'ஆடுகள் மீது காட்டும் அக்கறை மனிதர்கள் மீது இல்லை'

  • துஷார் குல்கர்னி
  • பிபிசி மராட்டி

நாக்பூரிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த சுமார் 2,000 ஆடுகள் ஜெய்ன் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவியது..

பட மூலாதாரம், Getty Images

"ஆடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யவேண்டும் என ஜெய்ன் சமூகம் கோரிக்கை விடுக்கிறது. ஆனால் ஆடுகள் பால் கொடுப்பதில்லை என்ற நிலையில் ஆடுகளை வளர்ப்பவர்கள் என்ன செய்வார்கள்?

விலங்குகளைப் பற்றி அக்கறை கொள்பவர்கள், மனிதர்களைப் பற்றி கவலை கொள்வதில்லை என்று பா.ஜ.க எம்.பி. டாக்டர் விகாஸ் மகாத்மே பிபிசியிடம் கூறினார்.

ஆளுநர் சி. வித்யாசாகர் ராவை சந்தித்த ஷைனா என்.சி. மற்றும் மங்கள் பிரபாத் லோதா ஆகிய பா.ஜ.க தலைவர்கள் ஆடு ஏற்றுமதி தொடர்பாக பேசினார்கள். இது பா.ஜ.கவின் சித்தாந்தத்திற்கு முரணானது என்று ஷைனா என்.சி. குறிப்பிட்டார்.

ஏற்றுமதி மீதான தடையினால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஏற்றுமதி மீதான தடையை ஆதரிக்கும் ஜெய்ன் சமூகமோ, மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தின் அடிப்படையை கண்டறியும் முயற்சியில் பிபிசி ஈடுபட்டது.

"இது 2,000 ஆடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, விவசாயம் பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விதர்பாவில் விவசாயிகளுக்கு புதிய வாழ்வாதாரத்தை கொடுத்திருக்கிறது. நாக்பூரில் மட்டும் 46 ஆயிரம் செம்மறி ஆடுகளும் ஒரு லட்சம் வெள்ளாடுகளும் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

வெள்ளாடுகள் மற்றும் ஆண் செம்மறியாடுகளை ஏற்றுமதி செய்வதால் கால்நடை வளர்ப்பை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதுதான் இந்த முயற்சியின் நோக்கம்.

ஆனால் ஜெய்ன் சமூகத்தின் எதிர்ப்பால் தற்போது ஆடுகள் ஏற்றுமதி செய்வது தடைபட்டிருக்கிறது என்று கூறிய மகாத்மே, இது தொடர்பாக ஜெய்ன் சமூகத்தின் பிரதிநிதிகளிடையே பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்க்கிறோம், விவசாயிகளுக்கு எதிராக செயல்படவில்லை என்று கூறுகிறார் திகம்பர் ஜெய்ன் கமிட்டின் தலைவர் டாக்டர் ரிச்சா ஜெய்ன்.

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று கூறும் அவர், "அகிம்சையை கடைபிடிக்கவேண்டும் என மஹாவீரர் உலகிற்கு போதித்தார். எறும்பு ஒன்று இறந்தாலும் அதுகுறித்து வருத்தப்படுபவர்கள் சமண மதத்தினர். ஒரு லட்சம் கால்நடை விலங்குகள் கொல்லப்படுவதை அறிந்தபோது, அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது, அதனால் தான் நாங்கள் அரசை அணுகினோம்" என்று சொல்கிறார்.

"இந்தப் பிரச்சனையில் தீர்வு ஏற்படுவதற்காக பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக அரசியல் தலைவர்களும் நாக்பூரில் கூடியிருக்கின்றனர். அவர்கள் ஒத்துழைத்தால், இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்று டாக்டர் ஜெய்ன் கூறினார்.

"ஜெய்ன் சமூகம் நாக்பூரில் இருந்து ஏற்றுமதி செய்வதற்குத்தான் தடை கோரியிருக்கிறது, மும்பையில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு தடை கோரவில்லை. மும்பையில் இருந்து கப்பல்கள் மூலமாக ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது மும்பையின் கால்நடை வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும். ஆனால் நாக்பூர் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் ஏற்றுமதிக்கு தடை என்பது கேள்விகளை எழுப்புகிறது" என்கிறார் டாக்டர் மகாத்மே.

ஆட்டுப்பால் விற்பது நல்ல வியாபாரம்

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமே என்று திகம்பர் ஜெய்ன் கமிட்டியின் தலைவர் டாக்டர் ரிச்சா ஜெய்னிடம் கேட்டோம். அதற்கு அவர், "ஆட்டுப்பால் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆடுகளை வளர்த்து அதன் பாலை வியாபாரம் செய்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. ஆட்டுப்பாலில் உள்ள மருத்துவ குணங்கள், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதேபோல், செம்மறியாட்டின் ரோமங்களை விற்பனை செய்தும் நல்ல வருவாய் ஈட்டலாம்" என்று பதிலளித்தார்.

பால் மற்றும் ரோமத்தை விற்பனை செய்தால் லாபம் இல்லை

ரிச்சா ஜெய்னின் கூற்றை மறுக்கும் டாக்டர் மகாத்மே, விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை. விவசாயிகள், விவசாயத்துடன் சேர்ந்து வேறு தொழில்களிலும் ஈடுபடவேண்டுமென்று அரசே கருதுகிறது.

எதற்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன? மாமிசத்திற்காக கோழியையும், ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்பார்கள். இறைச்சிக்காக அவற்றை விற்பது பொருளாதார ரீதியாக பலனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், SPL

"ஆடு சிறிதளவே பால் கொடுக்கிறது, செம்மறி ஆட்டின் ரோமங்களை விற்பனை செய்வதும் பெரிய அளவில் வருவாய் கொடுப்பதில்லை என்பதால், ஆடுகளை ஏற்றுமதி செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏற்றுமதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், விலங்குகளைப் பற்றி கவலைப்படும் அளவு, மனிதர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை" என்று டாக்டர் மகாத்மே கூறுகிறார்.

ஜெய்ன் சமூகத்தினரின் மத உணர்வுகளை மதிக்கிறோம்

ஜெய்ன் சமூகத்தினரின் மத உணர்வுகளை மதிக்கிறோம். நான் சைவ உணவு உண்பவன், அதேபோல் சிலர் சைவ உணவு உண்பவர்களாக இருக்கலாம். ஆனால் அசைவ உணவு உண்பவர்களின் உணர்வை இந்தத் தடை பாதிக்காதா? உணவுக்காக கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் மகாத்மே.

ஜெய்ன் சமூகத்தினரின் மத உணர்வை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதுபோல, ஏழை மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்கவேண்டியது அவர்களின் கடமையல்லவா என்றும் அவர் கேட்கிறார்.

காணொளிக் குறிப்பு,

ஆடு கண்ணாடியை மோதி உடைக்கும் காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: