நிர்பயா வழக்கு : குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை DELHI POLICE

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மாவின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் ஷர்மா தலைமையிலான சட்ட அமர்வு, மூவரின் மரணதண்டனையையும் உறுதி செய்தது.

இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியான அக்ஷய் குமார் சிங் மேல் முறையீடு செய்யவில்லை.

ஆனால் அவரும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவிருப்பதாக அக்ஷய் குமார் சிங்கின் வழக்கறிஞர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார்.

மனுதாரர்களால், தீர்ப்பில் எந்தவித தவறும் இருப்பதாக நிரூபிக்க முடியாததால், வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்தவித மாறுதலும் தேவையில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தற்கொலை செய்து கொண்ட ராம் சிங்

மனுதாரர்களின் தரப்பை எடுத்துரைக்க தேவையான சந்தர்ப்பங்களையும், கால அவகாசத்தையும் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆறாவது குற்றவாளி 18 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதால், சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டு, மூன்று ஆண்டு கால தண்டனைக்கு பிறகு டிசம்பர் 2015ல் விடுவிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AFP

இதற்கு பிறகு சிறுவர் குற்றவியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தற்போது 16 வயதுக்கு மேலான சிறுவர்கள் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் வயது வந்தவர்களாக கருதப்படலாம் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிர்பயாவின் தாய்

மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை:

2012 டிசம்பர் 16: 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.

2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 மே: தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

இந்தச் செய்தி குறித்து மேலும்