போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா: எதிர்கட்சிகள் எதிர்ப்பு

அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்களை விசாரிக்க வழிசெய்யும் லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்ததச் சட்டம் போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்புச் செய்துள்ளன.

படத்தின் காப்புரிமை facebook/M.K.Stalin

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குடிமைப் பணி உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அதனை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட, லோக் ஆயுக்தா அமைப்பை ஜூலை 10ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைக்கான கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று லோக்ஆயுக்தா மசோதாவை மாநில பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

தமிழக லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய அம்சங்கள்

அதன்படி, இந்த லோக் ஆயுக்தாவின் தலைவர் நீதித் துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருப்பார் என்றும் இந்த அமைப்பின் நான்கு உறுப்பினர்களில் இருவர் சட்டத் துறை சார்ந்தவராக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆளுனர் லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்வார். இந்த உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது நிறைவடையும்வரை பணியில் இருப்பார்கள்.

லோக் ஆயுக்தா, தான் பெறும் புகார்களின் அடிப்படையில் யாரையும் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். சாட்சியங்களை அழைத்து விசாரிப்பதோடு, நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களையும் கேட்டுப்பெறும்.

லோக் ஆயுக்தாவில் தவறாகப் புகார் செய்கிறவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையோ, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமோ விதிக்க முடியும். யார் மீது பொய்ப் புகார் செய்யப்படுகிறதோ, அவருக்கு இழப்பீடு அளிக்கவும் வேண்டும்.

தவிர, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றம்செய்யப்பட்டிருந்தால் அதனை லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பானது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். ஆகவே, உரிமையியல் நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது.

தமிழக லோக் ஆயுக்தாவின் மசோதா வரம்பிற்குள் முதலமைச்சர் வருவாரா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

படத்தின் காப்புரிமை லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?பட

தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

இந்த லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் திங்கட்கிழமையன்று பிற்பகல் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை வரவேற்றார். ஆனால், இந்த மசோதாவின் வரம்பிற்குள் முதலமைச்சர் வருவாரா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லையென்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசு ஒப்பந்தங்கள், நியமனங்கள் குறித்து விசாரிக்க முடியாது என்று இருப்பதை மாற்ற வேண்டுமென்றும் தகவல் அளிப்பவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பிரிவுகளைச் சேர்க்க வேண்டுமென்றும் இந்தத் திருத்தங்களைச் செய்ய தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கோரினார்.

ஆனால், பிற மாநிலங்களில் இருப்பதைப் போலவேதான் தமிழக லோக் ஆயுக்தா சட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்வுக் குழுவுக்கு சட்டத்தை அனுப்ப முடியாது என்றும் கூறினர்.

இதனையடுத்து, தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

தொடர்புடைய செய்தி

தமிழகத்தில் உள்ள சட்டப்பஞ்சாயத்து மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியவை இந்த மசோதாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெறாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறும் இந்த அமைப்புகள், அடையாளத்தைத் தெரிவிக்காமல் புகார் செய்ய முடியாது என்பதை மாற்ற வேண்டுமென்று கூறியுள்ளன.

மேலும் நியமனங்கள், இடமாற்றங்களில் அதிக ஊழல் நடக்கும் நிலையில் அவை பற்றி விசாரிக்க முடியாது என்பதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளன.

தவிர, முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய தேர்வுக் குழுவில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதையும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்படாதது குறித்து தாக்கல்செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், லோக் ஆயுக்தா அமைக்கப்படாததற்கான காரணத்தை ஜூலை பத்தாம் தேதி தெரிவிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இருக்கிறது; ஆகவே லோக் ஆயுக்தா தேவையில்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஜூலை 10ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், தமிழக அரசு இந்தச் சட்டத்தை இன்று நிறைவேற்றியுள்ளது.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்