தூத்துக்குடி கலவரத்திற்கு யார் காரணம்? - விளக்கும் மக்கள் அதிகாரம்

தூத்துக்குடியில் நடந்த கலவரத்திற்கும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் காவல்துறையின் அச்சுறுத்தல் காரணமாகவே கிராம மக்கள் தங்கள்  மீது குற்றம்சாட்டுவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். 

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது மே 22ஆம் தேதி வெடித்த கலவரத்திற்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூவரே தங்களை ஒருங்கிணைத்ததாகவும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாவட்ட சட்டப் பணிகள் குழுவிடம் மனு அளித்தனர். அதன் பிறகு திங்கட்கிழமை மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதே போன்ற குற்றச்சாட்டுகளுடன் சட்டப் பணிகள் குழுவிடம் மனு அளித்தனர்.

திங்கட்கிழமையே இதனை அறிக்கை ஒன்றின் மூலம் மறுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார். 

இந்தக் கலவரத்திற்குக் காரணம் மீனவ மக்கள் என எந்த நீதிமன்றத்திலும் தாங்கள் தெரிவிக்கவில்லையென்றும் இது தானாகவே வெடித்த கலவரம் என்றும் கூறிய ராஜு, காவல்துறையினர் முறைகேடாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 

இந்தக் கலவரத்தையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  இவர்கள் ஒவ்வொருவர் மீதும் இருபது முதல் ஐம்பது வழக்குகள் வரை பதிவுசெய்யப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். 

கிராம மக்களால் குற்றம்சாட்டப்படும் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர் தாங்களாகச் சென்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்றும் மக்கள் அழைத்ததன் பேரிலேயே அவர்கள் சென்றதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பை ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பைப் போல நடத்துவதாகவும் ராஜு குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் கொடியை பறக்கவிட முயற்சியா?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடியைப் பறக்கவிடத் திட்டமிட்டதாக தங்கள் மீது குற்றம்சாட்டுவது அபத்தமானது என்றும் தூத்துக்குடி போராட்டம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்டது என்றும் அதற்கு எந்த ஒரு தனி மனிதரோ, இயக்கமோ தலைமை தாங்கவில்லையென்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர்.  

மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டங்களில் பெண்கள் குழந்தைகளுடன் கலந்துகொள்வதாகவும், வன்முறையில் ஈடுபடும் அமைப்பாக இருந்தால் பெண்களும் குழந்தைகளும் அதில் ஈடுபட முன்வருவார்களா என்றும் கேள்வியெழுப்பிய ராஜு,  இந்தக் கலவரம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரிக்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தார். 

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, யாரையும் கைதுசெய்யப் போவதாக அச்சுறுத்தக்கூடாது, தொந்தரவு செய்யக்கூடாது எனக் காவல்துறை கூறியிருந்தும் அதனை மீறி தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாத வேறு சில மாவட்டங்களிலும் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் ராஜு குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்கள் இருந்ததாகக் கூறிய காவல்துறை, வாஞ்சிநாதனை 21ஆம் தேதியன்று தூத்துக்குடி விமான நிலைய வாயிலில் வைத்துக் கைதுசெய்தது.  அவர் கைதுசெய்யப்பட்டு, சில நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் தான் உள்ளிட்டவர்கள் இந்தக் கலவரத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாகக்கூறி 9 பக்க வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் ராஜு குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூட வேண்டுமென்று கோரி, கடந்த மே 22ஆம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. இதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்