அதிகரிக்கும் நீர் வரத்து: 120 அடியை எட்டுமா மேட்டூர் அணை?

தமிழக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கான நீர் ஆதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி நிறுத்தப்படும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடி நடைபெறும்.

கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டி தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் இந்த அணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நடப்பு ஆண்டிலும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கமுடியவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது.

தொடர்ந்து கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்டியதால் அணையின் 16 கண் மதகு பகுதியில் பொதுப்பணித்துறையினர் பூஜை செய்து காவிரியை வரவேற்றனர்.

அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை 1934ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது முதல் இதுவரை குறிப்பிட்ட காலமான ஜூன் 12ம் தேதி 15 முறையும், ஜூன் 12க்கு முன் 11 முறையும், ஜூன் 12க்கு பிறகு 58 ஆண்டுகளும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டோடு சேர்த்தால் 59 முறை தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதேபோல் நடப்பு ஆண்டோடு சேர்த்து மேட்டூர் அணை 64 முறை 100 அடியை எட்டியுள்ளது, 38 முறை அணை நிரம்பியுள்ளது.

கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் 19 டிஎம்சி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :