"என்னை நிந்திப்பது ஏன்?" - கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - கண்ணீர் விட்ட கர்நாடக முதல்வர்

படத்தின் காப்புரிமை Getty Images

பெங்களுருவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததை கண்டு அங்கிருந்தவர்கள் துக்கமடைந்து சோகத்தில் மூழ்கியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தான் முதல்வராக பதவியேற்றவுடனேயே பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், தனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்ட குமாரசாமி, மங்களூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட சில பெண்கள், தங்களுக்கு குமாரசாமி முதல்வர் இல்லை என்று கூறியது தனது மனதை புண்படுத்திவிட்டதாகவும், "நான் என்ன பாவம் செய்தேன். பதவியேற்று 2 மாதங்கள் கூட முழுமையாகவில்லை. ஆட்சி செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்?" என்று கேட்டு அவர் அழுததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - முதல் முறையாக ஒருவாரத்திற்கு மூடப்படும் திருமலை கோவில்

படத்தின் காப்புரிமை Getty Images

திருமலையிலுள்ள வெங்கடேஷ்வர சுவாமி தி்ருகோயில் கிட்டதட்ட அதன் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வாரகாலத்திற்கு மூடப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வேதிக சடங்குகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் பக்தர்களின் நிலையியை கருத்திற்கொண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி முதல் ஆகஸ்டு 17ஆம் தேதி வரை தரிசனம் நிறுத்திவைக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை UGC

பல்கலைக்கழக மானிய குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களைக் பராமரித்து கண்காணிக்கவும், அவற்றின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் பொறுப்புகளை தன்னகத்தே வைத்துள்ள யுஜிசி மீது எந்த புகாரும் எழவில்லை என்பதாலும், தற்போது கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா, யுஜிசி.க்கான நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கோ அல்லது வேறு அமைப்புக்கோ இடமாற்றம் செய்வதாக அமைந்துள்ளதாலும் இந்திய உயர் கல்வி ஆணைய (யு.ஜி.சி. சட்டத்தை நீக்குதல்) சட்டம்-2018 என்ற வரைவு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - உயிரிழப்பை துரிதப்படுத்தும் நீரழிவு

படத்தின் காப்புரிமை Getty Images

நீரழிவு இல்லாதவர்களைவிட, நீரழிவு உள்ளவர்களின் இறப்பு வீதம் இந்தியாவில் கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் நீரழிவு ஆராய்ச்சி நிலையத்தினரால் 2,272 பேரை கொண்டு மேற்கொள்ளப்பட்ட 10 வருட தொடர் ஆராய்ச்சியில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டோர், அதனால் பாதிக்கப்படாதவர்களைவிட மூன்று மடங்கு விரைவில் உயிரிழப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுபோன்ற ஆராய்ச்சி இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :