பணிக்கு போகாத பெண்களை அவமதிக்கிறதா இந்த சமூகம்?

  • அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
பணிக்கு போகாத பெண்களை மதிப்பதில்லையா இந்த சமூகம்?

பட மூலாதாரம், Lauren DeCicca

உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்தும், பலராலும் இங்கு மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு ஜீவன் என்றால் அது யார் தெரியுமா? திருமணமாகி வீட்டில் இருக்கும் பெண்கள். அலுவலக பணிக்கு செல்லவில்லைதான் என்றாலும், அவர்கள் வீட்டில் செய்யும் வேலைகள் அதைவிட சவாலானவை.

வேலைக்கு சென்று எட்டு மணி நேரப்பணி செய்து முடித்துவிட்டு, வார இறுதியில் ஓய்வு எடுத்துக்கொள்வது நமக்கெல்லாம் பெரிதாக தெரிகிறது.

ஆனால், ஒரு நாள் முழுவதும், மற்றவர்களுக்காக மட்டுமே வேலை செய்துவிட்டு, அவர்களுக்கென தகுந்த மதிப்பும் அளிக்கப்படாமல், விடுப்பு, ஊதியம் என்று எதையுமே எதிர்பார்க்காமல் இருக்கும் வீட்டில் உள்ள பெண்கள், ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கும் எவரையும் விட பெரியவர்கள்தான். சமமாக அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே என்பது அவர்களது ஆழமான வாதம்.

"நீ வீட்டில் சும்மாதான இருக்க" என்று பலரும் அவர்களை பார்த்து பயன்படுத்தும் வார்த்தை, முக்கியமாக கணவர்கள் கூறும் இந்த சொற்கள் வீட்டுப் பெண்களின் மனதில் ஆரா வடுவாக மாறுகிறது.

கணவரை பார்த்து இதை எளிமையாக வீட்டில் வளரும் குழந்தையும் கற்றுக் கொள்கிறது. அப்பா அலுவலகம் சென்று வேலை பார்க்கிறார், அம்மா வீட்டுல சும்மாதான் இருக்காங்க என்ற எண்ணம் குழந்தைக்கும் வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

இப்படியாகத்தான், நாம் அழிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு விஷயமும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இங்கிருந்துதான் தொடங்குகிறது பாலின பாகுபாடு என்ற விஷயமும்.

'வீட்டு வேலை என்பது சுலபமானது அல்ல'

வீட்டில் அப்படி என்னதான் வேலை என்று கேட்கிறவர்களுக்கு….

வீட்டில் அப்படி என்னதான் வேலை இருக்கிறது உங்களுக்கு. நினைத்த நேரத்தில் தூங்கலாம்.. கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்ட பிறகு என்ன வேலை இருக்கப்போகிறது வீட்டில் இருக்கும் இந்த பெண்களுக்கு என்று கேள்வி கேட்பவர்களுக்கு கோபத்துடன் விவரிக்கிறார் செங்கல்பட்டை சேர்ந்த ஜெயந்தி.

வீட்டில் இருக்கும் பெண்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கெல்லாம் இளக்காரமாகத்தான் இருக்கும். என்றைக்காவது ஒருநாள் நாங்கள் என்ன செய்கிறோம், என்ன வேலை இருக்கு, நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்க யாருமில்லை. எல்லா ஆண்களையும் நான் சொல்லவில்லை, ஏதோ ஓரிரு இடங்களில் மனைவிக்கு மரியாதையளித்து, சமமாக பார்க்கக் கூடிய ஆண்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால் அதன் சதவீதம் மிக மிகக் குறைவே.

காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ள வேண்டும். அதுதான் முதல் வேலை. என் கணவரோ அல்லது வேலைக்கு போகும் எல்லா ஆண்களும் 5 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மோட்டார் போட்டுவிட்டு பால் வாங்கிவந்து காலை உணவை சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இதை சொல்வது மிக எளிது. காலை உணவை செய்வதெல்லாம் ஒரு வேலையா என்று. ஆம், நீங்கள் அலுவலகம் சென்று பணி பார்ப்பதைவிட இது பெரியது தான். ஒரு நாள் வழங்கிய காலை உணவை மீண்டும் அடுத்த நாள் செய்தால், வீட்டில் அனைவரும் முகம் சுளிப்பார்கள்.

பட மூலாதாரம், Robert Nickelsberg

ஒவ்வொரு நாளும் புதுப்புது உணவிற்கு நான் ஹோட்டல்தான் நடத்த வேண்டும். காலையிலேயே மதிய உணவையும் தயாரிக்க வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் எடுத்துக் கொள்ளும் ஸ்ட்ரெஸ், அலுவலக பணியிடத்தில் நீங்கள் உணரும் ஸ்ட்ரெசுக்கு சமமானதுதான்.

மதிய உணவை கணவருக்கும் குழந்தைக்கும் கட்டி தந்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டால் வேறென்ன வேலை என்று தானே நினைக்கிறீர்கள்.

என்னை போன்ற பல நடுத்தர குடும்பங்களில் வீட்டிற்கு பணியாட்கள் வைத்து கொள்ளும் வசதி எல்லாம் இருக்காது.

காலை 9 மணிக்கு மேல், துணிகளை ஊற வைத்து துவைக்க வேண்டும். இந்த வேலை எந்த அலுவலக பணியை விடவும் குறைந்தது இல்லை. இரண்டு மணி நேர வேலைதான் என்றாலும், துணி துவைப்பது எளிதானதல்ல.

பாத்திரங்களை தேய்த்து காய வைக்க வேண்டும். இதெல்லாம் செய்வதற்குள் மதியம் 12, 1 மணி ஆகிவிடும்.

மதிய உணவை சாப்பிடும் போதே, இரவுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும், ஒருசில சமயம், என்ன சமைப்பது, என்ன காய்கறி வாங்குவது என்று யோசித்தே என் பாதி வாழ்க்கை முடிந்துவிட்டதை போல உணர்வேன்.

குழந்தை பள்ளியில் இருந்து வந்த பிறகு ஏதேனும் சாப்பிட குடுத்துவிட்டு பள்ளிப்பாடங்களை கற்று கொடுக்க வேண்டும். நானும் படித்திருக்கிறேன். அது இதற்கு மட்டுமாவது உதவுகிறது என்பதில் மகிழ்ச்சி.

இரவு உணவிற்கு சமைத்து மீண்டும் பாத்திரங்களை கழுவி வைத்துவிட இரவு பத்து மணி ஆகும் போதே, அடுத்த நாள் காலை உணவு என்ன என்ற சிந்தனை வந்துவிடும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியாமல் இருக்கும் பல ஆண்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேளா வேளைக்கு உணவும், குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணும் இருந்தால் போதும்.

மன அழுத்தம்

அலுவலகம் முடிந்து வந்து, என்ன வேலை செய்தாய், உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கும் ஆண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஒரு சில சமயம், நாம் இதற்குதான் பிறந்தோமா என்று சலிப்புதட்டி, மண அழுத்தத்தில் இருக்கும் வீட்டுப் பெண்களின் எண்ணிக்கை அதிகம். சில வருடங்கள் கழித்து நாம் என்ன வாழ்ந்தோம் என்று யோசித்து பார்த்தால், அழுகை மட்டுமே வரும்.

இதையெல்லாம் தாண்டி, கரண்டு பில் கட்டுவது, காய் வாங்க செல்வது, மளிகை, என்று அனைத்தும் வீட்டில் இருக்கும் பெண்கள் மேல்தான் விழும்.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

இதனை படித்துவிட்டு, கணவர் சம்பாதித்தால் தானே இதற்கெல்லாம் பணம் வரும். பணம் இல்லாமல் நீங்கள் வாழ்ந்துவிட முடியுமா என்று சிந்திக்கும் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் இன்றும் வாழ்கிறோம்.

பணம் இல்லாமல் இதெல்லாம் சாத்தியம் இல்லைதான். ஆனால், அதற்காக எங்களை குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சமைக்காமல் இந்த வேலைகளை செய்யாமல் பணத்தை மட்டும் வைத்து நீங்கள் வாழ்ந்துவிட முடியுமா?

எந்த வேலையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் சிறிய பாராட்டும், உதவியும்தான்.

காலம் மாறிக் கொண்டுதான் வருகிறது. பெண்கள் வேலைக்கு சென்று ஆண்கள் வீட்டில் இருக்கும் பல வீடுகளும் இங்கு உள்ளன. ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும்கூட, ஆண்களை பல பெண்களும் சமமாகவே நடத்தி வருகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.

