வேலை வாய்ப்புக்காகவா அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி?

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி

நெடுங்காலம் தொட்டே நடந்து வரும் இந்தியாவின் முடிவில்லா விவாதம் இது. இது குறித்து பல சர்ச்சைகளும் நடந்து இருக்கின்றன. போராட்டங்களும் நடந்து இருக்கின்றன. அதாவது பள்ளியில் ஆரம்ப கல்வியில் மாணவர்களுக்கு பாடத்தை தாய் மொழியில் கற்பிப்பதா அல்லது ஆங்கிலத்தில் கற்பிப்பதா என்பதுதான் அந்த விவாதம். அந்த விவாதம் இப்போது கர்நாடகத்தில் சூடுபிடித்திருக்கிறது.

அரசின் வாதமும், எதிர்வாதமும்

ஆங்கிலத்தின் மீது இருக்கும் பெரும் ஆர்வமும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவையையும் மனதில் கொண்டே இந்த முடிவினை எடுத்து இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இது குறித்த மொழியியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. அவர்கள், ஓர் ஆய்வினை மேற்கோள் காட்டுகிறார்கள். அதாவது, தாய் மொழியில் கல்வியை கற்பதன் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரநிலை எதுவாக இருப்பினும், பெருந்தொகை கொடுத்து தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்க்க தயராக இருக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் தம் பிள்ளைகளை சேர்ப்பது எந்த தரமுமற்ற பள்ளிகளில்தான். வேலைவாய்ப்பு சந்தைக்கான விசாவாக இந்த ஆங்கில வழி கல்வியை பெற்றோர்கள் கருதுகின்றனர்.

கற்பித்தலுக்கான வழி என்று குறிப்பிடுவதே தவறானது என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனிதா ராம்பால். அவர், "புரிந்து கொள்வதற்கான வழி என்றே அழைக்கவேண்டும். அதாவது, குழந்தைகளுக்கு புரியவைப்பதற்கான கருவிதான் மொழி. ஆனால், இன்று அது அரசியலாகி இருக்கிறது" என்கிறார்.

ஏன் இப்போது இந்த விவாதம்?

கர்நாடக பட்ஜெட்கூட்டத் தொடரில், குமாரசாமியின் உரையை அடுத்தே இந்த விவாதம் எழுந்து இருக்கிறது. அவர் கர்நாடகத்தில் இருக்கும் 28,847 தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளில் மட்டும் சோதனை முயற்சியில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் என்றார். ஆனால், இதற்கு கன்னட செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறி தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனை தடுக்கவே இப்படியான முயற்சியில் முதல்வர் இறங்கி இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத கர்நாடக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடங்களில்

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் மட்டும் 3.5 லட்சம் குழந்தைகள் கன்னட, உருது வழி அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். ஆனால், அதே காலக்கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தனியார் ஆங்கில வழி பள்ளியில் சேர்ந்திருக்கின்றனர்.

அரசின் இந்த நடவடிக்கையை பள்ளிகளை மூடுவதற்கான ஒரு முன்னகர்வாக கன்னட வளர்ச்சி ஆணையம் பார்க்கிறது. "நாங்கள் ஆங்கிலத்தை பள்ளியில் கற்பிப்பதை எதிர்க்கவில்லை. ஆங்கில வழிக் கல்வியைதான் எதிர்க்கிறோம்." என்று பிபிசியிடம் தெரிவித்தார் இந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சித்தராமையா.

ஆங்கில வழிக் கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயற் குழு உறுப்பினர் நரஹள்ளி பாலசுப்பிரமண்யா. அவர், "பொறியாளரும் ராஜதந்திரியுமான விஸ்வாரைய்யா, விண்வெளி ஆராய்ச்சியாளர் யு ஆர் ராவ் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானியான சி என் ஆர் ராவ் உள்பட பல சமூக முன்னோடிகள் பத்தாம் வகுப்புவரை கன்னட வழி கல்வியின் பயின்றவர்களே" என்கிறார்.

படிப்பதும், எழுதுவதும் புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தால், மாணவர்களுக்கு இரண்டாம் மொழி ஒன்றை கற்பது சுலபமாக இருக்கும். மொழியை கற்பித்தல் குறித்த புரிதல் நம் நாட்டில் பெரிதாக இல்லை. கல்வியில் தாய் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நாம் புரிந்துகொள்வது இல்லை. தாய் மொழியை சரியாக கற்கும் ஒருவரால் இரண்டாவ்து மற்றும் மூன்றாவது மொழியை சுலபமாக கற்க முடியும்" என்கிறார் பேராசிரியர் ராம்பால்.

விளிம்பு நிலை மக்கள்

"இரண்டாண்டுகளுக்கு முன் கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அரசு பள்ளிகள் குறித்த ஒரு புரிதலை உண்டாக்கியது. அதாவது கர்நாடக அரசு பள்ளிகளில் கன்னட வழியில் பயிலும் மாணவர்களில் 35 சதவீதத்தினர் தலித் மாணவர்கள். 60 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள்" என்கிறார் கர்நாடக பள்ளிக் கல்வியை சேர்ந்த ஓர் அதிகாரி.

இந்த தரவு இன்னொரு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி குறித்து மற்றொரு விளக்கத்தை தருகிறது.

"அரசு பள்ளிகளில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விளிம்பு நிலை மக்கள். அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியில் கற்பிக்கப்படாத போது, அவர்கள் ஆங்கில வழிக் கல்விக்காக மட்டமான தனியார் பள்ளிகளில் சேர்கிரார்கள். இதனால் அவர்களுக்கு பண சுமை அதிகமாகிறது. அந்த சுமை பலன் அளிப்பதும் இல்லை. இதனால் அரசு ஆங்கில வழிக் கல்வியை தொடங்குவது இந்த நலிந்த பிரிவினருக்கு பலனளிக்கும்" என்கிறார் மணிபால் கல்வி நிலையத்தின் தலைவர் மோகன் தாஸ் பை.

மோகன் தாஸ் பை சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஹரிஷின் ஐந்தரை வயது மகள், பெங்களூரில் உள்ள அரசு கன்னட வழி தொடக்கப் பள்ளியில் படிக்கிறார். "நாங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது, அவர்கள் கன்னடத்தில் கேள்வி கேட்பதில்லை. ஆங்கிலத்தில்தான் கேட்கிறார்கள். இதன்காரணமாக எங்களுக்கு சிறந்த வேலை எதுவும் கிடைப்பதில்லை, ஏதோ கூரியர் பையன்களாக பணி செய்கிறோம். ஆனால், அதே நேரம் எங்களால் நாற்பாதாயிரம், ஐம்பதாயிரம் கொடுத்து அரசு பள்ளிகளிலும் சேர்க்க முடியாது. அரசு பள்ளிகள் ஆங்கில வழியில் கற்பித்தால், எங்களுக்கு கட்டணமும் இல்லை"என்கிறார்.

ஆனால், அதே நேரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு அரசு பள்ளிகள் தரமாக இருக்குமா?

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆந்திர பிரதேசத்தில் 2008-2013 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இதனை மேற்கோள் காட்டுகிறார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை தனியார் பள்ளி மாணவர்கள் சிலருக்கு கட்டணம் கட்டியது. இவர்களின் செயல்திறனை அரசு பள்ளி மாணவர்களுடன் ஒப்பிட்டது. இரு பிரிவுக்கும் பெரும் வித்தியாசம் ஏதும் இல்லை.

இந்த வாதவிவாதங்களை எல்லாம் கடந்து, உண்மையில் ஆரம்ப கல்வியை சீர்திருத்த வேண்டிய இடத்தில் இப்போது இருக்கிறோம். 1991 ஆம் ஆண்டு தேச பொருளாதார கொள்கைகளில் சீர்த்திருத்தம் கொண்டு வந்தது போல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :