பேரிடர் சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

  • விக்னேஷ். அ
  • பிபிசி தமிழ்

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கல்லூரியின் இரண்டாவது தளத்தில் இருந்து மாணவி விழுந்து இறந்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது குறித்து தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை ஆலோசகர் ஹரி பாலாஜி பிபிசி தமிழிடம் பேசினார்.

பட மூலாதாரம், Hari Balaji V. R.

படக்குறிப்பு,

வேலூரில் 2015இல் நடைபெற்ற அணுக்கசிவின்போது செய்யவேண்டிய மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை

பேரிடர் மேலாண்மையை எவ்வாறு முறையாகச் செய்ய வேண்டும், பயிற்சி வழங்கும்போது பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள், கோவை விபத்தில் உள்ள தவறுகள் என்னென்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை கேள்வி பதில் வடிவில் தொகுத்து வழங்குகிறோம்.

கோவை பயிற்சியில் நிகழ்ந்த தவறு என்ன?

உயிரிழந்த மாணவி கட்டடத்தில் இருந்து குதிக்க தயங்கியபோதும், பயிற்சி அளித்தவர் அவரை கட்டாயப்படுத்தி தள்ளிவிட்டார். இத்தகைய பயிற்சிகளை செய்பவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது.

உதாரணமாக பயிற்சி பெறுபவர்கள் தீயின் அருகே செல்ல பயந்தவராக இருந்தால், அவரைத் தீவிபத்து நிகழ்ந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டச் சொல்ல வேண்டுமே தவிர, தீக்கு அருகில் செல்ல வற்புறுத்தி மாதிரி சூழ்நிலைகளில் ஈடுபட வைக்கக் கூடாது.

உயரமான இடத்தில் இருந்து குதித்தால், இடுப்பில் கச்சை கட்டியிருக்க வேண்டும். ஆனால், சம்மந்தப்பட்ட மாணவியின் இடுப்பில் கயிருடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு கச்சை எதுவும் இல்லை. பாதுகாப்பு கச்சை அணிந்திருந்தாலும், பயிற்சி பெறுபவரின் உடல் கயிறுடன் இணைத்து கட்டி கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

மாணவி குதிக்கும்போது கீழே இருந்து வலையில் பிடித்தவர்கள், பயிற்சி பெற்றவர்களாகத் தெரியவில்லை. அங்கு இருந்தவர்கள் யாரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்தவர்கள் போல எதுவும் தெரியவில்லை.

உயிரிழந்த மாணவி துப்பட்டா அணிந்திருந்தார். இத்தகைய பயிற்சிகளின்போது தடுக்கக்கூடிய, தீயில் பட வாய்ப்புள்ள வகையில் ஆடைகள் அணிந்திருக்கக்கூடாது.

மாணவி கீழே விழுந்து காயம் உண்டானபின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டபின், பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. அப்படியானால், சம்பவம் நடந்தபோது, முன்னெச்சரிக்கையாக அங்கு மருத்துவக் குழுக்கள் இல்லை என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

படக்குறிப்பு,

உயிரிழந்த மாணவி லோகஸ்வரி

கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய பயிற்சிகளை அளித்து வருவதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதுவரை விபத்து எதுவும் நிகழவில்லை என்பதால் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட பயிற்சிகள் எதுவும் முறையானவை என்று கூறிவிட முடியாது.

பேரிடர் மேலாண்மை எவ்வாறு நடக்கும்?

பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகள், சூழ்நிலையைப் பொருத்து மூன்று வகையில் நடக்கும்.

கட்டடத்தில் விபத்து உண்டானால், உள்ளே உள்ளவர்கள் அனைவரும் அவசரகாலத்தின்போது ஒன்று கூடும் இடத்திற்கு (Emergency Assembly Point) சென்று அங்கிருந்து வெளியேற வேண்டும். இது ஒரு வகை.

ஒரே கட்டடத்தில் , எந்த தளத்தில் தீ விபத்து, இடிபாடு உள்ளிட்ட இடர்ப்பாடு உண்டாகியுள்ளதோ, அந்த தளத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதாவது பாதிப்பு அதிகம் உள்ள அல்லது பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களில் இருப்பவர்களை முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக வெளியேற்றுவது இரண்டாவது வகை. தளப் பொறுப்பளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பார்கள்.

பட மூலாதாரம், Hari Balaji V. R.

படக்குறிப்பு,

ஹரி பாலாஜி வே. இரா.

கூட்டம் அதிகம் உள்ள திரை அரங்கம், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் விபத்து உண்டானதாக செய்தி பரவினால், ஒரே நேரத்தில் அனைவரும் தப்பிக்க முயலும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதால், தள பொறுப்பாளர்கள், என்ன காரணம் என்று கூறாமல் அனைவரையும் அமைதியாக வெளியேற்றுவார்கள். (Silent Evacuation)

எல்லா கட்டடங்களிலும் பேரிடர் மேலாண்மையின்போது வெளியேறுவதற்கான வழிகளின் படங்களை அனைவரும் பார்க்கும் வகையில் மாற்றியிருக்க வேண்டும். தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று அக்கருவிகளிலேயே எழுதி ஒட்டியிருப்பது மிகவும் அவசியம்.

முறையாகப் பயிற்சி அளிப்பது எப்படி?

பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கும் முன்பு பயிற்சி பெறுபவர்களிடம் எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படும் என்பது குறித்து தெளிவாக விளக்க வேண்டும்.

பயிற்சிக்கு முன்பு காணொளிகளை காண்பித்து அவர்களும் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடங்களுக்கு அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்துதான் மாதிரி மீட்பு நடவடிக்கைகளை செய்து காட்ட வேண்டும். அல்லது, முறையாகப் பயிற்சி பெற்றவர்களையே அவற்றைச் செய்ய வைக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2015இல் சென்னையில் உண்டான வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணி

இடுப்புக்கு கச்சை, கை உறைகள், முழங்காலுக்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.

பயிற்சி முடிந்தபின், பயிற்சியின் எந்த அம்சம் சிறப்பாக இருந்தது, எது மோசமாக இருந்தது, மேம்படுத்த என்ன வழி என்று பங்கேற்றவர்கள் கருத்தைக் கேட்டு அறிய வேண்டும்.

பேரிடர் மேலாண்மை குழுக்கள் என்றால் என்ன?

எல்லா கல்வி நிறுவங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பேரிடர் மேலாண்மை குழு இருக்க வேண்டும். அதில் அனைத்துத் துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இருக்க வேண்டும். அதன் காரணம், எல்லோரும் எல்லா நேரங்களிலும் இருக்க மாட்டார்கள் என்பது தான்.

கல்வி நிறுவங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் சோதனை செய்யும் நேரங்களில் அவற்றை செய்ததாக ஆவணங்கள் மட்டுமே காட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.

இத்தகைய பயிற்சிகளில் யார் பயிற்சி தருகிறார்கள், எவ்வாறு பயிற்சி தருகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியம். பேரிடர் மேலாண்மை பயிற்சி தருவது முறையாக இல்லாவிட்டால் அந்தப் பயிற்சியே ஒரு பேரிடராக மாற வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடங்களில், பேரிடர் காலங்களில் உதவிக்கு வரும் தன்னார்வலர்கள் அல்லாமல், ஒரு தளத்துக்கு ஒருவர் பொறுப்பாளராக இருப்பார்.

தீ விபத்து உள்ளிட்டப் பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால், பிறர் வெளியேறும்போது விபத்து நடந்தது தெரியாமலேயே கழிவறைகளில் யாரேனும் உள்ளனரா என்று அவர் முதலில் சோதனை செய்வார்.

பேரிடர் நேரங்களில் வெளியேறியதுடன் எல்லாம் முடிந்து விடுமா?

ஓர் இடத்தில் பேரிடர் அல்லது பெருவிபத்து ஏதேனும் நடந்திருந்தால் அதில் அனைவரும் வெளியேற்றப்பட்டவுடன் எல்லாம் முடிந்து விடாது.

காயமடையாதவர்களுக்குக் கூட பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தம் உண்டாக வாய்ப்புண்டு. இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட உடல் கோளாறுகள் உள்ளவர்களும் மீட்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்டவர்களில் இருக்கலாம்.

மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் தளப் பொறுப்பாளர்கள் அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மையின் நிலைகள் என்ன?

பேரிடர் மேலாண்மை, பேரிடருக்கு முந்தைய நிலை (pre disaster), பேரிடரின் போது செய்யப்படும் முயற்சிகள் (inter disaster) மற்றும் பேரிடருக்கு பிந்தைய நிலை (post disaster) என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

விபத்து அல்லது பேரிடர் நிகழ்ந்தால் அதில் இருந்து தப்பிப்பது, பிறரைக் காப்பாற்றுவது உள்ளிட்டவற்றுக்கான பயிற்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பேரிடருக்கு முந்தைய நிலையாகும்.

விபத்து அல்லது பேரிடர் நிகழ்ந்தபின் அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இரண்டாம் நிலையாகும். இதில் பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தாலும் போதிய பாதுகாப்பு மற்றும் மீட்புக் கருவிகள் இல்லாமல் பங்கேற்கக்கூடாது. அவை இல்லாதபோது, உதவி செய்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டால் சூழல் மேலும் சிக்கலானதாகிவிடும்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு அவற்றை வழங்குதல், புனரமைப்பு, விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்தல் உள்ளிட்டவை மூன்றாம் நிலையாகும்.

கட்டடங்களின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

தீவிபத்து அல்லது இயற்கை சீற்றங்கள் ஏதேனும் நடந்தால் அருகில் தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி ஆகியன செல்லக்கூடிய வகையில், கட்டடத்தின் முன்பு போதிய இடைவெளி இருக்க வேண்டும்.

கட்டடங்களின் வடிவமைப்பும் உள்ளே இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :