நாளிதழ்களில் இன்று: ‘மீனில் கலக்கப்படும் புற்று நோய் உண்டாக்கும் வேதிப் பொருள்’

  • 9 ஜூலை 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து: 'மீனில் கலக்கப்படும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்'

படத்தின் காப்புரிமை Getty Images

மீனில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருள் கலக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ். சிந்தாதரிப்பேட்டை மற்றும் காசிமேட்டில் வாங்கப்பட்ட 30 மீன் மாதிரிகளை சோதித்ததில் 11 மீன் மாதிரிகளில் ஃபார்மலின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீனை பதப்படுத்துவதற்காக இந்த ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்குகிறது அந்நாளிதழ் செய்தி.

இந்த பரிசோதனையானது டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் தி இந்து நாளிழுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினத்தந்தி: 'உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்'

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்கிற செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல்பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதிநீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால், தற்போது இந்த வழக்கை 3-வது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு அளித்த உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம்" என்று எழுதப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி சுந்தர், அந்த கடிதத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது'

கடற்பரப்பில் எல்லை மீறியதாக 4 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கும் போது கைது செய்யப்பட்டனர் என்று கூறும் அந்த நாளிதழ் செய்தி, அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியதாக விவரிக்கிறது . மூன்று நாட்களுக்கு முன் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்து தமிழ் திசை: 'பாயும் இந்தி.. சரியும் ஏனைய மொழிகள்!'

இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்து பத்திரிகையாளர் சோயப் தனியால் எழுதிய பத்தியை மொழி பெயர்த்து நடுப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்து தமிழ்.

"1971 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இந்தி மொழி 161% வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், அதே காலகட்டத்தில் நான்கு பெரிய திராவிட மொழிகள் அதில் பாதி அளவு (81%) வளர்ச்சியைத்தான் கண்டிருக்கின்றன. பட்டியலிடப்பட்ட மொழிகளில் இரண்டு மொழிகள் சரிவைச் சந்தித்திருப்பது திட்டவட்டமான எண்ணிக்கையில் தெரியவருகிறது. அவை உருது, கொங்கணி. இந்தியாவில் தற்போது உருது பேசுபவர்களின் எண்ணிக்கை 5.07 கோடிதான். உருது பேசுபவர்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள் என்றாலும், அம்மொழி வலுவான இடத்தில் இருப்பது இந்தி பேசும் பிராந்தியங்களில்தான். உருது மொழி அதிகம் பேசப்படும் இரண்டு பெரிய மாநிலங்கள் உத்தர பிரதேசமும், பிஹாரும். எனினும், இதே பகுதிகளில் தான் உருது மொழி குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்திருக்கிறது." என்கிறது இந்து தமிழ்.

"வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, ஐந்து தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி பெருமளவில் இடம் பெற்றிருப்பதற்குக் காரணமாகியிருக்கிறது. உதாரணத்துக்கு, 2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களின் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்பவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதும் தென்னகத்தில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம்." என்று விவரிக்கிறது அந்த பத்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: 'ப.சிதம்பரம் வீட்டில் நகை பணம் திருட்டு'

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில், தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப்போனதாக சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகார் மனு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"ப.சிதம்பரத்தின் மனைவி நளினி அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த பழங்கால தங்க நகைகள், மரகதம், மாணிக்கம் பதித்த நகைகள், பட்டுப் புடவைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியன காணாமல் போனதாக ப. சிதம்பரம் வீட்டின் நிர்வாக அதிகாரி முரளி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டில் பணிபுரியும் வெண்ணிலா மற்றும் விஜி ஆகிய 2 பெண்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த இரு பெண்களிடமும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குச் சென்ற சிதம்பரம் வீட்டின் நிர்வாக அதிகாரி முரளி, நகைகள் கிடைத்து விட்டதாகவும், அதனால் மனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: