அமித்ஷாவுக்கு எதிர்ப்பு: அரசியல் சகிப்பின்மையா? கட்சி மீதான வெறுப்பா?

  • 10 ஜூலை 2018
அமித்ஷா படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்துக்கு வரும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக சமூக ஊடகப் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ''இப்படி ஒரு பிரசாரத்துக்கான அரசியல் நியாயங்கள் இருக்கின்றனவா? இல்லை இது அரசியல் சகிப்பின்மையைக் காட்டுவதா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

''சுற்றுச் சூழலுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களுக்கும் திரைமறைவில் மத்திய அரசின் இயக்கமே காரணம் என்று பெரும்பான்மை தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் எண்ணுவதாலேயே, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தமிழக வருகையும், கருத்துகளும் பெரும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேற்படி இவரது வருகையானது, அரசியல் கட்சிகளுக்கிடையே ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துமே ஒழிய எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தாது.'' என்கிறார் சக்தி சரவணன் என்னும் நேயர்.

''நியாயங்களும் இல்லை மாறாக அரசியல் சகிப்பின்மையைக் காட்டுகிறது. அமித்ஷா ஒரு தேசிய கட்சியின் தலைவர் அவ்வளவுதான். தனது கட்சி சார்ந்த நிகழ்ச்சிற்கு வந்திருக்கிறார்.இதற்கு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் கட்சிகளுக்கு இடையே கொள்கை ரீதியிலான மோதல்கள் தான் இருக்க வேண்டும். அது தான் அரசியல் நாகரீகம். அரசியலில் தனிநபர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது சரியல்ல.'' என்கிறார் நெல்லை முத்து செல்வம்.

''அமித் ஷா வரவு தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை'' என்பது முகமது ஹானுவின் கருத்து.

''இங்கு அவர் வருவதால் எந்த பயனும் இல்லை. மக்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் தமிழகத்துக்குக் கொண்டு வந்துவிட்டு, மக்களைப் பிரிக்க தமிழகம் ஒன்றும் உ.பி அல்ல, இது பெரியார் மண்'' என்கிறார் பாலகுமரன்.

``நெருக்கடியான நிலையில் பல பிரச்சனைகளுக்கு வராத அமித்ஷா இப்போது மட்டும் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தவறில்லை. இவர்களுக்குக் கட்சி ஆட்சி மட்டும்தான் முக்கியம்'' என்கிறார் சுப்பு லட்சுமி.

''அமித்ஷா ஒன்றும் தீவிரவாதி இல்லையே. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அது அவர்கள் கட்சி விஷயம். அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.'' என்பது சரோஜா பாலசுப்ரமணியனின் கருத்து.

``அரசியலில் சகிப்புத்தன்மை இல்லவே இல்லை அரசியல் செய்வது என்பது வியாபாரம் செய்வதைப்போலாகிவிட்டது`` என்கிறார் ராஜமலர்.

`` தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் கட்சியின் தலைவரை ஏன் சகிப்புதன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்?`` என கேள்வி எழுப்புகிறார் சஹா அரசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: