ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு

  • நந்தினி சுந்தர்
  • பேராசிரியர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

ஜெர்மனியில் 1934-1945 காலகட்டத்தில் அரசிற்கு எதிரானவர்களை ஒழிக்க நாஜிக்கள் நடத்திய  மக்கள் நீதிமன்றம் மிகவும் பிரபலம். இது குறித்த ஒரு கண்காட்சி பெர்லினில் தற்போது நடந்து வருகிறது. அச்சுறுத்தக் கூடிய  இந்நிகழ்வு இந்திய பார்வையிலிருந்து பார்க்கும்போது பரிச்சயமான ஒன்றாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இதை நீதிமன்ற கட்டமைப்பு நோக்கில் பார்க்க முடியாது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தன்மை அடிப்படையில் பார்க்க முடியும்.

அது ஒரு ஹிட்லர் காலம்

கம்யூனிசம் தொடர்பான துண்டு அறிவிக்கைகளை தான் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ்காரருக்கு வழங்கிய சுரங்கத் தொழிலாளி, புகழ்பெற்ற நாஜி பிரமுகர்களை நகைச்சுவையாக கிண்டலடித்த வங்கி ஊழியர், ஹிட்லரை கேலி செய்து பாடல் இயற்றிய ஒலிப்பதிவு நிபுணர், ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பிய நில வணிக முகவர் என இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மாபெரும் துரோகம், தேச ரட்சகனின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது, எதிரிகளுக்கு உதவியது ஆகியவை மரண தண்டனைக்கான காரணங்களாக கூறப்பட்டன.

பயணச்சீட்டு எடுக்காத குற்றத்துக்காக 22 வயதான ஸ்விஸ் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஹிட்லரை கிறிஸ்துவ எதிரி மனித குலத்தின் எதிரி எனக்கூறி கொல்ல திட்டமிட்டதாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்காக மரண தண்டனை அறிவிக்கப்பட்டு அதற்கான காரணங்களும் முன் வைக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜெர்மனி நாட்டின் ரட்சகரை அழிக்க முற்பட்டார் என்றும் அந்த ரட்சகர் 8 கோடி ஜெர்மானிய மக்களின் எல்லையற்ற அன்புடன் மரியாதையுடன் நன்றியுணர்வை பெற்றவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன் எப்போதையும் விட வலிமையும் உறுதியான தலைமைப் பண்பும் அவருக்கு தேவையாக இருந்து என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன் நடந்த ஒரு கண்காட்சி நாஜிக்களின் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு குறித்ததாக இருந்தது.

அரசுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். மற்றவர்கள் பணிந்து நடந்துகொள்ள வைக்கப்பட்டனர்.

நாஜிக்களுக்கு ஆதரவாக இருந்த சில பத்திரிகையாளர்கள் போருக்கு பின் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முற்பட்டனர். ஆனால் அவர்கள் இறுதியில்  அடையாளம் காணப்பட்டனர்.

உருவாக்கப்படும் தோற்றம்

இந்தியாவில் இப்போது நகர்ப்புற மாவோயிஸ்டுகள் பரவலான அளவில் தொடர்ந்து விரிவடைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

சில தொலைக்காட்சிகளும் போலீஸும் இணைந்து இத்தோற்றத்தை உருவாக்கிவருகின்றன. இது ஃபாசிஸ காலத்தை திரையில் விரைவாக ஓட விட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரதமரையே அதாவது நாட்டின் ரட்சகரையே கொல்லத்துணிந்த திட்டம் பற்றிய கடிதம் முதன் முதலில் டைம் நவ் சேனலில  ஒளிபரப்பாகிறது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் முதல் கம்யூனிஸ தோழர் பிரகாஷ் ஆகியோரின் கடிதங்கள் எனக்கூறி மூச்சுவிட இடைவெளி இன்றி ரிபப்ளிக் சேனலில் ஒளிபரப்பானது.

இந்த கடிதங்களில் பெயர்கள் தெளிவாக இருப்பதுடன் பணப்பரிமாற்றம், காஷ்மீரத்து பிரிவினைவாதிகளுடனான தொடர்புகள், கல் எறிபவர்கள், மனித உரிமை பேசும் வழக்கறிஞர்கள், ஜெ.என்.யூ  டிஐஎஸ்எஸ் மாணவர்கள், யுஎபிஎவுக்கு எதிரான போராட்டங்கள் ஏன் காங்கிரஸ், இப்படி  பாஜகவும் போலீஸும் விரும்பாத பல விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தப்பும் தவறுமாக...நடந்திருக்க சற்றும் வாய்ப்பில்லாத தகவல்களே இதில் உள்ளன. இதன் நோக்கம் எதிர்ப்பாளர்களை இழிவு படுத்துவது, அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை பேசுபவர்களை மோசமாக சித்தரிப்பது ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

இது வரை ஏராளமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மற்றவர்கள் என ஏராளமானோர் மீது வழக்குகள் திணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை வெளிக்கொணர பல வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஆதிவாசிகள் தலித், அரசியல் கைதிகளுக்காக வாதாடும் சுரேந்திர வாட்லிங், ஸ்டெர்லைட் பிரச்னையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய எஸ்.வாஞ்சிநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டனர். மனித உரிமைகள் காக்க போராடிய ஹைதராபாத் வழக்கறிஞர் சிக்குது பிரபாகர் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா சிறையில் அபத்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு மாதங்கள் இருந்தார். தோழர் சுதாவை ரிபப்ளிக் டிவி ஒரு துஷ்ட சக்தியாக சித்தரித்தது. ஆனால் இவர் பெரிதும் மதிக்கப்படும் தொழிற்சங்கவாதி   ஆவார். மேலும் மனித உரிமை வழக்கறிஞர், பியுசிஎல்லின் தேசிய செயலாளர் என பன்முகங்கள் கொண்ட இவர் தற்போது தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

வழக்கறிஞர்களும் தப்பவில்லை

தொழில்ரீதியான வழக்கறிஞர்களுக்கான விதிகளை பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ஒருவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட முறையில் கருதினாலும் அந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்காக வாதாடலாம் என்கிறது விதி.

போதிய ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது சட்டம்.

இந்த சட்டத்துக்கு விசுவாசமாக வழக்கறிஞர்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது விதி.

இந்த விதியை பின்பற்றும் வழக்கறிஞர்களைத்தான் போலீஸ் முறையற்ற வகையில் குறிவைக்கிறது. மற்ற வழக்கறிஞர்கள் சர்ச்சைக்குரிய அல்லது முக்கிய வழக்குகளில் ஆஜராகாமல் அச்சுறுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நமக்கு சொல்லப்பட்டுள்ள சட்டம் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருந்தாலும் சரி வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் சரி... சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது.

டெல்லியில் மாணவர் தலைவர் கனையா குமாரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

வழக்கறிஞர்கள் இனியும் தாமதியாமல் தங்கள் தொழிலுக்கு வந்த ஆபத்தை தடுக்க ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.

கடந்த ஜூன் 6ம் தேதி மகாராஷ்டிராவில் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஆங்கில பேராசிரியர் சோமா சென், எழுத்தாளர் சுதிர் தவாலே, வன உரிமை ஆர்வலர் மகேஷ் ரவுத், சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர் ரோனா வில்சன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தகவலை தருவதற்காகவே இந்த கைது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் பின்னணியில் பீமா கோரேகான் வன்முறையில் இவர்களை தொடர்பு படுத்தியதுடன் ராஜிவ் காந்தியை போன்றே மோடியையும் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்கு துணை போனார்கள் என்ற  அபத்தமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

கைது செய்ய ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள், சட்டம் போன்றவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை வெளிக்காட்டவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிமா கோரேகான் வன்முறைக்கு நிஜமாகவே காரணமாக இருந்த மிலிந்த் எக்பொடே, சம்பாஜி பிடே ஆகியோருக்கு தண்டனையும் இல்லை. மக்கள் நலனுக்காக செயல்படவேண்டிய போலீஸ் அவர்களின் எஜமானர்களுக்காக வாலாட்டுவதையே இது காட்டுகிறது. எஜமானர்கள் ஆட்சியில் தொடர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய  இவர்கள் தயாராக இருக்கிறார்கள்

(நந்தினி சுந்தர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பிப்பவர்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :