தொடங்கியது 'பிபிசி குஜராத்தி' டிவி செய்தி சேவை

'பிபிசி குஜராத்தி' டிவியின் 30 நிமிட உலக மற்றும் தேசிய செய்தித் தொகுப்பு திங்கள்கிழமை முதல் இரவு எட்டு மணிக்கு ஜிஎஸ்டிவியில் தனது ஒளிபரப்பை தொடங்கியது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் தங்கள் மாலை வேளையை பிடித்தமான மதுவோடு கொண்டாடுவார்கள். ஆனால், பூரண மதுவிலக்கு நிலவும் குஜராத்தில் மக்கள் மாலை வேளையை தங்களுக்கே உரிய வகையில் கொண்டாடுவார்கள்.

"சுவையான நொறுக்குத் தீனியும், தேனீரோடு விவாதமும் குஜராத்தின் மாலை நேர அடையாளங்கள். கொல்கத்தாவைப் போல புகழ் பெற்ற காபிக் கடை சந்திப்பு இடங்களோ, அது குறித்து மன்னா டே போன்றோர் படைத்த பாடல்களோ குஜராத்தில் இல்லை.

ஆனால், தங்கள் கோப்பைத் தேனீரையும், அதோடு நிகழும் உரையாடல்களையும் எப்படிச் சுவைப்பது என்று குஜராத்திகளுக்கு நிச்சயம் தெரியும். இந்த தேநீர்க் கோப்பை உரையாடல்களில் இனி புதிய சுவையும், புதிய பொருள்களும் கமழும். புதிய சொற்கள் ஒலிக்கும், புதிய பொருள்கள் ஆர்வத்தோடு பேசப்படும், புதிய கோணங்கள் அலசப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத்தி மொழிக்கே உரிய முறையில் தயாரிக்கப்படும் பிபிசி குஜராத்தியின் 30 நிமிட தொலைக்காட்சி செய்தித் தொகுப்பான 'பிபிசி சமாச்சார்' அனைத்து வார நாள்களிலும் இரவு 8 மணிக்கு ஜிஎஸ்டிவியில் ஒளிபரப்பாகும்.

முரண்பாடுகளின் நிலம்

ஒருபுறம் கடல், மறுபுறம் பாலைவனம் என்று திழழும் குஜராத் முரண்பாடுகளின் தொகுப்பு. அகமதாபாத்தின் பேரழகு மிளிரும் இந்து-இஸ்லாமிய-ஜெயின் கட்டடக் கலை இந்த நகருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற பெருமையைத் தந்துள்ளது. அதேநேரம் பல சமூகங்கள் சச்சரவுமிக்க சகவாழ்வு வாழும் இந்தியாவின் அதிக குடிசைப்பகுதிகள் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

வெற்றிகரமான பெண்கள் கூட்டுறவு நிறுவனம் ஒன்றை நடத்திக் காட்டியுள்ள இதே மாநிலத்தில்தான் ஆண்-பெண் பாலின விகிதம் இந்தியாவிலேயே மிக மோசமாக உள்ளது. சில கிராமங்களில் 1000 ஆண்களுக்கு 400 பெண்கள்தான் உள்ளனர்.

உலகின் மாபெரும் ஓரினச் சேர்க்கையாளர் கீதமெனப்படும் 'போஹீமியான் ரேப்சோடி'யை இயற்றிய பாப் இசை மேதையான ஃபரூக் புல்சாரா எனப்படும் ஃப்ரெட்டி மெர்குரி வளர்க்கப்பட்ட இந்த மாநிலத்தில்தான் மனவேந்திர சிங் கோஹில் என்ற இளவரசர் தமது பாலியல் வகைமையை வெளிப்படுத்தியதற்காக அரியணையில் இருந்து அகற்றப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி குஜராத்தி இணைய தளமும், செய்தித் தொகுப்பும் இந்த முரண்பாடுகளையும், இருமைகளையும் கண்டடைந்து, புரிந்துகொண்டு தமது நுட்பமான செய்திகள் மூலமும் பொறுப்புள்ள இதழியல் மூலமும் அவற்றை வெளிக்கொண்டுவரும்.

சொல்லப்படாத கதைகளையும், நெஞ்சைக் கவரும் விவரிப்புகளையும், பிளவுபட்ட சமூகங்கள், இனங்கள், பாலின பேதங்கள், கருத்தியல் ஆணைகள், அரசியல் குழப்பங்கள், திணிக்கப்பட்ட அற நெறிகள் ஆகியவை குறித்த செய்திகளையும் உலகம் முழுவதிலும் இருந்து பிபிசி குஜராத்தி அளிக்கும்.

இனி இது உங்கள் உலகத்துக்கான சாளரம்.

இந்த பிபிசி குஜராத்தி செய்தித் தொகுப்பில் உலக அளவிலும் இந்திய அளவிலும் பிபிசி தயாரிக்கும் செய்திகள் இடம் பெறும். புதிய செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம், உடல் நலம், கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பலதரப்பட்ட செய்திகள் வெளியாகும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் குஜராத்தி மொழியையும் சேர்த்து நான்கு இந்திய மொழிகளில் பிபிசி செய்தி இணைய தளங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் 9 இந்திய மொழிகளில் பிபிசி சேவை அளிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் தலைக்கு எப்படி பேன் வருகிறது தெரியுமா? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :