ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க, பாசனத்துக்கு ஏற்றதல்ல: பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்

ஸ்டெர்லைட் ஆலை அருகேயுள்ள கிராமங்களில் இருந்து பெறப்படும் நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எதற்கும் உபயோகமற்றது என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக தலைவர்களில் ஒருவரான பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஒரு திருமண விழாவில் பங்கேற்க தூத்துக்குடி வந்த பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார். அப்போது, தூத்துக்குடி குமரெட்டிபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது, அப்பகுதியில் இருந்து நிலத்தடி நீரை சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டீயூட்டில் சோதனை மேற்கொள்வதற்காக பெற்று சென்றதாகவும் அதன் அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிக்கவோ, விவசாயம் மேற்கொள்ளவோ, கட்டுமானத்திற்கோ ஏதுவானதாக இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது என்றும், ஆலை மூடப்பட்டதற்கு மக்களின் போராட்டம் தான் காரணம் எனவும் கூறினார். மேலும் சேலம்- சென்னை எட்டுவழி விரைவு சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும், பொதுமக்களின் முடிவுப்படி தான் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எட்டுவழிச் சாலைக்கான ஒப்பந்த உரிமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பெறவுள்ளதாக வரும் தகவல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றும், இவர்களின் வருமானத்திற்காக பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மக்களின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்தார் பிரேமலதா. அதே நேரம், அரசுத் திட்டங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அப்போதுதான் திட்டங்கள் வெற்றி பெறும் என்றும் கூறிய அவர் தமிழக வளர்ச்சிக்கு போடப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தமிழகத்தின் முன்னேற்றத்தை கேள்விக்கு உரியதாக்கும் என்றாலும், எட்டு வழிச்சாலை முக்கியமா என்பதனை அப்பகுதி மக்கள் மட்டுமே முடிவு செய்ய இயலும் என்று கருத்துத் தெரிவித்தார்.

இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். சேலம் விமானநிலையம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, சேலம் மாவட்டம் மேலும் வளர்ச்சி அடைய விமான நிலையம் அவசியம் தேவை என்றும், அப்பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :