தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமித் ஷா உரையில் இவ்வளவு ஓட்டைகளா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஊழியர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது சரியான கணக்குத்தானா?

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கியிருக்கும் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் சக்தி கேந்திர காரியகர்த்தாக்கள் எனப்படும் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்தித்து, தேர்தல் பணிகள் குறித்துப் பேசிவருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள சக்தி கேந்திரப் பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியைக் கடுமையாகச் சாடியதோடு, கடந்த நான்காண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்தான் தமிழகத்திற்கென மத்திய அரசிலிருந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

முரணான மோதி, அமித் ஷா கணக்குகள்

முதலாவதாக, தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் 13வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு 94 ஆயிரத்து 540 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று தமிழகத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோதி, 13வது நிதி ஆணையத்தின் கீழ் தமிழகத்திற்கு 81 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் 14வது நிதி ஆணையத்தின் கீழ் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

கட்சித் தலைவர் அமித் ஷா சொல்வதற்கும் பிரதமர் நரேந்திர மோதி சொல்வதற்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது ஒரு புறமிருந்தாலும் இந்தக் கணக்கே தவறானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வரி வீதம் அதிகரிப்பை பாஜக கொடுத்ததாக கூறலாமா?

வரி தொகுப்பில் 32 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என 13வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், 14வது நிதி ஆணையம் இதனை 42 சதவீதமாக உயர்த்தியது. இதனால், இயல்பாகவே மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு அதிகரித்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், 14வது நிதி ஆணையத்தை அமைத்தது, பா.ஜ.கவுக்கு முன்பு ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

2013ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி 14வது நிதி ஆணையம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை பா.ஜ.க. எப்படி தன்னுடைய சாதனையாக சொல்ல முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஓப்பீட்டில் குறைந்துள்ள தமிழக நிதி

"இதைவிட அபத்தமான வாதம் இருக்கவே முடியாது. 14வது நிதி ஆணையத்தை அமைத்தது காங்கிரஸ் ஆட்சி என்பது ஒரு புறமிருக்க, முந்தைய ஆணையம் வழங்கிய நிதி சதவீதத்தோடு ஒப்பிட்டால், 19 சதவீதம் தமிழகத்திற்குக் குறைவாகக் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை" என்கிறார் பொருளாதார நிபுணரும் நிதி ஆணையங்களின் நிதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இதற்கு முந்தைய நிதி கமிஷன்களில் 1971ஆம் வருட மக்கள் தொகைக் கணக்கிற்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், 14வது நிதி கமிஷன்தான் முதல் முறையாக 2011ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது.

இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல, ஒழுங்காக நிதியை நிர்வகிப்பது முந்தைய நிதி கமிஷன்களில் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆனால், 14வது நிதி கமிஷனில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இதன் காரணமாக, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைக்காமல் போனது என்று சுட்டிக்காட்டுகிறார் நீலகண்டன்.

இது தவிர, பா.ஜ.க. ஆட்சியில் 2017ஆம் ஆண்டில் என்.கே. சிங்கைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட 15வது நிதிக் கமிஷன், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எந்த மதிப்பும் வழங்காமல், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கே முழு மதிப்பையும் வழங்க முடிவுசெய்தது.

இதனால், 1970களின் மத்தியில் இருந்து மக்கள் தொகையைக் குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்ட தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு கடுமையாக பாதிக்கப்படும்.

"இதையெல்லாம்விட, அமித் ஷா ஏதோ தன்னுடைய பணத்தை எடுத்து மக்களுக்குக் கொடுப்பதைப்போல அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பது மிக மோசமானது. அது மாநில மக்களின் வரிப்பணம். அவர்களுக்குச் சேர வேண்டிய பணம்" என்கிறார் நீலகண்டன்.

பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்கு கடிதம்

இந்த விவகாரம் குறித்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நிதிக் குழுவின் புதிய பரிந்துரைகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தொகையில் 19.14 சதவீதம் குறைவாகவே கிடைக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனால் வருடத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பை தமிழ்நாடு எதிர்கொள்ளும் என்பதையும் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.

கைவிடப்பட்ட மோனோ ரயில் திட்டத்திற்கு முழு செலவையும் கொடுத்ததா?

அடுத்ததாக, அமித் ஷா சென்னை மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவந்த நிலையில், புதிதாக இரு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென 2012ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதற்கட்டமாக பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா இடையில் 20.68 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்துத் துவங்குமென அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 3,267 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 2014 நவம்பரில் ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலில் இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் மாநில அரசும், மாநில அரசின் ஏஜென்சிகளும் திட்டத்தில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் மத்திய அரசு இதற்கென நிதியுதவி ஏதும் அளிக்காது என்றும் கூறப்பட்டது.

2015 மே மாதத்தில் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்திற்கான viability gap fundingஐ (விஜிஎஃப்) செய்யும்படி வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அரசின் இந்த விஜிஎஃப் நிதி என்பது ஒட்டுமொத்த திட்டச்செலவில் அதிகபட்சமாக 20 சதவீதமாகும். 3,267 கோடி ரூபாய் திட்டச்செலவு கொண்ட மோனோ ரயில் திட்டத்திற்கான விஜிஎஃப் நிதி என்பது சுமாராக 650 கோடி ரூபாயாக அமையும்.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், மோனோ ரயில் திட்டமே மாநில அரசால் கொள்கை ரீதியில் கைவிடப்பட்ட திட்டம் என்பதுதான்.

கைவிடப்பட்ட திட்டத்திற்கு, அதுவும் மாநில அரசு - தனியார் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படவிருந்த திட்டத்திற்கு எப்படி முழுத் தொகையும் மத்திய அரசு அளித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு விடையில்லை.

"இந்தத் திட்டத்திற்கான சாத்திய அறிக்கையிலேயே, திட்டத்தில் பெரும் இடர்பாடுகள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு, மோனோ ரயில் திட்டமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட ஒரு திட்டத்திற்கு, முழுத் தொகையையும் மத்திய அரசு வழங்கியிருப்பதாகச் சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்கிறார் தமிழக திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன்.

வறட்சி நிதியிலும் அமித் ஷா வழங்கிய குளறுபடி கணக்கு

இதற்கு அடுத்தபடியாக, 2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோது 1,750 கோடியும், வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய இழப்பீடாக 256 கோடி ரூபாயும் கொடுத்ததை அமித் ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதற்காக நிவாரண உதவியாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் கோரினார்.

அதேபோல, 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வார்தா புயலினால் பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு 22 ஆயிரத்து 573 கோடி நிதியுதவி அளிக்க வேண்டுமென்றும் உடனடி உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க வேண்டுமென்றும் தமிழக அரசு கோரியது.

ஆனால், வறட்சி நிவாரண நிதியாக 1748 கோடி ரூபாயும், வார்தா புயல் சேதங்களுக்காக 266 கோடி ரூபாயும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன.

இது மாநில அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 சதவீதம். மாநில அரசு கோரிய நிதி எவ்வளவு என்பது தற்போது மக்கள் மனதில் இருக்காது என்பதால், அதனை மத்திய அரசின் ஒரு சாதனையாக அமித் ஷா முன்வைத்திருக்கிறார்.

மருத்துவ கல்லூரிகளுக்கு உதவியது மத்திய அரசா? பாஜகாவா?

அடுத்ததாக, தஞ்சாவூர், நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமித் ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மத்திய அரசு, நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்த்ரி ஸ்வஸ்தீய சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை 2006ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவது ஆகியவை மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும்.

இந்தத் திட்டம் துவங்கியதிலிருந்து இதுவரை நான்கு கட்டங்களாக மருத்துவக் கல்லூரிகள் தேர்வுசெய்யப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டது.

முதல் இரண்டு கட்டங்களில் மதுரை மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நான்காவது கட்டத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நான்கு கட்டங்களிலும் சேர்ந்து இதுவரை இந்தியா முழுவதும் 71 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதில், நான்கு கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை.

இந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தத் திட்டத்தில் நிதியுதவி அளித்ததை, தமிழகத்திற்கு அளித்த சலுகையாக அமித் ஷா தன் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, இந்தத் திட்டமும் 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது.

அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்து

"இந்தக் கூட்டத்தில் அமித் ஷா நிதிக் குழு குறித்து பேசியது முழுக்க முழுக்க அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது. நிதிக் குழுக்கள் என்பவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின் கீழ் சுயேச்சையாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டவை. அதன் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, தங்கள் கட்சி ஒதுக்கீடு செய்வதாக பேசுவதே தவறு" என்கிறார் நாகநாதன்.

கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துவரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததாகக் கூறுவது ஏற்க முடியாதது என்கிறார் அவர்.

தவிர மத்திய அரசுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் வட மாநிலங்களுக்கே வழங்கப்படுகின்றன என்கிறார் நாகநாதன்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நி்தி ஆயோக் உருவாக்கப்பட்டது. இதனால், திட்டக்குழுவின் நிதியுதவியோடு நடத்தப்பட்டுவந்த திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :