தமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Horacio Villalobos - Corbis

தினமணி

உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1809-ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-ல் சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

1948-ல் இந்தியாவில் முதன்முறையாக எழும்பூர் மருத்துவமனையில் கண் வங்கி துவங்கப்பட்டது. பாரம்பரியமிக்க எழும்பூர் கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. 1985 முதல் இதுவரை 2.6 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினமலர்

நாமக்கல் மாவட்டம் குன்னிபாளையத்தில் காவிரி ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியர் உட்பட 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு அப்பகுதி மக்கள் ஒரு மனு அனுப்பியுள்ளார்கள். மணல் அள்ளுவதன் மூலம் குடி நீர் ஆதாரம், விவசாயிகள் பாதிக்கப்படுவர் ஆகவே குவாரியை தடை செய்ய வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுத்தனர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படவே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மணல் அள்ளும் பணி முழுவீச்சில் துவங்கியுள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தினத்தந்தி

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் மீன்களில் 'பார்மலின்' என்ற ஒருவகை ரசாயனப்பொருள் சேர்க்கப்பட்டதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும். மீன்களில் எந்த ரசாயன பொருளும் சேர்க்கப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

"தமிழகத்துக்கு மொத்த தேவையில் 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை ரசாயனங்களை பயன்படுத்தி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்."

"அண்டை மாநிலங்களில் மீன்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் எந்தப்பகுதிக்கு மீன்கள் கொண்டு வந்தாலும், அவற்றை கடும் சோதனைக்கு பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது," என அவர் தெரிவித்துள்ளார்.

தி இந்து

தூத்துக்குடியில் வன்முறை வெடித்த நூறாவது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு முந்தைய நாள்களின் போராட்டம் குறித்த அறிக்கைகள், காணொளிகள் மற்றும் ஆவணங்களை அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சி.டி செல்வம் மற்றும் ஏ.எம் பஷீர் அகமது அடங்கிய அமர்வு தூத்துக்குடி காவல்துறையின் புலனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளது. இந்த விவரங்களை ஜூலை 18-க்குள் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

டைம்ஸ் ஆஃப் இந்தியா

நடப்பு சாம்பியன் ஃபெடரர் காலிறுதியில் தோல்வி

விம்பிள்டென் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து ஃபெடரரின் ஒன்பதாவது விம்பிள்டன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற முயற்சி இம்முறை முடிவுக்கு வந்துள்ளது.

ரஃபேல் நடால் 7-5, 6-7, 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் டெல் போட்ரோவை வென்றுள்ளார். நான்கு மணி நேரம் 48 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆறாவது முறையாக விம்பிள்டன் அரை இறுதியில் விளையாட நடால் தகுதி பெற்றுள்ளார். ஜோகோவிச்சை அரை இறுதியில் எதிர்கொள்கிறார் நடால்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்