'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?: அலசல் கட்டுரை-1

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தலை நடத்த விரும்பும் மத்திய அரசு இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், இது கூடுதல் செலவுபிடிக்கும் காரியம் என்பதோடு, வேறு பல குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். பல அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கின்றன.

இத்திட்டத்தின் வரலாறு, நன்மை, தீமைகள், பல தரப்பின் கருத்துகளைக் குறித்து அலசி இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரைத் தொடராக வெளியிடுகிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் பாகம் இது. இதில், இத்திட்டத்தின் பின்னணி, வழிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் யோசனை என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு விவகாரம். 1983ல் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது முதல் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தபோதே, இந்த விவகாரம் அதில் விவாதிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டின் சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால், அதைத்தாண்டி இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போதைய மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமும் இந்திய சட்ட ஆணையம் கருத்துக்களைக் கேட்டுவருகிறது. இம்மாத துவக்கத்தில் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்திடம் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் தாக்கல்செய்துள்ளன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளில் சிரோண்மனி அகாலி தளம், அ.தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம்., ஃபார்வர்ட் ப்ளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதனை எதிர்த்திருக்கின்றன.

'ஒரே நேரத்தில் தேர்தல்' என்பது புதிய யோசனையா?

இந்தியாவில் 1967ஆம் ஆண்டுவரையில் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் (கேரளா விதிவிலக்கு) ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், 1967, 1968ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதாலும் 1970ல் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும் தேர்தல்கள் மாநிலங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாறிமாறி நடைபெற ஆரம்பித்தன.

இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் முழு காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. ஐந்தாவது மக்களவையின் காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு, எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவைகள் முழு பதவிக் காலமும் நீடித்தன. ஆறு, ஏழு, ஒன்பது, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்றாவது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நோக்கம் முழுக்கவுமே குலைந்துபோனது.

தற்போது இந்தியாவில், ஒரு சில ஆண்டுகளைத் தவிர, பிற ஆண்டுகளில் எல்லாம் 5-7 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கின்றன. 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பருக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2015ல் தில்லி, பிஹார் மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2016ல் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதைத் தவிர்த்து, உள்ளூராட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்களைக் கணக்கில் கொண்டால் ஒரே வருடத்தில் இந்தியாவில் பல முறை தேர்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு சொல்லப்படும் காரணம் என்ன?

எப்போதெல்லாம் தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பாதல், வளர்ச்சி, நிர்வாகப் பணிகளை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லையென மத்திய அரசு கருதுகிறது.

தவிர, இந்தத் தேர்தல்களை நடத்த அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பெரும் பணம் செலவாகிறது. தேர்தல்கள் தனித்தனியாக நடக்கும்போது மக்களவைத் தேர்தல்களுக்கான முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்கிறது (ஆனால், பாதுகாப்புச் செலவுகளை மாநில அரசுகள்தான் செய்கின்றன). மாநிலங்களுக்கான தேர்தல் செலவை, அந்தந்த மாநிலங்கள் செய்கின்றன. தேர்தலை ஒன்றாக நடத்தினால், செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்கிறது மத்திய அரசு.

சமீப ஆண்டுகளாக தேர்தலை நடத்தும் செலவுகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. 2009ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1,115 கோடி ரூபாய் செலவானது. ஆனால், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ரூ. 3,870 கோடி செலவாகியுள்ளதாக நிதி ஆயோகின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசுகள் இந்தத் தேர்தலை நடத்த செய்த செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களுக்குத் தனித்தனியாக செலவழிக்கின்றன. ஆகவே இந்தத் தேர்தல்களுக்குச் செலவழிக்க, பெருந்தொகையை அவை ஊழல் செய்து சேர்ப்பதாக நிதி ஆயோகின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

தற்போதைய சூழலில் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால், ஒட்டுமொத்தமாக 4,500 கோடி ரூபாய் செலவாகுமென இந்தியத் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

தவிர, ஒவ்வொரு தேர்தலுக்கும் பெருமளவில் மனித சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. 16வது மக்களவைக்கான தேர்தலில் சுமார் 1 கோடி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்புப் படையினரைப் பொருத்தவரை, இந்தியாவில் எங்காவது அவ்வப்போது தேர்தல் நடந்துகொண்டேயிருப்பதால், வருடம் முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு பகுதியினர் தேர்தல் பணியில் இருந்துகொண்டேயிருக்கின்றனர்.

தவிர, வேறு சில சம்பவங்களும் தேர்தலையொட்டி நடக்கின்றன. தேர்தல் பிரச்சாரங்களையொட்டி எழுப்பப்படும் சத்தம், மாசுபாடு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. தவிர, தேர்தலையொட்டி ஜாதி, மத ரீதியான உணர்வுகளும் அரசியல் கட்சிகளால் உசுப்பப்படுகின்றன.

கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடக்காமல் கழிந்ததேயில்லை என்கிறது நிதி ஆயோக்.

ஆனால், இந்த வாதத்தைப் பலர் ஏற்பதாக இல்லை. "ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என்று முடிவுசெய்துவிட்டால், அதற்கான செலவைச் செய்துதான் ஆகவேண்டும். தேர்தலே நடத்தவில்லையென்றால், செலவே இருக்காதே. அதற்காக அப்படி ஒரு யோசனையைச் சொல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் என்ன?

தற்போது இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளூராட்சி அமைப்புகள் என மூன்று மட்டங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால், உள்ளூராட்சி அமைப்புத் தேர்தல்களை மாநிலங்கள்தான் நடத்துகின்றன என்பதாலும் உள்ளூராட்சி அமைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருப்பதாலும் 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற திட்டத்திற்குள் உள்ளூராட்சி அமைப்புகள் கொண்டுவரப்படவில்லை.

ஆகவே, . "ஒரே நேரத்தில் தேர்தல்" முறையின் மூலம், ஒரு வாக்காளர் ஒரே நாளில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினரையும் சட்டமன்ற உறுப்பினரையும் தேர்வுசெய்வார். தமிழகத்தில் இதற்கு முன்பாக கடந்த 1996ஆம் ஆண்டில் இப்படி ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதேபோல, ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு ஒரே நாளில் நடக்கும் என்றும் அர்த்தமல்ல. அவை இப்போது நடப்பதைப் போல பல கட்டங்களாகவே நடத்தப்படும்.

இந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பாகம்: 'ஒரே நேரத்தில் தேர்தல்' வந்தால் என்ன கூத்தெல்லாம் நடக்கும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :