''காஷ்மீர் பத்திரிகையாளரைக் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர்''

  • 28 ஜூன் 2018

காஷ்மீரில் ஊடகவியலாளர் ஷுஜாத் புகாரியை சுட்டுக்கொன்றது பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பு என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை SYED SHUJAAT BUKHARI/FACEBOOK

இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது, ஜூன் 14 அன்று புகாரி மற்றும் அவரது பாதுகாவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

"புகாரியைக் கொல்வதற்கான உத்தரவு பாகிஸ்தானில் இருந்து வந்தது" என கூறியுள்ள காவல் அதிகாரி ஒருவர், லஷ்கர்-ஈ-தய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று லஷ்கர்-ஈ-தய்பா மறுத்துள்ளது. வேறு எந்த அமைப்பும் அவரது கொலைக்கு பொறுப்பேற்கவில்லை.

இந்திய ஆளுகையில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் அதிகம் அச்சுறுத்தும் குழுக்களில் ஒன்றான லஷ்கர்-ஈ-தய்பா, காஷ்மீரில் நடந்துள்ள பல தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் ஒருவர் ஜனவரி 2018இல் காவல்துறை வசம் இருந்து தப்பியவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இருவர் பின்னர் அந்த அமைப்பில் இணைந்தவர்கள்.

தங்களுக்குள் ஏற்பட்டுள்ள சட்ட வழக்குகள் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் புகாரி கொலை வழக்கு தொடர்பான தகவல்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள் என்று பிபிசி உருது செய்தியாளர் ரியாஸ் மசூரிடம் ஒரு மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியராக இருந்த புகாரி, பிபிசியிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் காஷ்மீர் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிக்கப்பட்ட ஊடகவியலாளராக இருந்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனையின் மையமாகத் திகழும் காஷ்மீர், உலகிலேயே அதிகமாக ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :