அடுத்த குறி யுஜிசி? கொந்தளிக்கும் கல்வியாளர்கள்

  • 10 ஜூலை 2018
படத்தின் காப்புரிமை UGC

இந்தியாவில், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யுஜிசிக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை கல்வியாளர்கள், சமூக பயன்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலதரப்பினராலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் தொடங்கிய முயற்சி

இந்தியாவில் யுஜிசியை அமைப்பதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1956-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு பதிலாக வேறு புதிய அமைப்புகளை உருவாக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆட்சியில் இருந்தபோது முயற்சிக்கப்பட்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அப்போது ஆளும் காங்கிரஸில் அங்கம் வகித்த கட்சிகளும் அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கின. இதனால், அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. பிறகு அந்த முயற்சியில் அப்போதைய அரசு ஆர்வம் காட்டவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், தற்போது யுஜிசிக்கு மாற்றான அமைப்பு என்ற கருத்தாக்கத்துடன் புதிய யோசனையை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

கருத்துகளை வரவேற்கும் அமைச்சர்

இது குறித்து சமீபத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "இந்தியாவில் உயர் கல்வித் துறையில் மிக முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுகிறது;"

"இந்திய உயர்கல்வி ஆணையம்' என்கிற புதிய அமைப்பு கொண்டுவரப்படுகிறது. புதிய ஆணையத்துக்கான 14 பக்க வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை 'reformofugc@gmail.com' என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 7 வரை அனுப்பி வைக்கலாம்" என்றும் கூறியிருந்தார்.

வரைவு மசோதாவின் முக்கிய அம்சங்களாக, புதிய அமைப்பு, கல்வி விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய உயர் கல்வி ஆணைய வரைவு சட்ட மசோதா நகல் [355K]

கல்வியாளர்கள் கோரிக்கை

இந்தநிலையில், மசோதாவின் விவரங்கள், ஆங்கிலத்தில் உள்ளதால் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய மாநிலங்களில் பல தரப்பினராலும் இந்த வரைவு மசோதா பற்றி கருத்து வெளியிடுவது கடினம் என்று சில கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும், ஜூலை 7-ஆம் தேதிக்குள் வரைவு மசோதா பற்றி கருத்து வெளியிடுமாறு வழங்கப்பட்ட கால அவகாசம் மிகவும் குறைவு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோராவும், இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

அவசர கதியில் இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு செயல்படுத்த முயல்வதாக சந்தேகம் வோரா எழுப்பினார்.

இந்த நிலையில், வரைவு மசோதா பற்றிய கருத்துகளை ஜூலை 7-ஆம்தேதிக்கு பதிலாக ஜூலை 20-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று டெல்லியில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

இந்த தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆர். சுப்பிரமணியம், தமது சரிபார்க்கப்படாத ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவில்லாத காலக்கெடு

ஆனால், இதுபோன்ற வரைவு மசோதா மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முறைப்படி அறிக்கை வாயிலாகவோ அல்லது அரசாணை மூலமாகவோதான் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் பிபிசி கேட்டபோது, "நல்ல நோக்கத்துடன் இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது."

"பொதுமக்கள் வரைவு மசோதா குறித்து ஜூலை 20-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம். அவர்கள் ஆங்கிலம் மட்டுமின்றி, அவரவர் மாநில மொழிகளில் கூட கருத்து தெரிவிக்கலாம். அதை நாங்கள் மொழிபெயர்த்து பதிவு செய்து கொள்வோம்" என்று கூறினார்.

கல்வியாளர்கள் கருத்து

இந்த நிலையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மத்திய அரசின் வரைவு மசோதா பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பிபிசியிடம் பேசினார்.

"முதலாவதாக, இந்திய உயர் கல்வி ஆணையம் தொடர்பான வரைவு மசோதா மீதான மக்கள் கருத்துகளை, ஜூலை 7-ஆம் தேதி வரை மட்டுமே தெரிவிக்கலாம் என்றே மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளது" என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"வரைவு மசோதா பற்றிய முக்கிய அம்சங்கள் அடங்கிய பக்கங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. பிராந்திய மொழிகளில் அந்த அம்சங்களை அச்சடித்து வெளியிட்டு கருத்து கோரியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததே சமத்துவ கோட்பாட்டை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் பதினான்காவது விதிக்கு எதிரானதல்லவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"உயர் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றுக்குமானியம் வழங்கும் அதிகாரம் அனைத்தும் ஒரே அமைப்பின்கீழ்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் மானியம் தொடருவதற்கான தகுதிகளை நிர்ணயித்து அவற்றை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை மேற்கொள்ளலாம்.

ஆனால், தற்போது மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்திய உயர்கல்வி ஆணையத்திடம், ஆய்வு செய்யும் அதிகாரமும் இருக்கப் போவதில்லை; மானியம் வழங்கும் அதிகாரமும் இருக்கப் போவதில்லை" என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டினார்.

நியாயமற்ற நடவடிக்கை

"துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்ற வல்லுவர்களால் மட்டுமே கல்வியின் தரம் தொடர்பான முடிவுகளை எடுக்கவோ தகுதிகளை நிர்ணயிக்கவோ முடியும். அதைத்தான் யுஜிசி செய்து வருகிறது. ஆனால், திடீரென்று அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசரம் காட்டுவது நியாயமற்றது" என்று அவர் குறிப்பிட்டார்.

"ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு மாற்றாக, ஒரு புதிய அமைப்பை கொண்டு வரும்போது, அதன் அவசியத்தை விளக்க நாடு தழுவிய விவாதத்தை மத்திய அரசு நடத்தியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மாநில முதல்வர்களின் கூட்டத்தையோ, மாநில உயர் கல்வி துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்துக்கோ அழைப்பு விடுத்து, மாநிலங்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டாமா" என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பினார்.

"இந்திய அரசியலமைப்பு மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரங்களையும் உரிமைகளையும் பறிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. அரசியலமைப்பில் கூறப்படாத விஷயங்களை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

"யுஜிசி தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தை உருவாக்குவகு, ஒழுங்குபடுத்துவது, கலைக்கப்படுவது பற்றி தற்போதைய யுஜிசிக்கு அதிகாரம் கிடையாது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆபத்து

ஆனால், தற்போது மத்திய அரசு உத்தேசித்துள்ள வரைவுச்சட்ட மசோதா நிறைவேறினால், நூறாண்டுகளுக்கு முன்பு உருவான சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களும் அவை செயல்படுவதற்கான அனுமதியை புதிய ஆணையத்திடம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்" என்று கஜேந்திர பாபு கூறினார்.

இதன் மூலம் மாநில அரசுகள், அவற்றின் அதிகாரத்துக்கு உட்பட்டு உருவாக்கிய பல்கலைக்கழங்களை கலைக்கும் அதிகாரத்தையும் இந்திய உயர் கல்வி ஆணையத்திடம் வழங்கும் அத்துமீறிய செயலில் மத்திய அரசு ஈடுபட முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்த விவகாரத்தில் எந்தவொரு மாநிலமாவது அதன் அதிகாரத்தை மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டதாக தகவல் உள்ளதா? இது தொடர்பாக அரசியலமைப்பு ரீதியிலான சில கேள்விகளை எழுப்பி மத்திய மனித வள அமைச்சருக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், அது தொடர்பான பதிலையோ விளக்கத்தையோ மத்திய அரசு அளிக்கவில்லை" என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டார்.

"தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் மாநில உரிமையை பாதுகாக்க அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்திய உயர் கல்வி ஆணைய மசோதாவின் அம்சங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்" என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேட்டுக் கொண்டார்.

அரசு மீது குற்றச்சாட்டு

இதே கருத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வி. வசந்தி தேவியும் எதிரொலித்தார்.

இது குறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், "பொதுமக்கள், கல்வியாளர்கள், மாநில அரசுகள் போன்றவற்றை துச்சமாக மத்திய அரசு கருதும்போக்குதான் இந்த வரைவு மசோதா விவகாரத்தில் வெளிப்படுகிறது" என்றார்.

"உயர்கல்வித் துறையில் எந்த அளவுக்கு தன்னாட்சி நிலவுகிறதோ அந்த அளவுக்கு அதன் தரம், நம்பகத்தன்மை, சுதந்திரமான செயல்பாடு இருக்கும். ஆனால், இந்திய உயர் கல்வி ஆணையம் தன்னிச்சை அமைப்பாக இல்லாமல், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்புத் துறை போல செயல்படும் போக்கையே வரைவு மசோதா அம்சங்கள் உணர்த்துகின்றன" என்று வசந்தி தேவி சுட்டிக்காட்டினார்.

"மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் மூலம் நிதி ஒதுக்கீடுகள் கையாளப்பட்டால், அது எந்த அளவுக்கு பக்கசார்பின்றி வழங்கப்படும் என்பதற்கான நடைமுறைகளை விவரிக்கும் விளக்கம், மத்திய அரசிடம் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

"நாடு முழுவதும் சீரான தரத்தை புதிய உயர் கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்ய ஓராண்டும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் கல்வி அமைப்புகளுக்கு மூன்று ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்படும்.

அந்த தரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக கட்டுப்பாடுகள் மத்திய அரசுக்கு கொஞ்சம், கொஞ்சமாக மாறும். இதில் மாநில அரசுகள் தலையிட முடியாது" என்று அவர் கூறினார்.

தேர்வு முறையில் அரசியல் தலையீடு

"புதிய ஆணையம் அமைக்க வகை செய்யும் சட்டம், யுஜிசி சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு அமலாக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை உருவாக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களும் காலவதியாகும்.

அதுமட்டுமின்றி, தற்போதுவரை செயல்பட்டு வரும் யுஜிசியின் நிர்வாக அமைப்பில் மத்திய, மாநில அரசுகளால் தலையிட முடியாது.

ஆனால், புதிய ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரும் உறுப்பினர்களாக அமைச்சக அதிகாரிகளும் இருப்பார்கள் என்று புதிய வரைவு மசோதா கூறுகிறது. இத்தகைய சூழலில், பக்கசார்பற்ற தேர்வை இந்தக் குழு எப்படி வழங்கும் என்று எதிர்பார்க்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், "உத்தேச வரைவு மசோதாவில் ஆணையத்துக்கான ஆலோசனைக் குழுவும் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக அமைச்சரவை செயலாளரும், உறுப்பினர்களாக அமைச்சக இணைச் செயலாளரும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும், இதுவரை கல்வியாளர்கள் நிர்வகித்து வந்த யுஜிசிக்கு பதிலாக, அதிகாரிகளாலும், அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதை தெளிவாக்குகிறது" என்று வசந்தி தேவி கூறினார்.

"பல மொழிகள், கலாசாரம் அடங்கிய இந்தியா போன்ற நாட்டில், சீரான தரத்தை உருவாக்க ஆர்வம் காட்டும் மத்திய அரசு, நலிவடைந்த பிரிவினருக்கும் உயர்கல்வி கிடைப்பதற்கான திட்டம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

ஹிந்துத்துவாவை திணிக்கும் முயற்சியா?

"மொத்தத்தில் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை சீரான உயர் கல்வி என்ற பெயரில் நாடு முழுவதும் திணிக்கும் ஆபத்தான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுத்துவதாகவே தோன்றுகிறது" என்று வசந்தி தேவி தெரிவித்தார்.

"இன்றைய காலகட்டத்தில் தரமான உயர் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடிப்படையிலான கற்றல் திட்டத்தை முன்னோக்கி மத்திய அரசு செயல்படுவதாக கூறுகிறது.

ஆனால், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்த எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை" என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"எனவே, உலக அளவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தரமான கல்வியை வழங்கும் சேவையை மட்டுமே கல்வித் துறை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல் பொருளாதார துறை. இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து பொறுப்புணர்வுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்" என்று வசந்தி தேவி வலியுறுத்தினார்.

"டெல்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாக விவகாரத்தில் தலையிட்டு அதன் செயல்பாடுகளை பலவீனப்படுத்த பல முயற்சிகளை மத்திய மனித மேம்பாட்டுத் துறை சமீபத்திய காலங்களில் மேற்கொண்டதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

எனவே, தங்களுக்கு ஒத்து வராத உயர் கல்வி நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு, நிதி ஒதுக்கீட்டை நிறுத்தவோ மத்திய அரசுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் அமைப்பாகவே உயர் கல்வி ஆணையத்தை பார்க்கிறோம். மாநில அதிகாரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையின் எந்தவொரு அம்சத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார் வசந்தி தேவி.

தமிழக அரசின் நிலைப்பாடு

இந்த விவகாரத்தில் தமது உரிமையை மாநில அரசு விட்டுக் கொடுக்காது என்று மாநில சட்டப்பேரவையில் திமுக எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு சமீபத்தில் பதில் அளித்தது. ஆனால், வரைவு மசோதா மீதான தமது கருத்துகளை இதுவரை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பவில்லை.

இதற்கிடையே, "இந்திய மருத்துவ கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு போன்ற பழமைவாய்ந்த அமைப்புகள் எல்லாம் காலவதியானவை" என்று நீத்தி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிக்கவும், அவற்றின் கல்விச் சேவையை மேம்படுத்தவும் யுஜிசி தவறி விட்டது" என்று அவர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த கொள்கைசார் ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குநர் ஏ. பிரசன்ன குமார், "அவசர கதியில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள வரைவு மசோதா நடவடிக்கை, ஆரோக்கியமான கல்விக்கான நடைமுறையாக தென்படவில்லை" என்றார்.

அதிகாரிகள் மற்றும் அரசியல் திட்டங்களின் அங்கமாக இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தில் மாறும் ஆபாயகரமான போக்கு நிறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது போல மேலும் சில கல்வியாளர்களும் சமூக பயன்பாட்டாளர்களும் இந்திய உயர் கல்வி ஆணைய வரைவுச் சட்ட மசோதாவின் அம்சங்கள் மீது பலவிதமான ஆட்சேபகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், கல்விச் சீர்திருத்தம் செய்யாமல், பெயர் மாற்றம் ஒன்றை மட்டும் செய்து விட்டு, புதிய பாட்டிலில் பழைய மருந்து விற்பனை போல, மத்திய அரசின் நடவடிக்கை அமைந்து விடக் கூடாது என்றே கல்வியாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்திய உயர் கல்வி ஆணையம் - எப்படி செயல்படும்?

  1. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம் - 1956 நீக்கப்பட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டு வரப்படும்.
  2. 'தேசிய முக்கியத்துவம்' வாய்ந்த நிறுவனம் என்று நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் 'நிகர் நிலை' பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
  3. இந்த வரைவுச் சட்டத்தின் பிரிவு 1(2)-இன்படி இந்திய உயர்கல்வி ஆணையத்துக்கு, ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
  4. இந்த ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எந்தவொரு கல்வி நிறுவனமோ பல்கலைக்கழகமோ புதிதாக பட்டம் / பட்டயம் தொடர்பான கல்வியை வழங்க முடியும்.
  5. குறைந்த அரசுப்பணி, மேலதிக ஆளுகை அம்சத்தின்படி கல்வி நிறுவனங்களின் நிர்வாக விஷயங்களில் மத்திய அரசு தலையீடு இருக்காது.
  6. மானிய ஒதுக்கீடு விவகாரங்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையே கவனிக்கும். ஆணையம் கல்வி விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்கும்.
  7. ஆய்வு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், வெளிப்படையாக ஆய்வுகள் நடக்கும். கல்வியின் தர விவகாரங்கள் திறன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
  8. கல்வித் தர மேம்பாடு அம்சத்தின்படி, கல்வி நிறுவனங்களின் செயல்திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும், ஆசிரியர் பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். புதிய நிறுவனங்கள் தொடங்கவும், பழைய நிறுவனங்களை மூடவும் தகுதிகள் நிர்ணயிக்கப்படும். முக்கிய பதவிகளுக்கான நியமனங்களுக்கு தகுதிகள் நிர்ணயிக்கப்படும்.
  9. அதிகாரங்களின் அமலாக்க அம்சத்தின்படி, தரக் குறைவான, போலியான கல்வி நிறுவனங்களை மூடும் அதிகாரம் ஆணையத்துக்கு கிடைக்கும். விதிகளின்படி செயல்படாத நிறுவனங்களுக்கு அபராதமும் நிர்வாகிகளுக்கு சிறை தண்டனையும் கூட விதிக்க முடியும்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்