செய்தித்தாள்களில் இன்று: "பிரதமரின் ஃபிட்னஸ் காணொளிக்கு பணம் செலவிடப்படவில்லை"

  • 3 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர் -"வீடியோவை எடுத்தது பிரதமர் அலுவலக வீடியோகிராபர்"

படத்தின் காப்புரிமை NARENDRAMODI.IN/BBC

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். மோதியின் இந்த பிட்னஸ் வீடியோவுக்கு ரூ.35 லட்சம் செலவு செலவிடப்பட்டதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மோதியின் பிட்னஸ் வீடியோவுக்கு எந்த பணமும் செலவிடப்படவில்லை என்றும், இந்த வீடியோவை எடுத்தது பிரதமர் அலுவலக வீடியோகிராபர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "கூடங்குளம் அணுமின் நிலையம் மூடுவதற்கு உத்தரவிட முடியாது"

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் கிடங்கை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அமைக்கவேண்டுமென்று இந்திய அணுமின் கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அப்பால் வேறிடத்தில் அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் அமைப்பை ஏற்படுத்தும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டுமென்று கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - 'ஒரே நேரத்தில் தேர்தல்' - முனைப்பு காட்டும் மத்திய அரசு

படத்தின் காப்புரிமை Reuters

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் 7, 8-ம் தேதிகளில் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய சட்ட ஆணையம் 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக 'ஒரே நேரத்தில் தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: