காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை

பட மூலாதாரம், IndiaPictures

''முதல் கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் நடந்தது. நீண்ட கால வழக்குக்கு பிறகு கிடைத்த தீர்ப்பின்படி இந்திய அரசின் ஒப்புதலோடு நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஒரு புது சகாப்தம்'' என செய்தியாளர்களை சந்தித்தபோது ஆணைய தலைவர் கூறினார்.

''நதிநீர் பகிர்வுக்கான விதிகள், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முறைப்படி தேவையான தனி அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் குறித்து விவாதித்தோம்.''

''நீர் வரவு மற்றும் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்த பல்வேறு தரவுகளை பராமரிக்கும் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம். ஏனெனில் தண்ணீரின் இருப்பு மற்றும் பல்வேறு அணைகளில் இருந்து எந்த அளவுக்கு தண்ணீரை வெளியேற்றுவது என்பது குறித்து முடிவெடுக்க ஒரு முறையான தரவு வடிவம் அவசியம். ''

''இதுவரை பருவமழை வழக்கமான அளவு இருக்கிறது என்பதை உற்றுநோக்கியிருக்கிறோம். ஜூலை மாதம் தண்ணீர் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் விவாதித்தது. ஜூலை மாதம் எவ்வளவு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜூன் மாதம் தமிழகத்துக்கு திறந்துவிட்ட தண்ணீரின் அளவை கணக்கில் எடுத்துக்கொண்டு ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீரில் இருந்து அந்த அளவை கழித்துக்கொண்டு மீதமுள்ள டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும்.'' என்றார் மசூத் உசேன்.

''தமிழகம் புதுச்சேரிக்கு தண்ணீர் வழங்குவதை பொறுத்தவரையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததே தொடரும் என ஆணையம் முடிவு செய்துள்ளது. அடுத்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது இதுவரை முடிவுசெய்யப்படவில்லை. ஆனால் காவிரி ஒழுங்காற்று குழுவின் சந்திப்பு ஜூலை ஐந்தாம் தேதி டெல்லியில் நடைபெறும் என காவிரி ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

''உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி ஆணையத்துக்கு முறைப்படி தண்ணீர் பகிர்வை உறுதி செய்வதற்கு தேவையான முடிவுகளை எடுப்பதற்கு முழு அதிகாரமும் இருக்கிறது'' எனத் தெரிவித்த மசூத் உசேன் ''எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முதல் சந்திப்பில் சிறப்பாக ஒத்துழைப்பு இருந்தது. அனைத்து மாநிலங்களும் ஆணையத்தின் உத்தரவை மதித்து நடக்கும் என நம்புகிறோம்'' என கூறியுள்ளார்.

காவிரி ஆணையத்தின் இன்றைய உத்தரவு மகிழ்ச்சி தருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: