தாய்லாந்து குகை மீட்பில் தண்ணீரை வெளியேற்ற உதவிய இந்திய குழு

தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்கள் மட்டும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்கு நடந்த மிகப்பெரிய நடவடிக்கையில், இந்தியர்கள் சிலரும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

குகையில் சூழ்ந்திருந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அவர்கள் உதவி செய்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் ஒரு வாரத்திற்கு மேலாக குகைக்குள் தங்கியிருந்தனர். தொடர் மழையாலும், புயலாலும் இந்த மீட்பு நடவடிக்கையில் இந்த குழுவினர் அதிக இடர்பாடுகளை சந்தித்தனர்.

இங்கு நடந்த மீட்பு நடவடிக்கையில் இந்தியாவின் 'கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம்' ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையில் நீர் மட்டத்தை குறைப்பதற்கும், குழாய்களை பயன்படுத்தி நீரை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியை இந்த நிறுவனம் வழங்கியது.

இந்திய வெளியுறவுத் துறை வழியாக தாய்லாந்து அரசு இந்த உதவியை நாடியிருந்தது.

தாய்லாந்து மீட்பு குழுவினருக்கு உதவுவதற்காக 5 பேர் கொண்ட குழுவை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் அனுப்பியது.

இந்த 5 பேரில், 2 பேர் இந்தியாவையும், ஒருவர் பிரிட்டனையும், 2 பேர் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்து பிரிவையும் சேர்ந்தவர்கள்.

வடிவமைப்புத் தலைவரும், இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான பிரசாத் குல்கார்னி, ஷியாம் சுக்லா, பிலிப் டிலானி, ரெம்கோ விலீச் மற்றும் அடிசேர்ன் ஜின்டாபுன் ஆகியோர் இந்த 5 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியாவின் சாங்லி நகரத்தை சேர்ந்தவர் குல்கார்னி. சுக்லா புனேயை சேர்ந்தவர்.

தாய்லாந்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. புயலும் வீசியது. இதனால், குகைக்குள் நீர் மட்டம் அதிகரித்து, மீட்பு நடவடிக்கையை கடினமாக்கியது.

சிக்கலான நடவடிக்கை

ஜூலை 2ம் தேதி திங்கள்கிழமை சிறுவர்கள் கண்டறியப்படும் வரை 9 நாட்கள் குறைவான அளவு உணவோடும், வெளிச்சத்தோடும் அவர்கள் குகைக்குள் கழிக்க வேண்டியதாயிற்று.

அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்ட பின், அவர்களை மீட்டு வெளியே கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியானது.

ஆனால், கனமழை பெய்ய வாய்ப்பு இருந்ததால், குகையில் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து அதிகமாக இருந்தது. எனவே, ஜூலை 8ம் தேதி அவர்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கை தொடங்கியது.

தாய்லாந்திலுள்ள இந்திய தூதரகத்தை அணுகிய அந்நாட்டு அரசு இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவி கோரியது.

இந்த குகையில் இருந்த நீர் மட்டத்தை குறைப்பதற்கு தொழில்நுட்ப உதவியை கிர்லோஸ்கர் நிறுவனத்திடம் இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டனர்.

தன்னுடைய நிறுவனத்தின் கிளை ஒன்றை கிர்லோஸ்கர் நிறுவனம் தாய்லாந்தில் கொண்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு இதற்கான திட்டத்தையும் இந்த நிறுவனம் வகுத்தது.

இந்த நடவடிக்கைக்கு தேவைப்படும் எந்திரங்களை பட்டியலிட்ட அவர்கள், அதற்கேற்ற வகையில் தேவையான கருவிகளையும், குழாய்களையும் தயார் செய்து 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்து தாய்லாந்துக்கு அனுப்பினர்.

தாய்லாந்து படையால் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய மீட்பு நடவடிக்கையில் நீர் மட்டத்தை குறைக்கும் பணி ஒரு பகுதியாக இருந்தது.

பிரசாத் குல்கார்னி தலைமையிலான இந்திய குழு, மீட்புதவி பணி தொடங்கிய 2ம் நாள் முதல் அதன் பணிகளை செய்ய தொடங்கியது.

தொடர்ந்து பெய்து வந்த மழையும், புயல்களும் குகையில் சிக்கியிருந்த சிறார்களை சென்றடைவதை கடினமாக்கின.

குகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறார்களின் முதல் படங்கள்

மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எப்படி?

குகையில் சிக்கிய இந்த சிறார்களையும், பயிற்சியாளரையும் மீட்டு கொண்டு வர உலகம் முழுவதிலும் இருந்து தாய்லாந்து படை உதவி பெற்றது.

குகைக்குள் சிக்கியோரை 9 நாட்களுக்கு பின்னர் கண்டறிந்தவுடன், அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அவர்களை எவ்வாறு வெளியே கொண்டு வருவது என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்த மீட்பு நடவடிக்கை பற்றி பிரசாத் குல்கார்னி டைம்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

"இந்த மீட்பு நடவடிக்கை உடனடியாக தொடங்கியது. நாங்கள் ஜூலை 5ம் தேதி தாய்லாந்தை சென்றடைந்தோம்.

குகையிலுள்ள தண்ணீரை வெளியேற்றி, மீட்பு குழுவினருக்கு உதவுவது எங்களது முக்கிய கடமையாக இருந்தது.

ஆனால், 90 டிகிரி செங்குத்து திருப்பம் இந்த குகைக்குள் இருந்தது. அதன் மேற்பரப்பும் மட்டமாக இல்லை.

இதனால், குகையின் ஆழமான கீழ் மட்டத்தை அடைவது மிகவும் கடினமாக இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.

குகைக்குள் இருக்கும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. அனுபவம் வாய்ந்த முக்குளிப்போர் கூட சில வேளைகளில் சிக்குண்டிருந்த சிறார்களை சென்றடைய முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

தன்னுடைய குழுவினர் சந்தித்த பிற சிக்கல்கள் பற்றியும் பிரசாத் குல்கார்னி தெரிவித்தார்.

மூடுபனியாலும், நீராவியாலும் உருவான இருளும், வெளிச்சம் போதாமையும் இன்னொரு பிரச்சனையாக இருந்தது.

மழை நின்றவுடன் நிலைமை இன்னும் மோசமாகியது. அடிக்கடி மின்சாரமும் இல்லாமல் போனது.

எனவே, குறைந்த திறன் கொண்ட நீர்க்குழாய்களையே பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அவற்றை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்ல வேண்டியிருந்தது" என்று குல்கார்னி கூறினார்.

குகையில் இருந்து நீரை வெளியேற்றும் பணி முற்றிலுமாக பிரசாத் குல்கார்னி மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழு 8 நாட்கள் பணிபுரிந்தது.

தாய்லாந்து அரசின் நன்றி கடிதம்

தாய்லாந்து குகையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை செய்திகள் உலக ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

இந்த சிறார்கள் நலமாக மீட்கப்பட வேண்டுமென உலக முழுவதுமுள்ள மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்தவுடன், இந்திய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தாய்லாந்து அரசு பாராட்டியது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், குகையில் சிக்குண்டிருந்த சிறார்களை மீட்பதற்கு வழங்கிய பங்களிப்புக்கு தாய்லாந்து அரசு நன்றி தெரிவித்திருந்தது.

தாய்லாந்து அரசுக்கு இந்திய அரசு உதவுவது இது முதல்முறையல்ல.

2011ம் ஆண்டு தாய்லாந்து வரலாற்றில் நடந்திராத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது, இதே கிர்லோஸ்கர் நிறுவனத்தின் மூலம் நீர் வெளியேற்றும் குழாய்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இந்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :