கமல்ஹாசன் யோசனையை பின்பற்றினால் சாதியை ஒழிக்க முடியுமா?

  • 3 ஜூலை 2018

தனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும்போது சாதி மற்றும் மதம் ஆகியவற்றுக்கான இடங்களை நிரப்ப மறுத்துவிட்டதாகவும், இந்த ஒரு வழி மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்கு இத்தகைய கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மும்பையிலுள்ள அம்பேத்கர் நினைவிடமான சைதன்யபூமியில் அஞ்சலி செலுத்த வந்த ஒரு தலித் பெண். (கோப்புப் படம்)

சிவகங்கை மாவட்டம் கச்சனத்தத்தில் சாதிய மோதலால் தலித்துகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குநர் அமீரும் இதே போன்றதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார். சாதியை ஒழிக்க அனைவரும் சாதிச் சான்றிதழைக் கிழித்துவிட வேண்டும் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்காகேவே அவர்களின் சாதி மற்றும் மதம், சாதிச் சான்றிதழ் ஆகியன கல்வி நிறுவனங்களில் கேட்கப்படுவதாக, இவர்களின் கருத்துகளுக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சாதியைக் குறிப்பிடாவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்றால், அதே போல சான்றிதழில் மாணவர்களின் பாலினத்தை குறிப்பிடாமல் போனால் பாலியல் குற்றங்களைத் தடுத்துவிட முடியுமா என்று கூட சமூக வலைத்தளங்களில் எள்ளலாக கேள்வி எழுப்பப்பட்டது.

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், முந்தைய நேர்காணல் ஒன்றில் தனது சாதியை வெளிப்டையாகவே சொல்லும் காணொளி ஒன்றும் மீண்டும் பரவி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சாதிச் சான்றிதழுக்கு சாதி ஒழிப்பில் இருக்கும் பங்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக செயல்பாட்டாளரும், ஆவணப் பட இயக்குநருமான திவ்ய பாரதி, "சமூகத்தில் சாதி இருப்பதால்தான் சான்றிதழில் சாதி உள்ளது. சான்றிதழில் சாதி இருப்பதால்தான் சமூகத்தில் சாதி உள்ளது என்று கூறுவது தலைகீழான புரிதல் மட்டுமல்ல, ஆபத்தான புரிதலும் கூட," என்றார்.

"கமல்ஹாசன் போன்ற பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்கள் வேண்டுமானால் தங்கள் சாதியைக் குறிப்பிடாமல் தவிர்க்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இருந்தும் பயனடையாத தலித் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வாறு தவிர்க்க முடியாது."

"சாதிச் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று கூறுவது சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பதை நம்புவதைப் போன்றது," என்றார் திவ்ய பாரதி.

படத்தின் காப்புரிமை Divya Bharathi / Facebook
Image caption திவ்ய பாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப் படத்தின் திரையிடல் பல இடங்களில் தடை செய்யப்பட்டது.

சமூக செயல்பாட்டாளரும், எவிடென்ஸ் தன்னார்வ அமைப்பின் இயக்குநருமான கதிர் பிபிசி தமிழிடம் இது குறித்து பேசும்போது, "சாதி என்பது ஒரு உணர்வு. 'ஆனால், அது ஒரு பொருள். அந்தப் பொருளை அழிப்பதன்மூலம் ஒழித்து விடலாம்' என்று நம்புவது பாமரத்தனம்," என்றார்.

"சாதி உள்ளது. அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்களை நம்பலாம். சாதி உள்ளது. அதை நான் கடைபிடிப்பேன் என்று கூறுபவர்களையும் நம்பலாம். ஆனால், சாதியே இல்லை என்று கூறுபவர்களை நம்பவே கூடாது. அவர்கள் ஆபத்தானவர்கள்," என்று கூறிய கதிர், "தலித்துகள் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறி வரும் இந்தக் காலகட்டத்திலும் ஆதிக்க சாதிப் பெருமையை வெளிக்காட்டும் படங்களை எடுத்தவர்கள் அவர்கள்," என்று கமல் மற்றும் அமீரை விமர்சித்தார்.

"அரசியல் அறிவும், சமூக அறிவும் இல்லாமல் முட்டாள்தனமாக இருந்துகொண்டு இவர்கள் எப்படி கலைஞர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசியலுக்கு வருவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் இருந்தாலும். அவர்களுக்கும் தங்களைப் பற்றிய சுய மதிப்பீடும், சுய விமர்சனமும் தேவை," என்று காட்டமாக தனது கருத்தை வெளிப்படுத்தினார் கதிர்.

படத்தின் காப்புரிமை Vincent Raj / Facebook
Image caption எவிடென்ஸ் கதிர்

பட்டியல் சாதியினர், பழங்குடியினத்தவர்கள் முன்னேற்றம் - அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

மதம், இனம், சாதி, பாலினம், பூர்விகம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அரசு வேலைக்கும் எந்தக் குடிமகனும் தகுதியானவர் என்றோ தகுதியற்றவர் என்றோ பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைச் சட்டத்தின் பிரிவு 16(2) கூறுகிறது.

சமூகத்தில் நலிவடைந்த மக்களின், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினத்தவர்கள், பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரிவு 46 கூறுகிறது.

மதம், இனம், சாதி,பாலினம், பூர்விகம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடைப்பைடயில் அரசு யாருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று பிரிவு 15, உட்பிரிவு ஒன்றில் கூறப்பட்டிருந்திருந்தாலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக சிறப்பு சரத்துகளை அரசு உருவாக்குவதை, உட்பிரிவு ஒன்றில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தடுக்காது என்று அதே பிரிவின் உட்பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் (Depressed Classes) என்று அழைக்கப்பட்டனர். பீமாராவ் அம்பேத்கர் அந்த பதத்தைப் பரவலாகப் பயன்படுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :