தொப்பை இருந்தால் வேலை இல்லை - கர்நாடக காவல் துறை உத்தரவு

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி இந்தி

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் 14,000 பேர் உடனடியாக தங்கள் உடல் எடையைக் குறைக்கப் போராட வேண்டும் இல்லாவிட்டால் வேலையை இழந்துவிட்டு வாழ்க்கையுடன் போராட வேண்டிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Jim Pozarik

கர்நாடக மாநில ரிசர்வ் போலீசின் படைப்பிரிவுத் தலைவர்கள் தொப்பை உள்ள காவலர்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றும் பயிற்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

"அவர்கள் உடலின் சர்க்கரை அளவு மற்றும் பிற குறியீடுகளை நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு கண்காணிக்கத் தொடங்கினோம். விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கும் கவனக்குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் எனும் உத்தரவு பொருந்தும்," என்று பிபிசியிடம் பேசிய கர்நாடக மாநில ரிசர்வ் போலீசின் கூடுதல் டி.ஜி.பி பாஸ்கர் ராவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெருத்த வயிறு உடைய காவலர்களை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தியாவில் காவல் துறையில் பணியில் உள்ளவர்களுக்கு சுவாச மற்றும் இதய கோளாறுகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாகப் போக்குவரத்துக் காவலர்களுக்கு இப்பிரச்சனைகள் அதிகம் உள்ளன.

எனினும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்படுவதற்கு வலிமையான காரணங்களை இருப்பதாகக் கூறுகிறார் ராவ்.

"கடந்த 18 மாதங்களில் 153 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 24 பேர் சாலை விபத்துகளில் இறந்தவர்கள். ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மற்றவர்களை வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய இதய நோய்கள், நீரிழிவு உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர்," என்கிறார் அவர்.

ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் சட்டம் - ஒழுங்கு பணிகள், சமூக பதற்றம் உள்ள பகுதிகள் என எங்கு பணியில் அமர்த்தப்பட்டாலும், அவர்களுக்கு பாரபட்சமின்றி உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அவர்களுக்குப் பெரும்பாலும் அரிசியால் செய்யப்பட்ட உணவுகள் அல்லது ஃபிரைடு ரைஸ் வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இதய மற்றும் சுவாச நோய்கள் காவலர்களுக்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன

"அரிசியில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்டபின் அவர்கள் புகைக்கவும், மது அருந்தவும் செய்கிறார்கள். விளையாட்டு உள்ளிட்ட உடலுக்கு வேலை கொடுக்கும் செயல்கள் எதிலும் ஈடுபடாதபோது அவர்கள் உடல் குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்கள். பின்பு அவர்கள் சீருடையே அவர்கள் உடலுக்கு பொருந்தாமல் போய் விடுகிறது. எனவே, படைப்பிரிவுத் தலைவர்கள் தங்களுக்குள் கீழ் பணியாற்றுபவர்களின் பாடி மாஸ் இண்டெக்ஸ் (Body Mass Index) குறியீட்டை வாரம் தோறும் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்," என்கிறார் பாஸ்கர் ராவ். ஒவ்வொரு படைப்பிரிவின் தலைவருக்குக் கீழும் 25 காவலர்கள் இருப்பார்கள்.

கர்நாடக ரிசர்வ் போலீஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நீச்சல், யோகா மற்றும் பிற விளையாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுவதாக ராவ் தெரிவிக்கிறார்.

"அவர்கள் உடல் நலத்துடன் இருந்தால், அவர்கள் வாழ்நாள் அதிகரிக்கிறது. நாங்கள் அவர்கள் குடும்பங்களுக்கு உடல் நலம் மிக்கவர்களைத் திரும்பக் கொடுக்க முடியும். அறுபது வயதை அவர்கள் அடையும்போது மூன்று இளம் ஆண்களை அவர்கள் சமாளிக்க முடியும் எனும் அளவுக்கு நாங்கள் அவர்களைத் தயார் செய்ய முயல்கிறோம். இதுதான் எங்கள் கொள்கை, " என்று முடித்தார் ராவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :