சென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - சென்னையில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் 16 பேர் வன்புணர்வு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் சுமார் 350 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், அங்கு 'லிப்ட்'டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை வன்புணர்வு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை

பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களது பிள்ளைகளால் உரிய கவனிப்பின்றி அவதிப்படும் முதியோர்களுக்காக தமிழக அரசு புதிய சட்டத்தை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிரமத்திற்குள்ளான முதியோர் மாவட்ட வருவாய் அலுவர்களிடம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - இலங்கை அணியின் கேப்டனுக்கு ஐசிசி தண்டனை விதிப்பு

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான விசாரணையில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிகளின்படி கடும் தண்டனை விதித்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சமீபத்தில் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்தபோது, செயின்ட் லூசியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் குற்றம் சாட்டி, பந்தை மாற்றினார்கள். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பிறகு, சந்திமால், அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்து ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் சிக்கிய 100 கோடி பணம்; 90 கிலோ தங்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை பெற்று பணி செய்துவரும் எஸ்பிகே நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 100 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் சாலைப்பணிகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் வராத பணம், நகை, மற்ற சொத்துகளை மதிப்பீடு செய்வதற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :