வீட்டு வாசலில் சேவையை அளிக்கும் நடமாடும் சலூன்: புதிய முயற்சி

  • 7 ஜூலை 2018

வேண்டியதெல்லாம் வீடு தேடி வரும் யுகம் இது. நீங்கள் எதிர்பாராத இன்னொரு சேவை தற்போது வீடு தேடி வரத் தொடங்கிவிட்டது. வாகனத்தில் செயல்படும் நடமாடும் சலூன் உங்கள் வீட்டின் கதவைத் தட்டக்கூடும், குறிப்பாக நீங்கள் கோவை வாசி என்றால்....

Image caption நடமாடும் சலூனுக்குள்....

நடமாடும் சலூன் ஒன்றை நடத்திவரும் கோவையை சேர்ந்த ஸ்ரீதேவி பழனிச்சாமி வாடிக்கையாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் ஒரு சலூன் கடையையே வீட்டின் முன்னே நிறுத்தி விடுகிறார்.

ஒரு டெம்போ டிராவலர் வாகனத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு சலூனை உருவாக்கி கடந்த நான்கு மாதமாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் அவர்.

சலூன் துறையில் பத்து ஆண்டுகள் அனுபவமுள்ள இவரது இந்தப் புதிய முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதத்தில் இந்த சலூன் 800 வாடிக்கையாளர்களை தேடிச் சென்று சேவையை அளித்துள்ளது என்றும், சுமார் 1000 வாடிக்கையாளர்கள் வாகன சலூன் குறித்து விசாரணை செய்துள்ளதாகவும் கூறுகிறார் ஸ்ரீதேவி.

இவரது க்யூ 3 வாகன சலூனில் மூன்று பேர் ஒரே நேரத்தில் அமரும் இருகை வசதி, ஷேம்பூ ஸ்டேஷன், பணிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி, குளிர்சாதனப்பெட்டி, டிவி, போன்ற வசதிகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஒரு வாகனத்திற்குள் இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். மேலும் வாகன சலூனில் முடி திருத்துதல் தொடங்கி ஃபேசியல், மேக்கப், போன்ற மேம்படுத்தப்பட்ட சலூனில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து சேவைகளும் கிடைக்கின்றன.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளோர், கல்லூரிகள், திருமண வீட்டார், தனியார் தங்கும் விடுதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தற்போது வாகன சலூனை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இந்த சேவையை பெற முடிவதால் அவர்களின் நேரம் மிச்சப்படுவதுடன், சலூன் கடைகளை தேடிச்செல்லும்போது போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம் என்கிறார் ஸ்ரீதேவி.

மேலும் ஹெர்பல் ஹேர்வாஷ், ஹேர் டேமேஜ் தெரப்பி, ஃபேசியல் போன்றவைகளில் இந்திய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப்பொருட்கள் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே அனுபவம் பெற்ற இரண்டு ஆண் ஒப்பணையாளர்களும், இரண்டு பெண் ஒப்பணையாளர்களும் ஸ்ரீதேவியுடன் பணியாற்றுகின்றனர்.

"மேலை நாடுகளில் மட்டுமே இதுபோன்ற வசதிகள் வாடிக்கையாளர்களை சென்றடைந்த நிலையில் இந்தப் பகுதியில் முதல் முறையாக வாகன சலூனை செயல்படுத்தியுள்ளதாக" கூறுகிறார் ஸ்ரீதேவி பழனிசாமி.

மேலும் வாகன சலூனுக்கு வந்த வாடிக்கையாளர் அசைன் பிபிசி தமிழிடம் கூறும்போது, "இந்த வாகன சலூன் முறை மிகவும் பயனுள்ள சேவை. நான் எப்போதும் தொழிலில் மூழ்கி இருப்பவன்.

எங்களை போன்று நேரம் இல்லாமல் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அடிப்படை சேவைகள் எங்களை நோக்கி வருவது பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாகன சலூனில் உள்ளே வந்து அமர்ந்த உடன் நல்ல ஒரு வசதியான சூழலை உணர முடிகிறது. அனைத்து வசதிகளும் உள்ளே இருப்பதால் கொடுக்கும் பணத்திற்கு தரப்படும் சேவை நிறைவாக இருக்கிறது" என்றார்.

மற்றொருரு வாடிக்கையாளர் சரவணன் வாகன சலூன் பற்றிய அவரது அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "நான் கோவையில் கணினி விற்பனை கடை நடத்தி வருகிறேன். மூன்று நாட்களாக முடி வெட்ட வேண்டும் என்று நினைத்தும் வேலைப்பளு காரணமாக செல்ல முடியவில்லை. அப்போது மதிய உணவு முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வெளியே வந்த போது சலூன் வாகனத்தை கண்டேன்.

விசாரித்தபோது வாகன சலூன் குறித்த முழு விவரங்களையும் ஸ்ரீதேவி தெரிவித்தார். அப்போதே உள்ளே சென்று என்னுடைய பணிகளை உணவு இடைவேளை நேரத்திலேயே முடித்துக்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய திருமணத்திற்கு மேக்கப் செய்வதற்கும் முன்பதிவு செய்துகொண்டேன்," என்றார் சரவணன்.

பிறசெய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்