ஸ்டெர்லைட்: ''தூத்துக்குடி எரிந்த தினம்'' அறிக்கை வெளியிட அறிவிக்கப்படாத தடையா?

தூத்துக்குடியில் மே மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக கூறி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து, பல்துறை ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வரவிருந்தவர்கள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கூட்டமைப்பு' என்ற பெயரில் அறுபதுக்கும் மேற்பட்ட பல்துறை ஆர்வலர்கள் களஆய்வுக்குப் பின் உருவாக்கிய அறிக்கையை சென்னையில் வெளியிட ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு அறிவிக்கப்படாத தடை இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

''சிவகாசி அச்சுக்கூடங்களில் தடை?''

கடந்த மே22ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய நூறாவது நாள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்ததாக அரசு அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், துப்பாக்கிச்சூடு நடந்தபோது அரசு அதிகாரிகளால் மீறப்பட்ட விதிமுறைகள் மற்றும் தொடரும் கைது நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை தயாரித்தனர்.

''தூத்துக்குடி எரிந்த தினம்'' என்ற தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட பல இடர்பாடுகள் இருந்ததாகப் பட்டியலிட்டார் ஹென்றி டிஃபென்.

'200க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டு இந்த அறிக்கையை வடிவமைத்தோம். இந்த புத்தகத்தை அச்சடிக்க சிவகாசியில் பல அச்சகங்கள் மறுத்துவிட்டன. அரசு அதிகாரிகளின் நேரடி பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர்தான் ஸ்டெர்லைட் தொடர்பான எந்த புத்தகத்தை அச்சடிக்க முடியும் என அச்சுக்கூடத்தினர் தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக நாங்கள் புத்தகத்தை அச்சடிப்பதற்கு பதிலாக நகல் எடுத்து வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.'' என்று சமூக செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபென் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களின் வீடுகளுக்கு காவல்துறையினர் சென்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தொடரும் கைதுகள்

பிபிசிதமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா பாபு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவதற்காக மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் பேருந்து நிறுவனத்தினரை காவல்துறை அச்சமூட்டியதால், பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாமல் போனது என்று கூறினார்.

''நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாக நான் சென்னை வந்துவிட்டேன். போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்களது அனுபவங்களை நேரடியாக பகிர்ந்துகொள்வதாக இருந்தது. ஆனால் பேருந்து நிறுவனத்தை பயமூட்டி, அந்த மக்களை நேற்று மாலை பயணம் செய்யமுடியாத வண்ணம் செய்துள்ளனர்'' என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தமன் தூத்துக்குடி போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள் இணைந்து இரங்கல்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். தற்போதும்கூட தூத்துக்குடியில் நள்ளிரவில் கைதுகள் தொடர்வதாக கூறினார்.

''இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் தற்போதும் தூத்துக்குடியில் இளைஞர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாக உள்ளார்கள். நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்தபோது, பலர் போராட்டத்தின்போது காயம் அடைந்திருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்றால் அவர்கள் மீது வழக்கு பதிவாகுமோ என்ற அச்சத்தில் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை அரசாங்கம் மூடியது உண்மை என்றால், ஏன் இந்த கூட்டத்திற்கு மக்கள் வருவதை தடைசெய்கிறார்கள்?'' என்றார்.

''தூத்துக்குடி எரிந்த நாள்'' என்ற அறிக்கையில் பொது மக்களை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது தவறு என்றும் அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேர்மையான ஆய்வை நடத்த மூத்த அதிகாரிகளை தமிழக தலைமைச் செயலாளர் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

''துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு அறிக்கை அந்த குடும்பங்களிடம் தரவேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான பலமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்,'' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :