ஹிமா தாஸ்: வயலில் ஆடிய கால்கள் தடகளத்தில் தங்கம் வென்ற கதை

  • நவீன் நேகி
  • பிபிசி

"தொடக்கத்தில் ஹிமா தாஸ் பின்தங்கியிருந்தாலும் இன்று அவள் தங்கம் வென்றுவிடுவாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது".

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

20 வயதுக்கு குறைவானவர்களுக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஹிமா தாஸ்

இதை கர்வத்துடன் சொல்பவர் ஹிமாதாஸின் பயிற்சியாளர் நிபுண் தாஸ். ஹிமா தாஸின் வெற்றியை, ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் கெளஹாத்தியில் இருந்து அவர் கொண்டாடுகிறார்.

சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியக் கொடியை ஏந்தியவாறு தலைநிமிர்ந்து வெற்றிச் சிரிப்போடு நிற்கும் ஒரு இந்தியரை காண்பதற்காக இந்தியா நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்தது.

ஃபின்லாந்தின் டாம்பையர் நகரில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற சர்வதேச தடகள கழகத்தின் (ஐ.ஏ.ஏ.எஃப்) 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 18 வயது ஹிமா தாஸ் இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ், காமன்வெல்த் போட்டியில் ஆறாவது இடத்தை பிடித்தார். தற்போது உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியப் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

400 மீட்டர் தூரத்தை 51.46 விநாடிகளில் ஓடிக் கடந்த ஹிமா தாஸ் தங்கம் வென்றார். ருமேனியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மிக்லோஸ் 52.07 நொடிகளில் இலக்கை அடைந்து வெள்ளியை வெல்ல, அவரைத் தொடர்ந்து 52.28 நொடிகளில் ஓடிய அமெரிக்கவின் டெய்லர் மேண்டன் வெண்கலம் வென்றார்.

பட மூலாதாரம், FACEBOOK/HIMA DAS

இறுதியில் வேகம் பிடிக்கும் உத்தி

தொடக்கத்தில் 35 நொடிகள் வரை முன்னணியில் இருந்த மூவரில் ஒருவராகக்கூட வராத ஹிமா தாஸ், இந்த போட்டியை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கமாட்டார்.

ஆனால், ஹிமா வெல்வார் என்று அவரது பயிற்சியாளர் நிபுண் தாஸ் நம்பிக்கையுடன் இருந்ததாக சொல்கிறார். 'ஓடும்பாதையின் முதல் 300 மீட்டர் வரை ஹிமா நான்காவது இடத்தில் இருந்தார். அவர் தங்கத்தை வென்றுவிடுவார் என்பதை நான் அப்போதே உணர்ந்துவிட்டேன். ஏனெனில் அவரது ஓடும் உத்தி எனக்குத் தெரியும். தொடக்கத்தில் மெதுவாக ஓடத் தொடங்கும் ஹிமா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து, இறுதியில் மற்றவர்களை முந்திவிடுவார்` என்று ஹிமா தாஸின் பயிற்சியாளர் நிபுண் தாஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/HIMA DAS

கால்பந்தில் ஆர்வம் கொண்ட ஹிமா தாஸ்

2017 ஜனவரி மாதம் நிபுண் தாஸிடம் பயிற்சி பெறத் தொடங்கினார் ஹிமா. அசாம் மாநிலம் நெளகாவ் மாவட்டத்தில் வசிக்கும் ஹிமா தாஸ், தலைநகர் கெளஹாத்தியில் நடைபெற்ற ஒரு முகாமில் பங்கேற்க வந்தபோது நிபுண் தாஸ் அவரின் திறமையை கண்டறிந்தார்.

'ஹிமா ஓடும் முறையைப் பார்த்து எனக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது, அவள் சாதிக்கப் பிறந்தவள் என்பதை உணர்ந்துக் கொண்டேன்' என்கிறார் நிபுண் தாஸ்.

விவசாய பிண்ணனியைக் கொண்ட ஹிமாவின் கிராமத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் பேசினார் நிபுண். ஹிமாவிடம் இருக்கும் திறமையைப் பற்றி எடுத்துச் சொன்ன அவர், தான் அவருக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாக் கொண்ட ஹிமாவின் குடும்பம், கெளஹாத்தில் ஹிமா தங்கி பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருந்தது. ஆனால் அதற்கும் நிபுண் ஒரு வழியை கண்டறிந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/NIPUN DAS

படக்குறிப்பு,

நிபுண் தாஸ்

'ஹிமாவை பயிற்சிக்கு கெளஹாத்திக்கு அனுப்ப அனுமதி கொடுத்தால் மட்டும் போதும். எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்' என்று உறுதியளித்தார் நிபுண்.

தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த ஹிமா, தனது கிராமத்திலும், மாவட்டத்தில் நடைபெறும் சிறிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று 100, 200 ரூபாய்கள் பரிசுத் தொகை பெற்று வருவாராம்.

கால்பந்து விளையாடும்போது நிறைய ஓட வேண்டும். இதனால் இயல்பாகவே அவரது உடல்வாகு விளையாட்டு வீராங்கனைக்கு தேவையான வலுவுடன் இருந்தது. அதுவே ஹிமா தாஸை தடகள வீராங்கனையாக மாற்ற உறுதுணையாக இருந்தது.

பட மூலாதாரம், HIMA DAS/FACEBOOK

ஹிமாவுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கியபோது முதலில் 200 மீட்டர் தொலைவு ஓடுவதற்கான பயிற்சிகளையே அளித்தார் நிபுண். ஆனால், ஹிமா 400 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளிலும் சிறப்பாக ஓடமுடியும் என்பதை சற்று தாமதாகவே அவர் புரிந்துக் கொண்டார்.

விவசாயக் குடும்பம்

16 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர் ஹிமா தாஸ். ஹிமாவின் குடும்பம் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வது.

ஹிமாவின் வீடு இருக்கும் பகுதி அடிக்கடி வெள்ளதால் பாதிக்கப்படும். இதனால் அவரது குடும்பத் தொழிலான விவசாயம், பல நேரங்களில் நஷ்டங்களையே கொடுக்கும் என்பதால் அவர்களது நிதி நிலைமையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஹிமாவின் வெற்றிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர், குடியரசுத் தலைவர் என நாட்டின் உயர் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள், ஊடகங்கள் வரை அனைவரும் பெருமையுடன் கொண்டாடும் தங்க மங்கையாக மாறிவிட்டார் ஹிமா தாஸ்.

பாராட்டு மழையில் நனையும் ஹிமா, அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தியாவிற்கு தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை வெல்லமுடியும் என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: