'எட்டு வழிச் சாலையால் 700 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்: திட்ட இயக்குநர்

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையில் பயணிப்பதால் எரிபொருள் சேமிப்பின் மூலம் வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியுமென இந்தத் திட்டத்தின் இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

8 வழிச்சாலை

சென்னை - சேலம் இடையில் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய பசுமைவழி விரைவுச் சாலையை எதிர்த்து, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பி.வி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில், இந்தச் சாலைக்கான திட்ட இயக்குநர் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை ஏன் முக்கியம் என்பதற்கு அரசின் சார்பாக பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து சேலத்திற்கு ஏற்கனவே திண்டிவனம் -உளுந்தூர்ப்பேட்டை வழியாக ஒரு சாலையும் காஞ்சிபுரம் - வேலூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி வழியாக ஒரு சாலையும் இருந்தாலும் அதிகரித்துவரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாக விரைவிலேயே இந்தச் சாலைகள் நகரத்தின் நடுவில் உள்ள சாலைகளைப் போல நெரிசல் மிகுந்ததாகிவிடும் என்பதால் புதிய சாலை திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படக்குறிப்பு,

அளவை செய்யப்பட்ட நிலங்களில் அதிகாரிகளால் கல் நடப்பட்டுள்ளது

தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டுமானால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள பல கட்டங்களை இடிக்க வேண்டிவரும் என்பதாலேயே புதிதாக ஒரு சாலை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

277 கி.மீ. நீளத்திற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த புதிய விரைவுச் சாலை மூலம் சென்னை - சேலம் இடையிலான பயண நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறையுமென்றும் ஒவ்வொரு லாரியும் இதன் மூலம் 15 லிட்டர் டீசலையும் கார்கள் ஆறு லிட்டர் பெட்ரோலையும் சேமிக்க முடியும் என்றும் இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 10.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 லட்சத்து 85 லிட்டர் டீசல் சேமிக்கப்படும் என்றும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இது அதிகார துஷ்பிரயோகம்" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள்

காணொளிக் குறிப்பு,

"இது அதிகார துஷ்பிரயோகம்" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள்

இந்த டீசல் சேமிப்பின் மூலம் மட்டும் வருடத்திற்கு 700 கோடி ரூபாய் மிச்சமாகுமென்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டீசல் பயன்பாடு குறைவதால் கார்பன் வெளியிடுவது குறைந்து, சூழல் பாதுகாக்கப்படும் என்றும் வந்தவாசி, போளூர் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தொழில்வளர்ச்சி ஏற்படுமென்றும் திட்ட இயக்குநரின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ நெருக்கடிகளின்போது திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி உடனடியாக சென்னைக்கோ, சேலத்திற்கோ செல்ல முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

படக்குறிப்பு,

மக்கள் புரிதலுடன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க தென் கொரியத் தமிழர்கள் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்,

கல்வராயன் மலைக் காடுகள் வழியாக சாலை செல்வதைத் தவிர்க்க மாற்றுப்பாதையைத் திட்டமிட வேண்டும்,

வனவிலங்குச் சரணாலயங்களுக்கு 10 கி.மீ. தூரத்திற்கு அருகில் சாலை வரக்கூடாது, இந்தச் சாலையை அமைப்பதால் பல்லுயிர்ச் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பின் மூலம் ஆராய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தச் சாலைக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் திட்ட இயக்குநர் தனது மனுவில் கூறியுள்ளார்.

எட்டு வழிச் சாலையால் எட்டாமல் போகுமோ வாழ்க்கை

காணொளிக் குறிப்பு,

மலைகளையும் விவசாய நிலங்களையும் அழிப்பது நியாயமா? - குமுறும் நிலவரம்பட்டி மக்கள்

ஆகவே, பல்லுயிர்ச் சூழலில் ஏற்படும் தாக்கத்தை அளவிட தன்பாதிலுள்ள ஐஐடியின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கு 21 லட்ச ரூபாய் பணமும் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் திட்ட இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலம், 1956ஆம் வருடத்தின் நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை இடையே திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பசுமைவழி விரைவுச் சாலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது.

இந்தச் சாலைக்காக தங்களது நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை, தமிழக அரசு தொடர்ந்து கைதுசெய்தும் வருகிறது.

முதல்வர் சொல்வது போல் மக்கள் தாமாக நிலம் தரவில்லை: ஆவேசமாக மறுக்கும் பெண்

காணொளிக் குறிப்பு,

எட்டு வழிச்சாலை: ''முதல்வர் எடப்பாடி இப்படி பொய் சொல்லலாமா?''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :