நீட் தேர்வில் நீதிமன்றத் தீர்ப்பால் புதிய திருப்பம்: இன்னொரு கலந்தாய்வா, இன்னும் காலதாமதமா?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், அதற்குரிய 196 மதிப்பெண்களை, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு வரவேற்பையும் அதே நேரத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு கலந்தாய்வு நடக்குமா அல்லது இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்து இன்னும் கூடுதலான கால தாமதத்துக்கான சூழலை உருவாக்குமா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகளில் மொழிமாற்ற பிழைகள் இருந்ததால் அதற்குரிய 196 மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்குவதோடு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் புதிய தரவரிசை பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வை நடத்த பட்டியலை வழங்கிவிட்டது. அதன் அடிப்படையில் 3,500 நபர்களுக்கு மருத்துவ சீட் அளிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்கு, 196 மதிப்பெண்களை வழங்கவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதால், புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறுமா அல்லது புதிய மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு சீட் வழங்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பான புதிய தீர்ப்பு குறித்து, தமிழக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது சிபிஎஸ்இயின் முடிவை பொருத்து கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.

''சிபிஎஸ்இ அளிக்கும் தகுதிப் பட்டியலைக் கொண்டுதான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது புதிய தீர்ப்பு வந்துள்ளதால், மருத்துவ படிப்பிற்காக ஏற்கெனவே தேர்வான மாணவர்களுக்கு மறுகலந்தாய்வு நடத்தவேண்டுமா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடக்குமா என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் சொல்லமுடியும்,'' என்று கூறினார்

படக்குறிப்பு,

டி.கே.ரங்கராஜன்

தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றாலும், நடைமுறையில் அவர்களுக்கு சீட் வழங்கப்படுமா என்ற குழப்பம் உள்ளது என்கிறார் மருத்துவர் எழிலன்.

மாணவர்களுக்கு குழப்பம்

''தமிழ்வழியில் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்காக புதிதாக சீட் அதிகரிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். இந்திய மெடிக்கல் கவுன்சிலின் ஒப்புதல் வேண்டும். தற்போது சீட் கொடுக்கப்பட்டுள்ள 3,500 மாணவர்களின் நிலை என்ன என்பதும் புதிராக உள்ளது. தற்போது நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்வான 96 மாணவர்களுக்கு இந்த ஆண்டு சீட் வழங்கப்பட்டுள்ளது,''என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டு, அந்த வழக்கு முடிந்த பின்னர்தான் முடிவு தெரியும் என்பதால் மருத்துவ மாணவர்களுக்கு குழப்பமான ஆண்டு இது என்றார்.

தமிழ்வழி தேர்வர்களுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை, தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'டெக் பார் ஆல்' தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்பிரகாஷ் வரவேற்பதாக கூறுகிறார்.

''கேள்விகளில் பிழை இருந்ததால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும் என்பது நியாயமான முடிவு. நீதிமன்ற உத்தரவு பல மாணவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 196மதிப்பெண்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில், பலருக்கும் மருத்துவ சீட் கிடைக்கும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி. சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்திற்குச் சென்றாலும், அங்கும் ஏழை,கிராமப்புற மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்,'' என்றார் ராம்பிரகாஷ்.

வாய்ப்புகள் என்ன?

நீட் தேர்வு கேள்வித்தாளில் இருந்த மொழிமாற்றப் பிழைகள் காரணமாக, தமிழ்வழித் தேர்வர்களுக்கு 196 மதிப்பெண்களை வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருந்தாலும், அந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், மருத்துவ படிப்பிற்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகளின் நிலை என்னவாகும் என டிகே ரங்கராஜனின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஷாஜி சலனிடம் கேட்டோம்.

''சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி செய்தால், மீண்டும் மாணவர்களின் நேரத்தைத்தான் அவர்கள் வீணடிப்பதாக அமையும். மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால், தவறான கேள்விக்கு மதிப்பெண்களை அவர்களாகவே வழங்கியிருக்கவேண்டும். தற்போது வந்துள்ள தீர்ப்பின்படி, முன்னர் வெளியான தரவரிசை முழுவதுமாக மாற்றப்படவேண்டும். இனி இந்த வழக்கின் உத்தரவுகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்யவேண்டும் என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சிபிஎஸ்இக்கு உள்ளன. மாணவர்களைப் பொறுத்தவரை காத்திருப்பு மட்டுமே அவர்களுக்கான வாய்ப்பு,'' என்றார் வழக்கறிஞர் ஷாஜி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :