சென்னையில் காவல்துறை மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை

மோதல் சாவு படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் காவல்துறையுடன் நடந்த மோதலில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆனந்தன் என்ற அந்தக் கொல்லப்பட்ட நபர் காவல்துறையை ஆயுதங்களால் தாக்க முயன்றபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான மத்திய கைலாஷ் அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திங்கட்கிழமையன்று இரவு சென்னையில் காவலர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

திங்கட்கிழமையன்று இரவு ராயப்பேட்டை பி.எம். தர்கா பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று குடித்துவிட்டு அந்த வழியாகச் செல்பவர்களிடம் தகராறு செய்ததாக வந்த தகவலையடுத்து இரவுப் பணியில் இருந்த காவலர் ராஜவேலு என்பவர் அங்கு சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்களை எச்சரித்துக் கலைந்துபோகச் செய்துவிட்டு காவல் நிலையத்திற்குத் திரும்ப முயன்றபோது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை அரிவாளால் வெட்டியதாக காவல்துறை தெரிவிக்கிறது. இதில் படுகாயமடைந்த ராஜவேலு முதலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பிறகு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

காவலர் ராஜவேலுவைத் தாக்கியதாக அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகிய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நான்கு பேரைத் தேடிவந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த நான்கு பேரும் சென்னைக்கு அருகில் உள்ள சோழிங்கநல்லூரில் தங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்கள் அவர்கள் நான்கு பேரையும் கைதுசெய்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்தன் காவல்துறையினரை தாக்க முயன்றதாலேயே அவர் சுடப்பட்டதாக தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் சாரங்கன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"நேற்றைய தாக்குதல் சம்பவத்தின்போது வாக்கி டாக்கி காணாமல் போய்விட்டது. அந்த வாக்கி டாக்கி எங்கேயெனக் கோட்டபோது, மத்திய பாலிடெக்னிக் பகுதியில் பதுக்கிவைத்திருப்பதாக ஆனந்தன் தெரிவித்ததையடுத்து அவர் இங்கே அழைத்துவரப்பட்டார். வாக்கி டாக்கி அவர் சொன்ன இடத்தில் இருந்தது. அதன் அருகே பெரிய அரிவாள் ஒன்றும் இருந்தது. அதனை எடுத்து அவர் காவலர்களைத் தாக்க முயன்றார். அதில் இளையராஜா என்ற துணை ஆய்வாளருக்கு வெட்டு விழுந்தது. அதன் பிறகு எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் போகவே, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்" என சாரங்கன் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆனந்தன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுமென்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னையில் கடந்த 2012ஆம் ஆண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு சென்னையில் நடக்கும் முதலாவது என்கவுன்டர் சம்பவம் இதுவாகும்.

சில மாதங்களுக்கு முன்பாக மதுரையில் ரவுடி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெட்டுக்காயங்களுடன் காவலர் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தகவல் அறிந்த சென்னை மாநகரக் காவல் ஆணையர் விசுவநாதன், தெற்கு மண்டலக் கூடுதல் ஆணையர் சாரங்கன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்பின் காவலர் ராஜவேல் ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காவலர் ராஜவேலைத் தாக்கியதாகப் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் தலைமறைவான 4பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை விசாரித்து விட்டுத் திரும்பிய போலீஸ்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையில் முதல்நிலைக் காவலர் ராஜவேலு இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பெண்ணைச் சிலர் கேலி செய்வதாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மூலமாக புகார் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த காவலர் ராஜவேலுவை வழிமறித்த இருவர், கத்தியால் கண்மூடித் தனமாக தாக்கி உள்ளனர். இதில் காவலர் ராஜவேலுவின் தலையின் பின்பகுதியிலும், காது ஓரமாகவும் கடுமையான காயம் ஏற்பட்டு நினைவிழந்தார்.

தாக்குதலில் படு காயமடைந்த ராஜவேலு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் வந்து பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரித்தார். இதனிடையே, காவலரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரவிந்தன், அருண் என்ற இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்