“தண்டனையை விட குடும்பக் கல்வியால் கற்பிப்பதே தொலைநோக்கு சிந்தனை”

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

வயோதிகர்கள் கைவிடப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை போதுமா? இந்தப் பிரச்சினைக்கான சமூகக் காரணிகள் இன்னும் ஆழமானவையா? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இது தொடர்பாக, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

சக்தி சரவணன் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், இன்றைய பிள்ளைகளின் நல்ல வளர்ப்பே, நாளை நல்ல பெற்றோரை உருவாக்கும். கூட்டுக்குடும்பத்தின் இன்றியமையாமையை, தண்டனையின் வாயிலாக வலியுறுத்துவதை விடக் குடும்ப கல்வியின் மூலமாகக் கற்பிப்பதே தொலைநோக்கு சிந்தனை உடையதாக இருக்க முடியும். அன்பை வளர்க்கும் வழிகளே சிறந்தன, வற்புறுத்தும் வழிகள் வினையிலேயே முடியும் என்று எழுதியுள்ளார்.

சரோஜா பாலசுப்பிரமணியன் என்கிற நேயர், சட்டம் ஓரளவுக்குத்தான் தடுக்கும். இந்தப் பிரச்சனையின் வேர்கள் நம் குடும்பத்திலிருந்துதான் வளர்கின்றன. பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் பிள்ளைகள், நாளை அதையே பின்பற்றுவார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

நியாயமான கருத்துதான் என்று ஆமோதிக்கும் ராஜகனி என்கிற நேயர், சிறு வயதில் பாலூட்டி, சீராட்டி வளர்த்து, படிக்க வைத்து, பாதுகாப்பாக வளர்த்து, எல்லா காரியங்களையும் செய்யும் தாய் தந்தையரை கை விடுவது வேதனையான விஷயம் என்று கூறியுள்ளார்.

சுப்பு லெட்சுமி என்கிற நேயர், பிள்ளைகள் தன்னுடைய பெற்றோரைப் பார்த்துதான் வளர்கிறார்கள். இன்றைய வயோதிகர்களும் சுயநலமாக சிந்திக்கிறார்கள். நேற்றைய பிள்ளைகள் இன்றைய பெற்றோர்கள். இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள். அவர்கள் பார்த்து வளரும் முறைதான் காரணம் என்ற கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒருவன் தன் பிள்ளைகளுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அவன் செய்ய இயலாது என்று சொன்ன சில விஷயங்கள்தான் பிள்ளைகள் மனதில் ஆழப்பதிந்திருக்கும் என்ற கருத்தை செல்லப்பா ஈஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

துளசி ராமன் என்கிற நேயர், சமூக காரணிகளின் சீரழிவுக்கு இதை போன்றவைகளே ஆரம்பம். இந்த முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று கருத்தை பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :