'ஒரே நேரத்தில் தேர்தல்' வந்தால் என்ன கூத்தெல்லாம் நடக்கும்?: அலசல் கட்டுரை-2

நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்? படத்தின் காப்புரிமை Getty Images

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தின் கீழ் முன்மொழியப்படும் திட்டம் குறித்தும், அதன் தேவை, பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் விவாதித்தோம். இந்த திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், இதனை ஏன் அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன என்பது குறித்தும், இந்த இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.

'ஒரே நேரத்தில் தேர்தல்' முறையில் உருவாகக்கூடிய பல சிக்கல்கள் குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளன.

தேசியக் கட்சிகளுக்கு சாதகமா?

இந்த ஒரே நேரத்தில் தேர்தல் முறையில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையாக பிராந்தியக் கட்சிகள் சுட்டிக்காட்டுவது, இம்மாதிரி தேர்தல் நடத்தப்படும்போது ஒரு வாக்காளர் தேசியப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்பதைத்தான்.

1999, 2004, 2009, 2019 ஆகிய நான்கு மக்களவைத் தேர்தல்களோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களின் முடிவுகளை ஆராய்ந்தபோது, அங்குள்ள வாக்காளர்களில் 77 சதவீதம் பேர், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். தனித்தனியாக நடத்தும்போது இந்த விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இது பிராந்தியக் கட்சிகளை வெகுவாக அச்சுறுத்துகிறது.

அதேபோல, முதல்முறையாக இந்தத் தேர்தலை நடத்தும்போது, வெவ்வேறு ஆண்டுகளில் நிறைவடையக்கூடிய பதவிக்காலங்களைக் கொண்ட சட்டமன்றங்களையும் நாடாளுமன்றங்களையும் ஒன்றாக இணைத்து தேர்தலை நடத்துவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சில மாநில சட்டமன்றங்களை நீட்டித்தும், சில மாநில சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைத்தும் ஒன்றாக நடத்திவிட முடியுமா? தேர்தல் நடத்திய பிறகு நாடாளுமன்றத்திலோ, சில மாநில சட்டமன்றங்களிலோ யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

தமிழக அரசை முன்கூட்டியே கலைக்கவேண்டுமா?

தவிர, 2019ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தலை அமல்படுத்த வேண்டுமென்றால், அசாம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே கலைக்கப்பட வேண்டியிருக்கும். சில மாநிலங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டியிருக்கும்.

ஆனால், இதில் மற்றொரு பிரச்சனை இருக்கிறது. ஒரே மாதிரி தேர்தல் நடந்தால் மட்டும் போதுமா? நடுவில் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ ஆட்சி கவிழாதா? புதிதாக அரசமைக்க முடியாமல் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படாதா? என்னதான், ஒரு நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் 1967க்குப் பிறகு ஏற்பட்ட சூழல் வெகு விரைவிலேயே ஏற்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது கடினம்

இதற்கு சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருபவர்கள், வேறொருவரை பிரதமராக முன்னிறுத்தி, நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.

தவிர்க்கவே முடியாத சூழலில் மத்திய அரசு கவிழுமானால், ஐந்தாண்டுகளில் மீதமிருப்பது குறுகிய காலமாக இருந்தால், அந்தக் குறுகிய காலத்திற்கு அமைச்சர்களாக சிலரை நியமித்து, குடியரசுத் தலைவரே நிர்வாகத்தைக் கவனிக்கலாம். நீண்ட காலமாக இருந்தால் மத்திய அரசை மட்டும் தேர்வுசெய்ய ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அந்த நாடாளுமன்றம், மீதமிருக்கும் காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். பிறகு, பிற மாநில சட்டமன்றங்களுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாநில சட்டமன்றங்களுக்கும் இதேபோல செய்யலாம். தனித் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இந்த இடைத்தேர்தல்களை நடத்திவிட வேண்டும்.

இப்படிச் சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க, ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதே நாடாளுமன்றமும் சட்டமன்றமுமே நீடிக்கும் என்ற வகையில் ஒரு அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். காரணம் இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றங்களுக்கோ, சட்டமன்றங்களுக்கோ நிலையான கால அளவைக் கொடுக்கவில்லை. அவை ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கலாமே தவிர, அதற்கு முன்பாக கலைக்கப்படலாம், அல்லது கலையலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இவையெல்லாம் மிகப் பெரிய சிக்கல்கள். இப்படி நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் நிலையான கால அளவை (Fixed Term) கொண்டுவருவதன் மூலம், அதிபர் முறைக்கு நாட்டை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்துவைக்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில்தான் இதுபோன்ற நிலையான கால அளவு கொண்ட அமைப்புகள் உண்டு. நம்முடைய அரசியல் சாஸனம் இதற்கு முற்றிலும் நேர் எதிரானது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாறுபட்ட கருத்து

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய். குரேஷி இந்த விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அதாவது, ஒரு கட்சி நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலையோ அல்லது மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களையோ சந்திக்கும் வாய்ப்பு இருந்தால், அவை பொறுப்போடு நடந்துகொள்ளும் என்கிறார் அவர். மேலும் தேர்தல்களின் மூலம், அடிமட்ட அளவில் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன; அவை பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமைகின்றன என்கிறார் அவர்.

ஆனால், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான கோபால்சாமி இந்தக் கருத்திலிருந்து மாறுபடுகிறார்.

"அடிக்கடி தேர்தல் நடத்துவதன் மூலம் பல நாட்கள் வீணாகின்றன. நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். இடையில் காலியாகும் தொகுதிகள் அனைத்துக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடைத் தேர்தல் நடத்தலாம். பல நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையெல்லாம்கூட சேர்த்து நடத்துகிறார்கள்" என பிபிசியிடம் கூறினார் கோபால்சாமி.

அதிமுக என்ன நினைக்கிறது?

இம்மாதத் துவக்கத்தில் 'ஒரே நேரத்தில் தேர்தல்' குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்ட ஆணையத்தால் நடத்தப்பட்டபோது, அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், 'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறந்ததுதான். ஆனால், அப்படிச் செய்வதாக இருந்தால் அதனை 2024ல்தான் நடத்த வேண்டும்; அதற்கு முன்பாக நடத்தக்கூடாது' என்று குறிப்பிட்டார்.

இதைப் போன்ற நிலைப்பாட்டையே 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்தார் என்கிறார் ரவிக்குமார். அவர் அப்போது இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்குக் காரணம், 2016ல் தாம் திரும்பவும் ஆட்சிக்கு வருவோம் எனக் கருதவில்லை. அதனால், தி.மு.க. ஆட்சிக்கு வரும்பட்சத்தில் 2019 ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பெயரில் அந்த ஆட்சி கலைக்கப்படும் என்பதற்காக அந்த சமயத்தில் அவர் ஆதரித்தார். அதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் இப்போதும் அ.தி.மு.க. எடுக்கிறது என்கிறார் ரவிக்குமார்.

திமுக கடுமையாக எதி்ப்பது ஏன்?

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைத் தி.மு.க. கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது தொடர்பாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், மேலே குறிப்பிடப்பட்ட பல சிக்கல்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது என்று கூறியிருக்கிறார்.

"ஒரு முறை தேர்வுசெய்யப்பட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காக, கட்சித் தாவல் தடைச் சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்படக்கூடும். இதை ஏற்கவே முடியாது. பிறகு, குதிரைபேரம் தொடர்ந்து நடக்கும்" என்கிறார் தி.மு.கவின் சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா.

இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கிறது என்றால், அப்படித்தான் நடக்கும். தேர்தல்கள் ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கின்றன. இந்தியாவைப் போல பல கட்சிகளை அனுமதிக்கும் ஜனநாயகத்தில் இவை தவிர்க்க முடியாதவை என்கிறார் சிவா. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முறையை நீட்டிக்கச் செய்வதற்காக கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் சிவா.

படத்தின் காப்புரிமை VIKRAMRAGHUVANSHI

உதாரணமாக, ஒரு அரசு கவிழ்ந்து இன்னொரு அரசைத் தேர்வுசெய்யும் சூழலில் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பினர்கள் அந்தக் கொறடா உத்தரவை ஏற்காமல் வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.

அரசியல் நிர்ணய அவை என்ன நினைத்தது?

''இந்திய அரசமைப்புச் சட்டத்தை அங்கீகரித்த அரசியல் நிர்ணய அவையில் இது தொடர்பான விவாதம் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றம், நிலையான கால அளவைக் கொண்டது. ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றம் ஸ்திரத்தன்மையைவிட பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசியல் அமைப்பு சட்ட அவையில் இதை விவாதித்தவர்கள், 'இரண்டும் இணைந்து இருந்தால் நல்லது. அப்படி இருப்பதில்லை. அதனால், பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்' என்று முடிவுசெய்தார்கள். இதை மாற்றக்கூடாது'' என்கிறார் ரவிக்குமார்.

தற்போதுள்ள முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் ஒரு ஆட்சியை மதிப்பிடுகிறார்கள். பிறகு, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் அந்த ஆட்சி மதிப்பிடப்படுகிறது.

பெரும்பான்மை உறுப்பினர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். நிலையான கால அளவு கொண்டுவந்துவிட்டால், ஐந்தாண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமெனாலும் செய்வார்கள் என்கிறார் ரவிக்குமார்.

தென்னாப்பிரிக்கா, ஸ்வீடல், பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை சட்ட ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.க. இதனை ஏற்கவில்லை. 'இந்த மூன்று நாடுகளின் மக்கள் தொகையை ஒன்றாகக் கூட்டினாலும் தமிழகத்தின் மக்கள்தொகையைவிட குறைவாக இருக்கும். ஆகவே, அந்த உதாரணங்கள் பொருந்தாது' என்கிறது தி.மு.க.

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் செலவாகும்

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தினால், முதன் முதலில் அப்படி நடத்தும் தேர்தலுக்கு கூடுதலாக 4,554 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனியாக வாக்குப் பதிவு எந்திரங்களும் சட்டமன்றத் தேர்தலுக்கு தனியாக வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட வேண்டும்.

இவற்றை எடுத்துச் செல்லும் செலவும் இருமடங்காகும். தவிர ஒவ்வொரு பதினைந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் புதிதாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு, சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகக்கூடும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தவிர, இப்படி தேர்தலை நடத்த முடிவுசெய்தால், 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை பெருமளவில் திருத்த வேண்டியிருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படையான பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவையெல்லாம் எளிதில் நடக்கக்கூடியவை அல்ல.

இதற்கிடையில் மற்றொரு யோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது, பாதி மாநிலங்களுக்கு ஒன்றாகத் தேர்தலை நடத்திவிட்டு, இரண்டரை ஆண்டுகள் கழித்து மீதமிருக்கும் மாநிலங்களுக்குத் தேர்தலை ஒன்றாக நடத்துவது என்பதுதான் அந்த யோசனை. ஆனால், அதிலும் இதே போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

முதல் பாகம்:'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: