நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா?"

ஆஸ்பத்திரியில் நைட்டி அணிந்தபடி ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், மருத்துவர் சாந்தாராம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வங்கி கணக்கு வைத்திருந்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மகாலட்சுமி ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம், சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை செய்தார். சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதா இரட்டை ஜடை போட்டு, நைட்டி அணிந்தபடி ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ காட்சி வெளியானது குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயஸ்ரீகோபால், ”அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. அதேவேளையில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது இரட்டை ஜடை- நைட்டி அணிந்தபடி தான் இருந்தார். அவருக்கு நான் சிகிச்சை அளித்ததால், எனக்கு அது தெரியும். பத்திரிகையில் வெளியான புகைப்படமும் அதுபோலவே இருந்தது' என்று பதில் அளித்துள்ளார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'காட்டுப்பள்ளி துறைமுகமும் சூழலியல் கேடும்'

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் சூழலியல் கேடுகள் ஏற்படலாம் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. பழவேற்காடு ஏரிக்கு மட்டுமல்லாமல், உப்பளங்களும் இதனால் மோசமாக பாதிக்கப்படும். கடல் அரிப்பும் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக சூழலியலாளர்கள் சொல்வதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி. இந்த திட்டத்தின் மதிப்பு 52, 431 கோடி ரூபாய்.

இந்து தமிழ்: "நீட் தேர்வு: மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு"

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்கிறது இந்து தமிழ் செய்தி.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாளில் தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்பியுமான டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில், "தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு 2 வார காலத்துக்குள் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது'' என்று அவர்கள் கூறியதாக விளக்குகிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'தூத்துக்குடி சம்பவம்: நீதிமன்றத்தில் 17 துப்பாக்கிகள் ஒப்படைப்பு'

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சேகரித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் அணிந்திருந்த உடைகள், அவர்கள் மீது பாய்ந்த குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் உலகராணி தலைமையிலான போலீஸார், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்:1) நடுவர் சங்கரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பொருள்களை சென்னையில் ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ரகங்களிலான 17 துப்பாக்கிகள் மற்றும் 149 தோட்டாக்களை சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் சங்கரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :