செய்தித்தாள்களில் இன்று: "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன"

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன"

இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுவதாகவும், அவற்றில் 96.71 சதவீதம் பேர் அரசமைப்பு சட்டத்தின் 8ஆவது பட்டியலிலுள்ள 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாக கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி - "இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்"

பட மூலாதாரம், Getty Images

கர்நாடகத்தின் எதிர்ப்புக்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "நிப்பா வைரஸ் பாதிப்பு இல்லை"

பட மூலாதாரம், Getty Images

கேரளாவை அச்சுறுத்திய உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய நிப்பா வைரஸ் அற்ற மாவட்டங்களாக கோழிக்கோடு, மலப்புரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிப்பா வைரஸ் தாக்குதலினால் கேரளாவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த மே மாதம் 30ஆம் தேதி முதல், ஜூன் 30ஆம் தேதி வரை இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எவரும் அடையாளம் காணப்படாததால் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் நிப்பா வைரஸ் அற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - "இனி உடனுக்குடன் பான் கார்டு பெறலாம்"

பட மூலாதாரம், Getty Images

ஆதாரை அடிப்படையாக கொண்டு ஆன்லைனில் உடனுக்குடன் பான் கார்டை பெறும் வசதி வருமான வரித்துறையின் இணையதளத்தில் துவக்கப்பட்டுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், கைபேசி எண் மற்றும் முகவரியை அடிப்படியாக கொண்டு பான் எண் ஒரு சில நொடிகளிலேயே கிடைத்துவிடுமென்றும், அட்டை வடிவிலான பான் கார்டு பிறகு தபால் மூலமாக விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு அனுப்பப்படுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: