'கும்பல் கொலை' குற்றம்சாட்டப்பட்டவர்களை பாஜக அமைச்சர்கள் அரவணைப்பது ஏன்?

  • ராஜேஷ் ஜோஷி
  • பிபிசி ஹிந்தி

முஸ்லிம்கள் மீது நரேந்திர மோதியின் அமைச்சர்கள் அதிக அன்பு காட்டுவது ஏன்?

மத்திய அமைச்சர் ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இனிப்பு கொடுத்து, மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் வெளியாவதை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் மத்திய அமைச்சர் அவமானம் என்று கருதவேண்டும். ஆனால் அதை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாட்டின் சட்ட நடவடிக்கைகளுக்கு தனது அர்ப்பணிப்பு என்று கருதுகிறார்.

ஜெயந்த் சின்ஹாவைத் தவிர வேறு பல மத்திய அமைச்சர்களும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை கெளரவித்துள்ளனர். ஜெயந்த் சின்ஹாவுக்கு முன்பே கலாசார அமைச்சரான முகேஷ் ஷர்மா, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தில் தாத்ரியில் நடைபெற்ற படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு மரியாதை செய்தார். அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லாக்கின் இறப்பை இயல்பான ஒன்றாக அவர் கருதுவதை காட்டுவதாக இருந்தது.

கடந்த ஆண்டு சாலையில் 'பசுப் பாதுகாவலர்கள்' குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்ட பஹ்லூ கானின் மரணம், 'இரு தரப்பினரின்' தவறு என்று கூறிய ராஜஸ்தான் மாநில மூத்த பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் கடாரியா, அந்தக் கொலையை சாதாரணமான சம்பவமாக காட்ட முயற்சித்தார்.

இந்த பாஜக தலைவர்களின் பட்டியலில் தற்போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் இணைந்துவிட்டார். கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், பிஹார் மாநிலம் நவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்களின் நலன் விசாரிக்க அங்கு அவர் சென்றார். பிறகு கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, இந்துக்களை நிதீஷ் குமார் அரசு ஒடுக்குவதாக குற்றம் சாட்டினார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருடன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

மத்திய, மாநில அமைச்சர்கள், வன்முறை செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்புகளிலும் கைகளில் ஆயுதங்கள் ஏந்தியவாறு நடைபோடும் பசுப் பாதுகாவலர்களுக்கு தலைமை ஏற்பவர்கள் தலை தூக்கித் திரியமாட்டார்களா?

கொலை செய்தவருக்கு மரியாதை

கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று ராம்கட் மாவட்டத்தில், 55 வயது அலிமுதீன் அன்சாரி என்பவர் சென்று கொண்டிருந்த வேனை பின்தொடர்ந்து சென்ற பசு பாதுகாப்பு குழு என்று கூறிக்கொண்ட கும்பல் ஒன்று, பாஜார் டாண்ட் பகுதியில் வேனை வழிமறித்து, தீவைத்து, அவரை பொது வெளியில் மக்கள் கண் முன்னே அடித்துக் கொன்றது.

அதற்கு காரணம் என்ன தெரியுமா? அலிமுதீன் அன்சாரி தனது வேனில் மாட்டிறைச்சி சப்ளை செய்பவர் என்ற சந்தேகம் அந்த கும்பலுக்கு ஏற்பட்டது.

படக்குறிப்பு,

கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட அலிமுதீன் அன்சாரி

ஆனால் அலிமுதீன் அன்சாரியை கொன்ற கும்பல் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டது போல், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையை கடைவிரிக்கும் கும்பல் அல்ல. மோதியின் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் இந்த கும்பலில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.

அலிமுதீன் அன்சாரியின் கொலையை விசாரித்த விரைவு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் பாஜகவின் உள்ளூர் தலைவர் நித்யானந்த் மஹ்தோ, பசு பாதுகாப்பு அமைப்பு மற்றும் பஜ்ரங் தள் செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பிணை கிடைத்ததும், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அவர்களுக்கு மரியாதை அளித்தது, அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறினார். அவர்களை நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளைப் போல நடத்துவதாகத் தெரிந்தது.

நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகள் மற்றும் அரசு ஆதரவு பெற்ற அமைப்புகள் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நட்பு பாராட்டினால், முகமது அக்லாக் அல்லது அலிமுதீன் அன்சாரி போன்றவர்களின் கொலைகளுக்கு நியாயம் கிடைக்கும் என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா?

படக்குறிப்பு,

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படித்த ஜெயந்த் சின்ஹா திறமையான பொருளாதார நிபுணர் ஜெயந்த் சின்ஹா

ஹார்வார்டில் படித்த ஜெயந்த் சின்ஹா

மகேஷ் ஷர்மா மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்கள். மத்திய அமைச்சராக பதவியேற்கும்போது மேற்கொண்ட உறுதிமொழியின்படி, குற்றம் செய்பவர்களுக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது.

எனவே, இதுபோன்ற குற்றம் சாட்டப்பவர்களுக்கு மலர் மாலைகளை அணிவித்தபிறகு, விவகாரம் ஏற்படாமல் சமாளிப்பதற்காக, சனிக்கிழமையன்று ஜெயந்த் சின்ஹா வெளியிட்ட செய்தியில், "எல்லா விதமான வன்முறைகளையும் நான் வெளிப்படையாக கண்டிக்கிறேன். எந்தவித சட்டவிரோத செயல்களையும் செய்பவர்கள் குறிப்பாக குடிமக்களின் உரிமைகளை மீறும் செயல்களை செய்பவர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு தொலைகாட்சி நாடகத்தில் 'இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, உயிருடன் இருப்பவர்களையோ, இறந்தவர்களையோ பிரதிநிதிப்படுத்தவில்லை' என்று பொறுப்புத் துறப்பு வெளியிடுவது போன்றதே இந்த அறிவிப்பு.

ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கிறார் ஜெயந்த் சின்ஹா. இவர்கள் மீதான குற்றத்தை இன்னும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருடைய செய்தி பொதுமக்களை எப்படி சென்றடையும்? அவருக்கு என்ன நன்மையளிக்கும் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் காரணமாக, தங்களின் கைகட்டப்பட்டிருப்பதாக பல முறை அவர் உணர்ந்திருந்தாலும், தனது செயலுக்கு பொறுப்புத் துறப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த விஷயம் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கமுடியாது.

ஜெயந்த் சின்ஹா பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளிடமிருந்து அரசியலை கற்கவில்லை. அவர் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். சர்வதேச புகழ்பெற்ற ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் அரசியல் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இருந்தாலும், நடைமுறையில் பஜ்ரங் தள், பசு பாதுகாப்பு அமைப்புகள் போன்ற அமைப்புகளும் இந்திய அரசியலுக்கு தேவை என்பதையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இதனால்தான், படுகொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்கிறதோ இல்லையோ, அவர்கள் குற்றமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தனது செயல்களால் கோடிட்டு காட்டுகிறார்.

பிரதமரோ திட்டுகிறார், அமைச்சர்களோ அரவணைக்கின்றனர்

இதற்கு நேரிடையான காரணம் என்னவென்றால் இந்தியாவில் இந்துத்வா அரசியலை நீடித்து நிலைக்க செய்ய வேண்டுமெனில், பசு பாதுகாவலர்கள் போன்ற கையில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீதிகளில் சுற்றவேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் போற்றப்படவேண்டும்.

ஒருவேளை அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகள் கொடுத்த பிறகும், ஒருவேளை அவர்கள் பிடிபட்டுவிட்டால், நிரபராதியாக வெளியே கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த காரணத்தினாலும், அவர்களின் மன உறுதி குறைந்துவிடக்கூடாது.

பசுப் பாதுகாவலர்களின் மன உறுதி சீர்குலைந்தால் அல்லது அவர்களுடைய சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சிக்கலில் போய் மாட்டமாட்டார்கள்.

ஆனால் இந்த பசுப் பாதுகாவலர்களின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியா தவறாக சித்தரிக்கப்படக்கூடாது, பிரதமர் மோதியின் பிம்பம் கெட்டுவிடக்கூடாது.

இதை கவனத்தில் வைத்துதான் பிரதமர் நரேந்திர மோதி, ஏதாவது ஒரு கருத்தரங்கில் பேசும்போது பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராக ஒரு சில கண்டனங்களைப் பதிவு செய்கிறார். ஆனால் தடியடிகளின் வலிமையுடன் பசுவை பாதுகாக்கும் அமைப்பினர், இப்படி பேசுவதும், தங்கள் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் பிரதமரின் அரசியலமைப்பு கடமை என்பதை அறிவார்கள்.

அதனால்தான் ஜெயந்த் சின்ஹா மற்றும் மகேஷ் சர்மா அல்லது குலாப் சந்த் காடாரியா விடுக்கும் சங்கேத செய்திகளையும் அவர்கள் புரிந்துக் கொள்கின்றனர்; பிரதமர் மோதியின் வசவுகளையும் செல்ல திட்டுக்களாக நினைத்து தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்கின்றனர்.

பிரதமரின் கண்டனமும், அவரது அமைச்சர்களின் தட்டிக் கொடுத்தலும், அரசியல் நடவடிக்கைகளின் அங்கமே. ஏனெனில் அரசின் பிரதம அமைச்சரான நரேந்திர மோதியின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கும் அமைச்சர்கள், பசு பாதுகாவலர்களை அவ்வப்போது விமர்சிக்கும்போது ஏன் அதை மட்டும் பின்பற்றுவதில்லை? அரசியல் சதுரங்க உத்தியில் வெள்ளை காய்கள் மட்டுமல்ல, கருப்பு காய்களும் நகர்த்தப்பட்டால்தானே விளையாட்டு நியாயப்படுத்தப்படும்.

சாலைகள் இரவு நேரங்களில் செல்லும் லாரிகளை நிறுத்தி பசுக்கள் அல்லது எருமைகள் கொண்டு செல்லப்படுகிறதா என்று பரிசோதிப்பார்கள் பசுப் பாதுகாவலர்கள். அப்போது பலவீனமான முஸ்லிம்களை அவர்கள் கண்டறிந்தால், அவர்களை அங்கேயே அடித்து துவைத்தெடுத்துவார்கள். அது கொலையிலும் சென்று முடியலாம்.

படக்குறிப்பு,

பசு பாதுகாவலர்களின் ஒரு குழுவினர்( கோப்புப்படம்)

முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது அரசியலின் அத்தியவசியமான தேவை போலும். இந்துக்களை ஒன்றிணைத்து அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு அவர்களிடம் வேறு எந்த தந்திரமும் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்தியாவின் எதிரிகள் என முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை அடையாளம் காட்டுதில் அவர்கள் வெற்றியடையாவிட்டால், சாதி சண்டைகளால் தங்களுக்குள்ளே பிரிந்து கிடக்கும் இந்து சமுதாயத்தை எப்படி விரைவாக இணைக்கமுடியும்?

உண்மையில் இந்த நாட்டிற்கும் இந்துக்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் தொடர்ந்து சதி செய்கிறார்கள்; அவர்களின் சூழ்ச்சிகளால் இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டவேண்டும். தீவிரவாத, கடும்போக்கு கொண்ட, பழமைவாத, பெண்களுக்கு எதிரான, வளர்ச்சிக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும்.

இந்த பட்டியலில் தங்களின் வசதிக்கு ஏற்றாற்போல் காலத்திற்கு தக்கவாறு பெயர்கள் சேர்க்கப்படும். காஷ்மீரில் கற்கள் வீசுபவர்கள், பாகிஸ்தானின் ஹஃபீஸ் சயீத், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதீன், ஐஎஸ்ஐ, சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் பசு-மாடுகள் விற்பனை செய்யும் முஸ்லிம்கள், இந்து பெண்களை திருமணம் செய்து மத மாற்றம் செய்யும் முஸ்லிம் ஆண்கள், அதிக குழந்தைகளை பெற்று இஸ்லாமிய மக்கள் தொகையை அதிகரிப்பவர்கள்... என்று புகார்கள் புதிதாக வரும்.

இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் தொடர்பான அச்சத்தை தொடர வைத்துக் கொள்வதற்காக, இஸ்லாமியர்கள் மத்தியில் இந்துக்களைப் பற்றிய பயம் குறையாமலும் பார்த்துக் கொள்ளவேண்டியதும் இவர்களுக்கு முக்கியமானது தானே?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: