பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு

படத்தின் காப்புரிமை TWITTER

சர்வதேச யோகாசன போட்டியில் பிரிட்டனின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற சிறுவன், சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம், கனடாவில் நடந்த உலக மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பிரிட்டன் சார்பில் யோகாசன போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற 8 வயது சிறுவன் ஈஸ்வர் சர்மா, பர்மிங்ஹாம் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில், இளம் சாதனையாளர் பிரிவில் நடப்பாண்டின் சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - கியாஸ் மானிய திட்டத்தில் மாற்றம்?

படத்தின் காப்புரிமை Getty Images

கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக 'சமையல் மானியம்' என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.), இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். எனவே, அனைத்து தரப்பினரும் கியாஸ் மானியம் பெறும் வகையில் பல்வேறு வகை எரிபொருளுக்கும் மானியம் வழங்கும் இந்த திட்டம் 'தேசிய எரிபொருள் கொள்கை 2030'ல் இணைக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - அனுமதி பெற்றால்தான் வாட்ஸ்அப் குழுக்களை தொடங்க முடியும்

படத்தின் காப்புரிமை Getty Images

வாட்ஸ் அப் குரூப்களை அரசிடம் பதிவு செய்த பின்தான் நடத்தவும், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் வேண்டுமெனவும், இல்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் குரூப்கள் வைத்திருக்கும் அட்மின்கள், தங்களின் வசிப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், தொலைபேசி எண், உறுப்பினர்கள் எண்ணிக்கை, செல்போன் எண் ஆகியவற்றை போலீஸ் நிலையத்தில் அளிக்க வேண்டும் என்றும் அதன்பின் போலீஸார் அளிக்கும் சான்றிதழை பெற்றபின் வாட்ஸ்அப் குழுக்களை தொடரலாம் என்று அம்மாநில காவல் ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - சென்னையின் நிலத்தடி மட்டம் ஒரு மீட்டர் குறைவு

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தாண்டு கோடைகால மழை பொய்த்துப் போனதால் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் ஒரு மீட்டர் வரை குறைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, இதே காலகட்டத்தில் கடந்தாண்டின்போது இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டத்தைவிட, ஒரு மீட்டர் அளவுக்கு சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் அளிக்கும் பிரதான ஏரிகளின் நீர்மட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைவான அளவில் உள்ளதால், நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்படும் சூழ்நிலை நிலவுவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :