''திராவிட கட்சிகளை என்றைக்கும் தேசிய கட்சிகளால் அழித்துவிட முடியாது''

முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தம்பிதுரை

பட மூலாதாரம், Hindustan Times

தினமணி : ''அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி''

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என கூறியுள்ளதாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

''தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மூன்று ஆண்டு காலம் தாமதப்படுத்தியதற்கு காரணம் கூறாத மத்திய அமைச்சர் மதுரையில் எய்ம்ஸ் அமைய நாங்களே காரணம் என கூறிக்கொள்வது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுவதாக அமித்ஷா கூறியதை ஏற்கமுடியாது. ஊழலை அவர் நிரூபிக்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம். அமைச்சர்கள் மீது தவறு இருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவிக்கட்டும். திராவிட கட்சிகளை என்றைக்கும் தேசிய கட்சிகளால் அழித்து விட முடியாது. தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கொடுத்ததாக அமித்ஷா கூறியுள்ளார். இதே காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 20 லட்சம் கோடி வருமானம் சென்றுள்ளது'' என தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times

தினத்தந்தி : இனி நீங்கள் நினைவுச் சின்னங்களின் முன் செல்ஃபி எடுக்கலாம்

டெல்லியில் தொல்லியல் துறையின் புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்து '' நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து தொல்லியல் துறையில் கூடுதல் பொது இயக்குனர் ஊர்மிளா சர்மா பிறப்பித்துள்ள உத்தரவில்

''மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, அஜந்தா -எல்லோரா குகைகள், தாஜ்மஹாலின் முக்கிய கல்லறை மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே அரண்மனை ஓவியங்களை தவிர மற்ற அனைத்து நினைவிடங்களையும் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் அருகே புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துகொள்ளலாம் என தொல்லியல் துறை கூறியுள்ளது.

இந்திய தொல்லியல் துறையின் கீழ் 3,686 நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக இவற்றின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு கருதி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: மஹாராஷ்டிராவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பொதுமக்கள் உணவு எடுத்துச் செல்லலாம்.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துச் செல்லலாம். மேலும் ஒரு பொருளின் விலையானது திரையரங்கிற்கு வெளியே விற்கப்படும் அதிபட்ச விலையே திரையரங்கிற்குள்ளும் இருக்கவேண்டும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரவீந்திர சவான் ''இவ்விதிகளை மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Hindustan Times

இந்து தமிழ் திசை: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

கடந்த ஜுன் 19-ம் தேதி பிடிபி-யுடன் தனது கூட்டணி உறவை பாஜக முறித்துக்கொண்டது. இதையடுத்து மெகபூபா பதவி விலகினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

"1987-ல் நடந்தது போன்று ஜம்மு காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை டெல்லி அரசு நிராகரிக்க முயன்றால், பிளவுகளையோ, தலையீடுகளையோ ஏற்படுத்த முயன்றால், சலாஹுதீன், யாசின்மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மேலும் உருவாகிடுவர். பிடிபி-ஐ பாஜக உடைக்க முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார் என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :