செய்தித்தாள்களில் இன்று: குழந்தை கடத்தல் வதந்தி: 'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்

  • 4 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்- வாட்சாப்புக்கு கண்டனம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தில் பலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பொய் தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான விஷயங்கள் பரவுவது கண்டனத்துக்குரியது என கூறியுள்ள மத்திய அரசு, இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளது என்கிறது தினமலர் செய்தி.

தினத்தந்தி - ஸ்டெர்லைட் மூடலை எதிர்த்து முறையீடு

படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதனையடுத்து நீர் மற்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது.இந்நிலையில் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி - மாணவர் தற்கொலை: அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி அறிவுரை

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியினர், படிப்பில் சிறந்து விளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்வையில் பிற மாநில மாணவர்கள் பலர் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து சேர்க்கை பெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இக்கருத்தைக் கூறியுள்ளது.

தி இந்து(தமிழ்) - பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்தாகாது

படத்தின் காப்புரிமை Getty Images

எத்தனை மாதங்கள் பொருட்கள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

''சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநில உணவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், 3 மாதங்களுக்குப் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். வெளியூர்களுக்குச் சென்று பல மாதங்கள் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர்.'' என சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :