"பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்"

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என்பதை வரையறுக்க கோரிக்கை

படத்தின் காப்புரிமை KEVIN FRAYER

பிரதமர் மற்றும் மாநில முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை முறிய வகிக்கலாம் என்பதை வரையறை செய்யவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுந்தான் பதவி வகிக்க முடியும். அதேபோன்று, இந்தியாவிலும் பிரதமர் மற்றும் முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை முறை வகிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட என்றும், ஓய்வுபெறும் நிலையிலுள்ள அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதையும் தடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)- மற்ற கட்சியினரை பாஜகவுக்கு இழுத்தால் விரைவில் ஆட்சி- எடியூரப்பா

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

மற்ற கட்சியினரின் வீட்டிற்கே சென்று அவர்களை பாஜவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன் மூலம் விரைவில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து நேற்று அவரது தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இதுபோன்ற கருத்தை பதிவுசெய்த எடியூரப்பா, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது என்று செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அமித் ஷா சென்னை பயணத் திட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வரும் 9ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு தமிழகத்துக்கு வருவதற்காக இரண்டுமுறை திட்டமிட்ட அமித் ஷா, இறுதிநேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் போன்ற பல்வேறு விவகாரங்களில் மாநில அரசு மட்டுமல்லாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசும் கடுமையாக விமர்சிக்கப்படும் வேளையில் அமித் ஷா தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இப்பயணத்தை திட்டமிட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - ஜி.எஸ்.டி. ஓராண்டு விழாக் கொண்டாட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்து இன்று இரண்டாமாண்டு தொடங்குவதை மத்திய அரசு கொண்டாட உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த நாளை மத்திய அரசு டெல்லியில் விழா நடத்திக் கொண்டாடப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :