கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்

பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக 16 சிறுமிகளை தனி அறையில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அனைவரும் நான்கு முதல் ஆறு வயது மட்டுமே உடைய மழலையர் வகுப்பு மாணவிகள் என்று கூறப்படுகிறது.

அனைத்து மாணவிகளும் 'செயல்பாட்டு மையத்தில்' வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் கூறி உள்ளது பள்ளி நிர்வாகம்.

பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அழைக்க சென்றபோது, அவர்களை வகுப்பறையில் காண முடியவில்லை என்று கூறும் பெற்றோர், குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறுகிறார்கள்.

தங்கள் பிள்ளைகள் கட்டடத்தின் அடிதளத்தில் 7.30 மணி முதல் 12.30 மணி வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக போலீஸிடம் அளித்த புகார் மனுவில் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அடிதளம் அதிகம் வெப்பமாக இருந்ததாகவும், தங்களது பிள்ளைகள் 'பசியுடனும், தாகத்துடனும்' இருந்ததாகவும் கூறுகிறார்கள் பெற்றோர்.

விசாரணைக்கு பிறகே இதற்கு காரணமானவர்கள் யார் என்று தங்களால் கூற முடியும் என்று போலீஸ் பிபிசியிடம் கூறியது.

சில பெற்றோர் தாங்கள் முன்பே பள்ளிக் கட்டணம் செலுத்திவிட்டதாக கூறுகிறார்கள்.

என்.டி.டி.வி இணையதளத்திடம், "நான் கட்டணம் செலுத்திய ரசீதை காட்டிய பின்பும் கூட, பள்ளி முதல்வர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை" என்று பெற்றோர் ஒருவர் கூறி உள்ளார்.

டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்