பணிக்கு செல்பவர்கள் மட்டும்தான் வெற்றி பெற்றவர்களா?

இந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் சூழ்நிலையின் காரணமாகவே வீட்டில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தையை பார்த்துக் கொள்ளவோ, பணியிட மாற்றத்திற்கு விருப்பம் இல்லாமலோ வேறு ஏதாவது சந்தர்பங்களில்தான் இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள் என்கிறார் மனநல மருத்துவரான நப்பிண்ணை.

மதிப்பு கொடுக்காமல் இவர்களை நடத்துவதால் பெண்களுக்குள் ஒரு 'தாழ்வு மனப்பாண்மை' உருவாகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

"அடுத்தடுத்த என்ன வேலை என்று வீட்டில் இருக்கும் பெண்கள் யோசித்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சின்ன சின்ன வேலை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது"

பணிக்கு போகிறவர்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள், வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள் என்ற மனப்பான்மை இங்கு பரவலாக இருக்கிறது.

'ஹவுஸ் வைஃப்' என்ற வார்த்தை மாறி, 'ஹோம் மேக்கர்' என்ற வார்த்தை தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. வார்த்தை மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர, ஆண் சமுதாயம் இன்னும் மாறவில்லை.

"நீ வீட்டில சும்மாதான உட்காந்திருக்க, பேங்குக்கு போயிட்டு வந்துரு... சும்மாதான இருக்க கரண்டு பில்ல கட்டிட்டு வந்துரு…" என்ற வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை செய்வதில் பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அனால் 'நீ வீட்டில் சும்மா தான இருக்க' என்று கூறி இதை செய்ய சொல்லும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது என்றும் நப்பிண்ணை தெரிவிக்கிறார்.

இதுவேதான் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உதாரணமாக நம் வார்த்தை உபயோகங்களை கவனிக்க வேண்டும். "குழந்தையிடம் அம்மா சும்மாதான் வீட்டுல இருப்பாங்க, அவங்ககிட்ட கேளு என்பதை விட, அம்மா வீட்டில் ஃபரீயாக இருக்கும்போது அவங்ககிட்ட கேளு" என்று கூற வேண்டும் என்கிறார் அவர்.

பெண்கள் வீட்டில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஆண்கள் கவனிக்க வேண்டும். வேலைக்கு போகிறது, பணம் சம்பாதிக்கிறது மட்டும்தான் வெற்றி என்று நினைக்கூடாது.

எண்ணம் மாற வேண்டும்

ஆணும், பெண்ணும் சமம் என்று வாய் வார்த்தையில்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். மாற்றம் என்ற ஒன்று இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. சென்னை, டெல்லி, மும்பையில் இருக்கும் பெண்களை மட்டும் பார்க்காதீர்கள். கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைத்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்கிறார் நப்பிண்ணை.

"என் தாயோ என் மனைவியோ வீட்டில் இருப்பதினால்தான் நான் நிம்மதியாக வெளியில் சென்று வேலை பார்க்க முடிகிறது என்ற எண்ணம் ஆண்களுக்கு வரவேண்டும்."

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பெருமை உண்டு. யார் என்ன வேலை செய்தாலும் அதனை மதிக்கக் கற்று கொள்ள வேண்டும். தனி மனிதனை மதிக்கக்கூடிய பக்குவம் வரவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

ஹவுஸ் ஹஸ்பன்ட்ஸ்

சந்தர்ப்ப சூழ்நிலைகளால்தான் இங்கு பெரும்பாலான ஹவுஸ் ஹஸ்பன்ட்ஸ் உருவாகியிருக்கிறார்கள். பெண்ணை வேலைக்கு அனுப்பிவிட்டு, "நீ போ, நான் குழந்தையை பார்த்துக்கிறேன்" என்று கூறக்கூடிய ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சதவீதம் மிக மிகக் குறைவே.

ஆனால், "இந்த வேலைகளை எல்லாம் ஆண் செய்தால் அது தியாகமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு ஒரு பரந்த மனப்பான்மை உள்ளதென பலரும் கொண்டாடுகிறார்கள். இதையே ஒரு பெண் செய்தால் அது அவள் கடமை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: