைக்கு 35 கிலோமீட்டர் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்த தூரத்தைக் கடக்கவே 2 மணிநேரம் ஆகும். உண்மையில் இந்தப் புதிய சாலையில் சென்றால் 5 மணிநேரம் ஆகும்.

பசுமை சாலைவேண்டும் என்று யாரும் கேட்காத நிலையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. சேலத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய பிரச்சனை ஏற்படுத்தும். நகரத்திற்குள் இதுபோன்ற மேம்பால சாலைகள் கட்டக்கூடாது. இது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இது தவறான முடிவு," என்று கூறினார் அன்புமணி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எட்டு வழிச்சாலை திட்டம்: எல்லைக் கல்லை பிடுங்கி எறிந்து, அழுது புரண்ட மக்கள்

மேலும் இது பற்றிக் கூறிய அவர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 8 வழி சாலை உருவாக்கவேண்டும் என்றால் அந்தப் பாதையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வாகனங்கள் செல்ல வேண்டும். சென்னை-உளுந்தூர்பேட்டை சாலையில் 29 ஆயிரம் வாகனங்கள்தான் செல்கின்றன. கிருஷ்ணகிரி வழியாக 54 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. அதில் பாதி பெங்களூரு செல்கிறவை. உளுந்தூர்பேட்டை சாலையில் 80 ஆயிரம் வாகனம் செல்லவேண்டும் என்றால் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.

ஒரு திட்டம் கேட்டு கடிதம் கொடுத்த பின்னர் அடுத்த நாளே நிதின்கட்கரி அனுமதி வழங்கியுள்ளார். திட்ட ஆய்வு, சமூக ஆய்வு நடத்தாமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் வரவில்லை. தனியார் நிறுவனங்களுக்காக போடப்படும் சாலை என்றும், தாது எடுத்துசெல்வதற்காக என்று மக்கள்கூறுகின்றனர். இவையும் ஆய்வு செய்யப்படும். கவுத்தி, வேடியப்பன், கஞ்சமலை ஆகிய இடங்களில் இரும்புத்தாது எடுக்கமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்ததிட்டத்திற்கு எதிராகப் பேசுவோரை போலீசார் கைது செய்துவருகின்றனர். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் நிலத்திற்குள் செல்லமுடியாது. ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அளவீடு செய்து வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோதுகூட இதுபோன்று செய்ய மாட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சந்திரமுகியாக மாறிவிட்டார். தருமபுரியில் எனது தொகுதியில்கூட மக்களை சந்திக்க அனுமதிக்க மறுக்கின்றனர்.

இது அராஜகமான செயல். காவிரி உபரிநீர் திட்டம், தோனிமடுவு திட்டம், அத்திக்கடவு, அவனாசி திட்டம், மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் இவையெல்லாம் மக்கள் எதிர்பார்த்தது. ஆனால் மக்கள் கேட்காத திட்டத்தை நிறைவேற்ற முணைகின்றனர். 8 வழிச்சாலை திட்டத்தை சட்டரீதியாக சந்திக்க உள்ளோம். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசவும் உள்ளேன்.

சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை. ஆனால் 9 இடங்களில் இருவழிச்சாலையாக உள்ளது. 100க்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிதின் கட்காரியிடம் கடிதம் அளித்துள்ளேன், பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன் ஆனால் இந்த சாலை முழுமையடையவில்லை.

பசுமை சாலை திட்டத்தில் மரங்கள் அளவீடு செய்தவதில் லஞ்சம், ஊழல் என மிகப்பெரிய மோசடி நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :